Sunday, March 11, 2007

நீலக்கடல் - அத்தியாயம் -3

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

சென்-மாலோவிலிருந்து சென்றோம் -ஒரு
சிங்காரப் போர்க்கப்பலொன்றில்
ஆங்கிலக் கால்வாய்க்காக -பிறகு
அங்கிருந்து பிரிஸ்டல் பயணம்
ஆங்கிலேயரை அழிப்பதற்காக (1)


'லெ பொந்திஷேரி ' என்றப் பிரெஞ்சு கப்பல். எப்போதும்போல பயணக் களைப்பை மறந்து கடற்பாடலை வட்டமாகக் கைகோர்த்து ஆடியபடி பாடிக்களிக்கின்ற மத்தலோக்கள்(கப்பல் ஊழியர்கள்).. மேலே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள நீலவானம். வானச்
சீலையில் வகை வகையாக ஓவிய உயிர்களை உலவவிடும் வெண்பஞ்சு மேகங்கள்; அவற்றிற்கு மெருகூட்டும் சூரியன். கீழே அதற்கிணையாக அமைதியாகக் கிடக்கும் நீலக்கடல். வானம் கடலிலா, கடல் வானத்திலா எனவறிந்துணர முடியாத வகையில், இரண்டிற்குமிடையே மயக்க உறவு. மேற்குக் காற்றில் எழுந்து அடங்கும் அலைகள். தெளிந்த நீருக்குள் கம்பீரமாக, பெரிய கண்களுடன் நீந்திச் செல்லும் சுறா, கும்பல் கும்பலாய்ப் பயணிக்கும் வெள்ளி நிற வெளவால் மீன்கள், தன் இனந்தேடி அலையும் விளைமீன்கள், வெள்ளியுடல் பாரை
மீன்கள். அவற்றைத் தொடர்ந்து மேலே பறந்து பயணிக்கும் கடல் நாரைகள். எப்போதேனுமெழுந்து அசுரத்தனமாக சுவாசித்து மீண்டும் நீரில் மூழ்கி மறையும் திமிங்கிலங்கள். ஈரக்காற்றுடன், உப்போடு கூடிய முடைநாற்றம். யுகங்கள் தோறும் வரலாறு படைக்கும் இந்தியப் பெருங்கடல்.
'லெ பொந்திஷேரி ' ஒரு கராவெல் ரக வர்த்தகக் கப்பல். நாற்பது மீட்டர் நீளமும் பன்னிரண்டு மீட்டர் அகலமும், நிறைய பாய்மரங்கள் கொண்ட, 1200 டொன்னொ ( ஒரு டொன்னோ என்பது 2,83M3) கொள்ளளவும் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்சு கிழகிந்தியக்
கம்பெனியின் பிரத்தியேகக் கப்பல். கப்பலின் தலைவன் வழக்கம்போல 'தெலாமர் ' (.Delamare). பதினைந்து நாட்களுக்கு முன்னதாக, போர் லூயி துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருந்தது. இந்திய வியாபரிகளுக்கென சுத்தமான தங்கமும் வெள்ளியும் போக, புதுச்சேரி கவர்னருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், இதர பிரெஞ்சு இந்தியக் கம்பெனியின் ஊழியர்களுக்குமாக இரண்டாயிரம் பொர்தோ சிவப்பு ஒயின் போத்தல்கள், சாராயம், கோதுமை மாவு, பதப்படுத்தபட்ட பாற்கட்டி, பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, இரும்புத் தகடுகள்-கட்டிகள், துப்பாக்கிகள், அவைகளுக்கான ரவைகளெனப் பயணித்துக் கொண்டிருந்தன. அவற்றை கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டி கப்பலின் மத்தலோக்கள் (Matelots), முன்பும் பின்பும் பீரங்கிகளை ஒட்டி மிகக் கவனத்தோடு நின்றிருக்க, பின்புறமும், வலமும் இடமுமாக இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்காக பீரங்கிகளுடன் கொர்சேர்கள்*(Corsaire).2
பிரான்சின் சேன் மாலோ(Saint -Malo) பகுதியைச் சேர்ந்த தரகர்கள், ஸ்பெயின் காலனி நாடுகளிடமிருந்து பெறப்பட்ட இருபத்து நான்கு காரட் சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளைச் சுமந்து சென்று இந்தியாவில் இறக்கிவிட்டு அதற்குப் பதிலாக வாசனைத்திரவியங்களையும், பட்டுத் துணிகளையும், கொழுத்த இலாபத்துக்குப் பெற்றுக் கப்பல்களை நிரப்பிவருவது வழக்கம். சில சமயங்களில் பிரான்சின் செனான் மற்றும் அமியன் பகுதியிலிருந்து அழகிய வேலைப்பாடுள்ள கம்பளி விரிப்புகளும், பிரான்சின் லாங்குடோக் பகுதியிலிருந்து சற்றுக்
