Saturday, March 31, 2007

<> இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல்<>

நீலக்கடல் - நூலாய்வு.

மலேசிய எழுத்தாளர்
முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் மலேசியா,
பினாங்கு நகரைச் சேர்ந்தவர். மலேசிய அறிவியல்
பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தகவல் சாதனைத்
துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.
மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள்
அலுவலர். தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் மலேசியாவிலும் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்,
இலக்கியத் திறனாய்வாளர். அனைத்துலக நாடுகள்
பலவற்றில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச்
சமர்ப்பித்த பெருமைக்கும் உரியவர் இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.
2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.
******

Sunday, March 11, 2007

<>நீலக்கடலுக்கு தமிழக அரசின் பரிசு<>


நீலக்கடல்' நாவலுக்கு

தமிழக அரசின் பரிசு

நாகரத்தினம் கிருஷ்ணா






எனது நீலக்கடல் புதினம், தமிழக அரசின் (வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளில்)

சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றிருக்கிறது. இந்த

நேரத்தில் அந்த நாவலுக்கான முன்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
" இப்படைப்பின் வெற்றிக்கு, மூவர் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இப்படைப்பைத் தொடராக திண்ணை இணைய இதழில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள். முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவு செய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும்.

2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின்னஞ்சல்கள்

3. என் படைப்புகளில் முதல்வாசகரும், எழுத்துப் பிழைகளை கூடியவரை குறைக்க உதவிய எனது இலங்கை நண்பர் மரியதாஸ், எனது அலுவற்பணிகளைக் குறைத்து எழுத்தில் அக்கறை கொள்ளவைக்கிற என் துணைவியார்.

இம்மூவர் அணியோடு படைப்புக்குறிய தகவல்களைப் பெற்றுத் தந்த காஞ்சிபுரம் குபரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன்; எனது தேடுதல் வேட்டைக்குத் துணபுரிந்த நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக என்னை நாவலொன்று எழுதவேண்டுமென்று அன்பு கட்டளையிட்ட, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவோ எழுதவோ அறியாதவராகவே மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரத்திற்கும் எனது நன்றிகள், கண்ணீருடன்."

என் பங்கிற்கும் தமிழிலக்கிய எல்லைக்கல்லைப் பிடுங்கி இரண்டு மில்லி மீட்டராவது தள்ளிநடவேண்டுமென்ற ஆசை. காலம் பதில் சொல்லும்." எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இது தவிர பரிசு பெற்றிருக்கும் இந்த நேரத்தில் வேறு சிலரையும் மறக்க முடியாமல் இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது
குறிப்பாக விகடனில் பிரசுரமான எனது சிறுகதை 'பார்த்திபேந்திரன் காதலி'யே(9-5-04) பின்னர் நீலக்கடலாக விரிவாக்கம் பெற்றது. விகடனில் பிரசுரமாகி தனிப்பட்டக் கவனம் பெற்றதால், அதனையே கருவாககொண்டு நாவலொன்று எழுதினேன். எனவே ஆனந்த விகடனுக்கும் எனது நன்றிகள்.

பிறகு திரு. சுஜாதா அவர்கள். நான் அவரது அபிமானி, ஏகலைவன், கட்டை விரலை கேட்கமாட்டாரென்கிற நம்பிக்கையில், நிறைய கடன் பட்டிருக்கிறேன்.

இது தவிர கீழ்க்கண்டவர்களும் எனது வெற்றிக்கு ஏதோவொரு வகையில் பொறுப்பு: திருவாளர்கள் அவ்வை நடராசன், கி. அ. சச்சிதானந்தன், பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், இரா.முருகன், சதாரா மாலதி, பதிவுகள் ஆசிரியர் கிரிதரன், சுதா இராமலிங்கம், அனைவருக்கும் நன்றிகள்.

மீண்டும் திண்ணை ஆசியருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்..
பணிவுடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
நீலக்கடல் வெளியீடு:
1.சந்தியா பதிப்பகம்
•பிளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57-53வது தெரு, அசோக் நகர்,
சென்னை -600 083
2.Any.Indian.comலும் கிடைக்கிறது.