கனமான கம்பளிகளும், மிக மெல்லிய துணிகளும், இந்தியப் நவாப்களுக்கும், சுல்தான்களுக்கும், வசதிவாய்ந்த உயர்ஜாதி இந்துக்களுக்குமெனத் தங்கச் சரிகைகளும், பவழ வேலைப்பாடுகளும் கொண்டு வருவதுண்டு. ஆனால் இவற்றிற்கான சந்தைத் தேவை குறைவாகவே இருந்தது. இந்தத் துறையில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேயரோடு போட்டியிடும் நிலையில் பிரெஞ்சு வணிகர்களில்லை.
பிரான்சுக்கும் இந்தியாவுக்குமான கப்பல் போக்குவரத்தென்பது ஏப்ரலிலிருந்து அக்டோபர்வரை வீசும் பருவக்காற்றினைப் பொறுத்தது.
காத்திருந்து இந்தியப் பெருங்கடலில் வீசுகின்ற தென்மேற்குப் பருவக் காற்றைத் தங்கள் பயணத்திற்கு உபயோகிக்க, இப்பாய்மர வணிகக் கப்பல்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இதனை உணர்ந்து பிரான்சிலிருந்து கப்பல்கள் பெரும்பாலும் டிசம்பரிலிருந்து -மார்ச்சுக்குள் புறப்பட்டுவிடும். கொண்டு செல்லும் பொருட்களுக்கு நல்ல விலை வேண்டுமென்றால் இதர ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு முன்னதாக இந்தியாவில் இவர்கள் வசமிருக்கும் புதுச்சேரியிலும், பின்னர் வங்காளத்தில் சந்திரநாகூரிலும் பொருட்களை இறக்கியாகவேண்டும்.
பிரான்சின் வடமேற்கிலுள்ள லொரியான்(Lorient) துறைமுகத்தில் கடுங்குளிர்காலத்தில், கப்பற்போக்குவரத்து என்பது மிகவும் கடுமையாகவிருக்கும் எனக் கருதப்படும் நேரத்தில் நேரத்தில் வணிகக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் நிதானித்துப் பாய்விரித்துப் பயணத்தைத் தொடங்கிவிடும். கஸ்கோஜ்ன் வளைகுடாவில் (Le golfe de Gascogne) ஒரு மாதம் மெள்ள ஊர்ந்து ஆப்ரிக்காவின் 'கொரே ' (Goree)துறைமுகத்தில் சில நாட்கள் ஓய்வு. பின்னர் பூமத்தியரேகையைக் கடக்கும்வரை போதிய காற்றில்லாமல் பயணம் மிகவும் சிக்கலாகிவிடும். ஆப்ரிக்காவின் நன்நம்பிக்கை முனை (Le Cap) கடக்கப்படுவதற்கு இந்தவகையில் நான்குமாதங்கள் பிடித்திருக்கும். இந்த நேரத்தில் பிரெஞ்சுத் தீவு (Ile de France) நான்குமாதப் பயணத்திற்குப் பிறகு கப்பல் தலைவனுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சொர்க்க பூமி. ஒரு மாதத்திற்கு குறையாமல் ஓய்வு. தவிர டச்சுகாரர்கள் கி.பி 1710ல்இந்தத் தீவினை விட்டுப்போன பிறகு 1715ல் கியோம் துய்ஃப்ரெஸ்ன் (Guillaume Dufresne) என்ற கப்பற் தலைவன் பிரெஞ்சு அரசின்பேரில் கைப்பற்றியபிறகு இவர்களுக்கு இஇத்தீவு மிகவும் வசதியாயிற்று. இத்தீவிலிருந்து மடகாஸ்கர் நோக்கி வடமேற்காகப் பயணித்து அங்கிருந்து வடகிழக்காக பயணிக்கவேண்டும். இந்தியாவை நெருங்கும்போது மாலைதீவுக்கும் இலட்சத்தீவுகளுக்குமிடையில் பயணித்து மலபார் கடற்கரையை அடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி குமரிமுனையை நோக்கி நகர்ந்து இலங்கைக்குத் தெற்காக கடந்து கிழக்குக் கடற்கரையில் வடக்கு நோக்கிச் சென்று இறுதியாக புதுச்சேரியில் நங்கூரமிடும்.