நீலக்கடல் -அத்தியாயம் -1

<>நீலக்கடல்<>


நாகரத்தினம் கிருஷ்ணா


'........................ சாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்! நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன். இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு நின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே! ' -குயில் பாட்டு - பாரதியார்
------------------------------------------------------------------------------------------------
'நான் ' எங்கிருந்து வருகிறேன் ? 'நான் ' எதனை நோக்கிப் பயணிக்கிறேன். இந்த 'முதலுக்கும் ' 'முடிவுக்கும் ' இடையில் 'நான் ' யார் ? எத்தனை கல்பகாலத்திற்கு 'நான் '. விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான் ' லீலைகளின் பிரதானமா ?, பிரளயமற்றவனா ? முடிவென்பதில்லையா ? அனந்தசயனமற்ற உயிரா 'நான் '. ' பிறவிபற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ ' ' சுமந்து செல்கிறாய். உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்.. 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது. ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை. அசட்டுப்பிள்ளையே! உன் பாதைமுழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது ? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம். கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ ' அறிவாயாக.

-----------------------------------------------------------------------------------------------

பெர்னார்: மொழி, நாடு, இனம், மதமென, பிறப்பால் இந்திய மண்ணுக்கு முரண்பட்ட பிரெஞ்சுநாட்டு இளைஞன். ஏழுமணிக்கு எழுந்து, கெல்லக்ஸை விழுங்கியபின் பல் துலக்கி (சில நாட்களில் துலக்காமலும்), கண்ணாடி பார்த்து, லோஷன்களில் குளித்து, அணிந்த 'சூட் ' டைச் சரிபார்த்து, டையின் இரண்டாவது முடிச்சை லிஃப்டில் போட்டு, பாரீஸின் சுரங்கப் பாதை இரயிலான 'மெட்ரோ ' பிடித்து, பயணத்தில் 'லிபரேஷன் ' தினசரியில் மேய்ந்து, பகல் முழுவதும் பாரீஸின் மத்திய பகுதியில் உள்ள 'இந்தியவியல் மற்றும் தெற்கு ஆசியவியற்துறைக் கல்வி மையத்தில்(Le Centre d 'Etudes de l 'Inde et d 'Asie du Sud), ' பேராசிரியர் ழான்-பியர் குரோ வழிகாட்டுதலின்கீழ் தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழிலக்கியங்களின் மீதான ஆய்வுப் பணியில் மூழ்கிக்கிடந்தவன். சமகாலத் தமிழிலக்கியங்களோடு, சத்தம் போடாமல் சைவ சித்தாந்த ஆகமங்களிலும் அவன்காட்டும் அக்கறைகண்டு வியந்த பேராசிரியர், ஒரு நாள் ' பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் புதுச்சேரியிலுள்ள நமது மொழி ஆய்வு ஸ்தாபனத்திற்கு உன்னைப் போல் ஒருவன் தேவையாம், விருப்பமா ', எனக்கேட்க இவன் மறுப்பேதும் சொல்லவில்லை. வடகிழக்குப் பருவகாற்று தீவிரமடைந்து, சோழமண்டலக் கடற்கரையைப் பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், புதுச்சேரியில் வந்திறங்கினான்.

கடற்கரைக்கு அருகிலிருந்த மஞ்சளும் வெள்ளையுமாகவிருந்த அந்த சுண்ணாம்புக் காரைக் கட்டிடம் முதற்பார்வையிலேயே பிடித்துப்போனது. உள்ளே ஆயிரக்கணக்கில் ஓலைச் சுவடிகள். தேர்ந்த தமிழறிஞர்கள் அவற்றைக் கவனத்தோடு பிரித்துப் படித்து அதற்குப் பொருள் காண்கின்றார்கள், அவ்வாறு கண்டவற்றிற்கு உரை எழுதுகின்றார்கள். உரைகள் உடனுக்குடன் கணிணியில் உட்கார்ந்து கொள்கின்றன. அவன் மனதிலிருந்த கற்பனை இந்தியாவேறு, காணுகின்ற இந்தியா வேறு. தன் 'ஞான 'த்தில் இன்றைக்கும் இந்தியா இளைத்துபோகவில்லை என்கின்ற அவனது முதல் நாள் அனுமானம், நாட்கள் கூடக்கூட மேலும் வலுப்பட்டது. மொழி ஆய்வு ஸ்தாபனத்தின் இயக்குனர் எப்..கிரிமால் பாரீஸில் சமஸ்கிருதமும், புதுச்சேரியில் தமிழும் படித்துத் தேர்ந்து, இரண்டிலும் இருபது ஆண்டுகால ஆராய்ச்சியாளராக இருப்பதை அறிய இவனுக்கு உற்சாகம். கூடுதலாக அறிஞர் தெ.வி. கோபாலய்யர் போன்றவர்களின் உறுதுணை. போதாதற்கு புதுச்சேரியின் சிறிய கடற்கரையும், அருகிலிருந்த ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமும், கள்ள கபடமற்ற மக்களும், தென்னிந்திய உணவு முறையும் அவனை முற்றிலும் புதுச்சேரிவாசியாக மாற்றிவிட்டது.