இன்றைக்குக் காற்றுச் சாதகாமாக இருந்தது. கப்பல் கப்பித்தேன் தெலாமர் 'லெ பொந்திஷேரி ' கப்பலின் அனைத்துப் பாய்களையும் விரித்திருந்தான். மணிக்குப் பத்துக் கடல்மைல் வேகத்தில் கப்பல் போய்கொண்டிருந்த சந்ததோஷத்தில் கபினுக்குத் திரும்பினான். அவனது கபின் மூன்று டொன்னோ அளவுடையது. அவனுடைய அதிகபட்ச உடைமைகள் பெரும்பாலான கப்பலூழியர்களைப் போன்றே கூடுதலாக ஒரு ஆடை, ஜெபித்தற் பொருட்டு ஒரு பைபிள், பிரத்தியேகச் சலுகையில் சாராயம், இறைச்சி வற்றல்கள் மற்றும் சொஸ்ஸீஸ்கள். கபினுக்குள் நுழைந்தவன் ஓரு சாராயப் போத்திலையும், இரண்டு கண்ணாடிக் குப்பிகளையும் எடுத்துகொண்டு, மகோகனி மரப்படிகளில் இறங்கி, அருகில் இருந்த மற்றொரு கபினுக்குள் நுழைந்தான். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் உயர்மட்ட மக்களுக்கான பிரத்தியேக அறை. கபினின் கதவைத் மெல்லத் தட்டிவிட்டு நுழைந்தான். சிறியகபினென்றாலும், வேலைபாட்டுடன் கூடிய கருங்காலி மரத்தினாலான மேசையும் நாற்காலியும். நாற்காலியின் இருக்கையிற் தோல்தைத்திருந்தது. அழகான மகோகனி மரத்தினாலான கட்டில், மத்தியில் இழுப்பறைகொண்ட பிரான்சின் ரென்(Rennes) பகுதியைச் சேர்ந்த ஒரு பண்டப் பேழை. அந்த இளைஞன் மேசையில் உட்கார்ந்துகொண்டு, மையைத் தொட்டு இறகினால் எழுதிக் கொண்டிருந்தான்.
நல்ல திடகாத்திரமான வாலிபன். நீண்டகால்களும் அதற்கிணையாக உறுதியான தோள்களுடன் கூடிய நீண்ட கைகள். பரந்த மார்பு. பெண்ணின் சாயல்கொண்ட வட்ட முகம், எடுப்பான மூக்கு, உதட்டின்மேல் அரும்பிநிற்கும் மெல்லிய மீசை.. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'மன்னிக்க வேண்டும் பெர்னார். உனக்கு நான் இடையூறு செய்கின்றேனோ ?
'அப்படியெல்லாம் இல்லை. கப்பித்தேன். உட்காருங்கள். காற்றின் நிலை சீராகியுள்ளதா ?
'அந்த மகிழ்ச்சியிற்தான் உதவி கப்பித்தேனிடம் கப்பலை நடத்துமாறு பணித்துவிட்டு, நான் கீழே இறங்கிவந்துள்ளேன். காற்றின் நிலை இவ்வாறே நீடிக்குமாயின் அடுத்த கிழமை புதுச்சேரியில் இருக்கலாம். கிழக்குக் கடற்கரையில் இந்திய விலைமகளிருடன் சாராயம் குடித்து மகிழலாம். '
'கப்பித்தேன்; உனக்கு எப்போதும் மதுவும் மங்கையும் பற்றிய கவலைதானா ? பிரெஞ்சுத் தீவில் கிறேயொல் பெண்களை அனுபவித்தது போதாதா ? '
' நீயும் இந்தியாவில் இருந்து வந்தவன்தானே ? அங்குள்ள பண்டிதர்களைக்கேள். பெண்களின் வகைகளையும் அவர்கள் தரும் இன்பங்களையும், அவர்களை அனுபவிக்கும் நுட்பங்களையும் சொல்லித் தருவார்கள். இனிமேலாகிலும் தெரிந்துகொள். தெரியாதென்றால் என்னுடன் வா நான் அழைத்துப் போகிறேன். '
' கப்பித்தேன் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்.. இது கொஞ்சம் ரகசியமான காரியம். இயலுமா ? '
' நான் ஏதோ பிரெஞ்சுத் தீவுக்குக் கைவினைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல வேண்டி கவர்னர் லாபூர்தொனேயின் கடிதத்துடன் பிரெஞ்சு நிர்வாகத்தை விண்ணபிக்க வந்துள்ளதாகத்தானே நினைத்தேன் '.
'ஆம். நான் மறுக்கவில்லை. அது தவிர வேறு சில காரியங்களும் எனக்கு ஆகவேண்டியிருக்கிறது
' நீயும் புதுச்சேரியில் இருந்தவனாயிற்றே. கவர்னருக்கும் அவரது மதாமுக்கும் வேண்டியனாயிற்றே, உன்னால் முடியாததா ? '
' உண்மை. ஆனால் இது கவர்னருக்குத் தெரியாமலும், அவர் பக்கத்திலிருக்கும், துபாஷ்களுக்கும், குறிப்பாக உயர்ஜாதி இந்துக்களுக்கும் தெரியாமல் செய்யப்படவேண்டிய காரியம். '
'ஜாக்கிரதை. எதுவென்றாலும் யோசித்துச் செய். ஜாதி இந்துக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உள் விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது. நம்முடைய கலாச்சாரத்துக்கு முற்றிலும் முரண்பட்டவர்கள். எதையாவது செய்துவிட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதே! '