இந்த ஓடும் நீரில்தான் பாசியாக சில கனவுகள். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கனவுகள். சந்தித்த மருத்துவர்கள் வேலைப் பளுவிலிருந்து விடுபட்டு மன உளைச்சலைக் குறைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார்கள். விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு வாரங்களுக்குக் 'கொடைக்கானலுக்கு சென்றுவந்தான். சீரடைந்தது உடல் மட்டுமே. மீண்டும் கனவுகள். அறிந்திராத மண், காற்று, ஆகாயம் அதில் அறிமுகமில்லாத மனிதர்கள், கேட்டிராத மொழி என்று ஆரம்பத்தில் சந்தேகித்து ஒதுங்கிய அவனது மனம் நாளடைவில் அந்தப் படிமங்களைத் தேடி ஓடியது. சந்தோஷப்பட்டது. கனவு தொடர்ந்தது.

எப்போதிருந்து அந்தக் கனவுகள்... அன்று சனிக்கிழமை. மாலை நான்குமணி. மொழி ஆய்வு ஸ்தாபன ஊழியர்கள்கள் அனவரும் புறப்பட்டுச் சென்றிருந்தனர். கிரந்தச் சுவடிகளை ஆய்வுசெய்யும் கணபதி, தேவாரம் திருவாசகங்களை ஆய்வு செய்யும் மரியதாஸ், கல்வெட்டு ஆய்வுகளில் ஆர்வம் கொண்டிருந்த முத்தையாவென, சில தமிழறிஞர்கள்மட்டும் உத்திரமேரூரிலிருந்து வந்திருந்த வித்துவான் இரத்தினசபாபதி ரெட்டியாரோடு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் கூடப்பாக்கத்திலிருந்து, பெர்னாருடைய தலித் நண்பன் வேலு வந்திருந்தான். அவனோடு வில்லியனூர் வரை போய்வரவேண்டுமென பெர்னார் தீர்மானித்திருந்தான். புறப்படவிருந்த பெர்னாரை நிறுத்தியது மரியதாஸ். ' உத்திரமேரூர் இரத்தினசபாபதி சில அரிய ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்திருக்கிறார். மங்கலம் என்கின்ற கிராமத்தில் கிடைத்ததாம் ' ' அப்படியா! நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா ? ' ' இல்லையென்றால் இரத்தினசபாபதி இவ்வளவுதூரம் வந்திருக்கமாட்டார் '. கோபலய்யர் கேள்விபட்டாரென்றால் சந்தோஷப்படுவார் ' 'கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணப் பாடல்கள்.




அதிலும் இக்கவிதை அநேகமாக யுத்தகாண்டமாகத்தானிருக்கவேண்டும். ' மரியதாஸ் பெர்னாரிடம் ஓலைச்சுவடியை நீட்டினார்.
'கந்தபுராணமா ? '
' ஆமாம். தமிழர்களின் இறைவன் எனப்படும் முருகக்கடவுளின் பிறப்பு, சூரப்த்மன் வதை, வள்ளி, தெய்வானை திருமணம் என முருகன் சரிதைபற்றிய கவிதை வடிவ நூல். சிவாச்சாரியார் எழுதிய சுவடிகளைக் காஞ்சீபுரத்திலுள்ள குமரகோட்டத்து முருகனே ஒவ்வொருநாளும் திருத்தம் செய்ததாக நம்பப்படுகிறது.
வலது கையிற் பெற்று, மின்சார விளக்கின் வெளிச்சத்திற்குக் கொண்டு சென்று வாசிக்க முயற்சித்தான்.
'வண்ணச் சிகரம் வழுவுற்றுக் கீழ்த்தலத்தில்
கண்ணீர் பொழிந்த கடலிடையே வீழ்ந்தனனால்
ஒண்ணுற்ற காஞ்சியுமையவள் கோட்டத்தின்
தண்ணுற்ற நேமித் தடத்திடையே வீழ்வார்போல் '
படித்து முடித்தபோது தலை வலித்தது. மரியதாசிடம் கூறினான்,
' இருக்கலாம். ஆனால் இக்கவிதையில் பிழைகள் இருக்குமென நினைக்கிறேன். மூலமாக இருக்கமுடியாது. மற்றவைகளும் கிடைத்தால் உண்மை விளங்கும். இந்தக் கவிதையைப்பற்றி ஏதோ தகவல்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே '


'ஓ அதுவா ? கச்சியப்ப சிவாச்சாரியார் காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்த வழக்கினை இக்கவிதையிற் பதிவுசெய்திருப்பதைபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் '.

வித்துவான் இரத்தினசபாபதி உதவிக்கு வந்தார்.
'பத்தாம் நூற்றாண்டில் காஞ்சிபுரப் பெண்களிடையே மிகவும் அச்சமூட்டுகின்ற பிரார்த்தனை ஒன்று இருந்திருக்கிறது.. காமாட்சி அம்மன்கோவிலிற் பெண்கள், தாங்கள் வேண்டுவது நிறைவேறினால் 'கருமாறிப் பாய்வதாக ' சத்தியம் செய்வார்கள். அவ்வேண்டுதல் நிறைவேறியவுடன், காமாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் மேல்நிலைக்குப் போய் எட்டிப்பார்த்தால் உலகாணித் தீர்த்தம் என்கின்ற குளம் தெரியும். அக்குளத்தை நோக்கித் தலைகீழாகப் பாய்ந்து உயிரை விடுவார்கள். இந்தச் செய்தியைத்தான் சிங்கமுகன் இறந்த செய்திக் கேட்டு சூரபத்மன் விடுகின்ற கண்ணீரில் அவனே வீழ்வதை ஒப்பிட்டு கச்சியப்பச் சிவாச்சாரியார் தகவலாக அறியத்தருகின்றார் '
அந்தச் செய்தியை முழுவதுமாக கிரகித்துக் கொண்டபோது, பெர்னார் உடலில் ஏற்பட்ட நடுக்கம் மனதையும் அசைத்திருந்தது. வேலுவிடம் தன்னால் இன்றைக்கு வெளியிலெங்கும் சென்றுவர இயலாதென அன்புடன் தெரிவித்தான்.

அன்றையலிருந்து, பெரும்பாலான இரவுகளில் வரிசை வரிசையாய்ப் பெண்கள் அவன் கனவுகளில் 'கருமாறி 'ப் பாய்ந்தார்கள். அடிக்கடி பகலில்கூட காட்சிகளாகவிரிந்து அவனை அலைக்கழித்தனர்.
அப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திமட்டும் முந்திக்கொண்டு செய்யும் முயற்சிகள் இவனுக்கு விநோதமாகவிருந்தது. 'உன் உயிரைப் போக்கிக்கொள்வதில் இவ்வளவு ஆர்வமா ? கேட்டுப் பார்த்தான் பதிலில்லை. அறிந்தவளாக இருந்தாள். அவளது கண்கள்-பார்வை, நாசி-சுவாசம், இதழ்-மொழி, கூந்தல்-மணம், கைகள்-வளையோசை, கால்கள்-கொலுசு அனைத்துமே புதிதல்ல-பழகியவை. எப்போது ? எங்கே ?
'........ பரந்து கிடக்கும் நீலக்கடல், ஆவேசம் கொண்ட அலைகள், துள்ளியும் துள்ளாமலும் வலம் வருகின்ற நீர்வாழினம், அவற்றைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பறவைகள், பாதங்களை குறுகுறுக்கச் செய்யவென்றேப் படுத்திருக்கும் கடற்கரை, போர்த்தியமணல், அணைத்திருக்கும் பச்சைவெளி - வெப்பமண்டலக் காடு - திருத்திய நிலத்தில், மரகதத்தில் பதித்த முத்தும் வைரமுமாக குடியிருப்புகள். திரும்புகின்ற திசைகள்தோறும், தென்னையும் வாழையும் சூழ்ந்திருக்க அவள்....

பிறகு ..தூரத்திற் கோபுரம், அகன்றவீதியில் ஒதுங்கிய அந்த வீடு. பெரிய வீடு. விழல் வேய்ந்த கூரை, மண்சுவர். சுவரெங்கும் வெண்புள்ளிகள் அவற்றைச் சுற்றி எழுதப்பட்ட கோட்டோவியங்கள். இடை இடையே கோழியைப்போல, மயிலைப்போல சித்திரங்கள். மத்தியில் சிற்ப வேலைபாடுகள் நிறைந்த தடித்த ஒற்றைக் கதவு. அக்கதவு குறைந்த அளவே திறந்திருக்க அதனை அடைத்துக் கொண்டு மீண்டும்... அவள்.
முகம் மட்டுமே தெரிகிறது. ஒருக்களித்த தலை, குவிந்த முகவாய், பேசத் துடித்து ஊமையாய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கின்ற சிவந்த, ஈர அதரங்கள். ரோஜா மொக்காய் நாசி. அதனிருபுறமும் சிறிய மல்லிகை மொட்டாய் மூக்குத்தி, நெற்றியின் மத்தியில் பவளச் சிவப்பில் ஒருபொட்டு. இமைக்க மறந்த மையிட்ட சோகக் கண்கள், கண்ணீர்த் துளிகள் மையிற் கலந்து யோசித்து சிவந்திருந்தக் கன்னக் கதுப்பில் இறங்க அதனைத் துடைக்க மனமின்றி வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அல்லது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நீலக்கடலும், நெய்தல் நிலமும்... கோபுரமும், அகன்ற வீதியும், மண்சுவரோடு எழுந்த வீடும், திறந்திருந்த ஒற்றைக்கதவின் இடைவெளியை அழகுபடுத்திய முகமும் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணத்தை அறிவதற்கான முயற்சியில் இறங்கி பெர்னார் களைத்திருந்தான்.


தொடரும்.....

nakrish2003@yahoo.fr

நீலக்கடல் -அத்தியாயம் -2

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

Tes pieds sont aussi fins que tes mains, et ta hanche
Est large a faire envie a la plus belle blanche;
A l 'artiste pensif ton corps est doux et cher;
Tes grands yeux de velours sont plus noirs que ta chair.
..................................................................(A une Malabaraise) -Baudelaire


லகவரைபடத்தில் 20.5 ' தெற்கு அட்சரேகைக்கும் 57.33 ' கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையில் அந்த முத்து. கடகரேகையை நெருங்கிக் கிடக்கும் இந்தியப் பெருங்கடலின் அழகு முத்து. நீரிடையே பேசும் நிலத்துண்டு. மும்பையிலிருந்து 4800 கி.மீ. அல்லது பாரீஸிலிருந்து 9426 கி.மீ அல்லது சிட்னியிலிருந்து 9114 கி.மீ பயணத்தில் நம்மை மயக்கும் இயற்கைத் தேவதை.

பத்தாம் நூற்றாண்டில் அராபியர்கள் அம்முத்தைக் கண்டெடுத்து ஆச்சரியத்தில் மூழ்கிச் சூட்டிய பெயர் 'டினா அரோபி (Dina Arobi). கி.பி 1500ல் போர்த்துக்கீசியர்கள் சூட்டிய பெயர் அன்னத் தீவு( Ilha do Cirne). கி.பி 1598ல் டச்சுக்காரர்கள் தங்கள் இளவரசர் நினைவாக 'மொரீஸ் ' எனப் பெயர் வைக்க கி.பி 1715ல் வந்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வைத்த பெயரோ பிரெஞ்சுத் தீவு(Ile de France). இந்திய வணிகத்திற்குத் தீவின் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் கி.பி 1810ல் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த தீவினைக் கைப்பற்றி மீண்டும் சூட்டிய பெயர் மொரீஷியஸ்....ஆப்பிரிக்கர், இந்தியர், சீனர், ஐரோப்பியர் சேர்ந்து வாழும் ஒரு பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். இன்றைக்கும் இந்தியப் பெருங்கடலில் எழுந்துநிற்கும் இவ்வுயிர்ப் பிரதேசத்தை ஊட்டிவளர்த்து, கட்டியெழுப்பிக் கரைந்துபோன தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்.. அவர்தம் கைத்திறனில் பிறந்த சாலைகளும், சோலைகளும், கூடங்களும், கோபுரங்களும் அப்புலம்பெயர்ந்த மக்களின் புகழ்பாடுபவை. சொந்தமண்ணைப் பிரிந்து, வந்தமண்ணின் வாழ்க்கையை அங்கீகரித்த அந்த மனிதர்களின் சுகங்கள் அனைத்துமே சோகங்களால் எழுதப்பட்டவை....பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழனின் உதிர இலக்கியம் உயர்ந்தது;
பதினெட்டாம் நூற்றாண்டு......
இந்தியப் பெருங்கடலின் தொப்புளாக