அதற்கடுத்த ஒரு கிழமையில் 'லெ போந்திஷேரி ' ' கடற்கரைக்கு மூன்றுகல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு காத்திருக்க, சரக்குகளை இறக்குவதற்காக குவர்னர் நிர்வாக உத்தரவின் பேரில் வந்திருந்த ஷெலாங்குகள் (பெரியபடகுகள்) சூழ்ந்து கொண்டன.
கப்பித்தென் தலாமேரும் பிரான்சுவாவும் ஒரு பிரத்தியேகப் படகில் ஏறி கடற்கரை அடைந்தனர். கெளபீனத்துடன் நின்றுகொண்டிருந்த மீனவப் பிள்ளைகளை புதுச்சேரி அரசாங்கச் சேவகர்களிருவர் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களை வறவேற்பதற்காக குவர்னர்ருக்கு மிகவும் வேண்டிய இரண்டாம் மட்ட அதிகாரி பிரான்சுவா ரெமி வந்திருந்தான்.. நான்கு ஆண்டுகளுக்குமுன் பெர்னார் புதுச்சேரியில் இருந்தகாலத்தில் இருவரும் பிரச்சினைப்பட்டு குவர்னர் தலையிட வேண்டியிருந்தது. பிரான்சுவாத் தன்னைப் புதுச்சேரி உருவாகக் காரணமாகவிருந்த பிரான்சுவா மர்த்தேனின் உறவினன், எனச் சொல்லிக் கொள்பவன். கப்பல் மத்தலோக்களை எதிர்பார்த்து, வெற்றிலையால் சிவந்த அதரங்களும், மைவழியும் கண்களுமாக, கடற்காற்றின் அலைக்கழிப்பில் விலகும் சேலையில், தளர்ந்த தனங்களுடன் காத்திருக்கும் விலைபோகா விலைமாதர்கள், அவர்களுக்குத் துணையாக வெற்றிலைச் செல்லத்துடன் இரண்டும் கெட்டான் மனிதர்களெனப் புதுச்சேரி கடற்கரை. கப்பித்தேன் தெலாமரும், பெர்னாரும் பிரான்சுவாவை நோக்கிச் சென்றார்கள். கை கொடுத்து வரவேற்ற பிரான்சுவா இருவரையும் பிரெஞ்சு முறைப்படி தழுவி வரவேற்றான். கப்பித்தேன் தன்னிடமிருந்த பயணம் மற்றும் கப்பற் தொடர்பான ஆவனங்களைப்
பிரான்சுவாவிடம் காண்பிக்க, அவன் அதனை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.
'கப்பித்தேன் உங்களுக்கு கோர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே வழக்கம்போல ஏற்பாடு செய்துள்ளது. குளித்துவிட்டு ஓய்வெடுங்கள். இரவு எழுமணிக்கெல்லாம் டினே( இரவு சாப்பாடு) தயாராகிவிடும். கோழியுடன், ஆற்று மீன்களும் ரொட்டியும், நீங்கள் விரும்பிக் குடிக்கும் உள்ளூர்ச் சாராயமும் உள்ளன. '
' பெண்கள் ? '
'அவ்ர்கள் இல்லாமலா ? எனக் கண்ணடித்த பிரான்சுவா, பெர்னாரை பார்த்தான். '
'மன்னிக்கவும் பெர்னார். உனக்கும் சகல ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன. நீ ஏற்கனவே தங்கியிருந்த வீட்டையே ஒழுங்கு செய்துள்ளோம்.. நாளை காலை குவெர்னரைச் சந்திக்கலாம். ' என்றவன், அங்கிருந்த இந்தியச் சேவகனைப் பார்த்தான். அதனை எதிர்பார்த்ததுபோல அவன் இவர்கள் அருலில்வந்து பயபக்தியுடன் நின்றான் '
' என்ன சொன்னதெல்லாம் ஞாபகத்தில்ருக்கிறதா ? ஐயா புதுச்சேரியில் தங்கும்வரை அவரது அனைத்து நலன்களையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். புரிந்ததா '
'உத்தரவு ஐயா! ' என்றவன் பதிலில் விஷமமிருந்தது.


தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------
1.De Saint-Malo j 'avons parti
Sur une frளூgate bien jolie
Pour s 'en aller dedan La Manche
Dedam la Manche vers Bristol
Pour aller attaquer Les Anglais
2. பாதுகாப்புப் பணியைச் செய்யும் மரக்கலங்கள்;


nakrish2003@yahoo.fr

No comments: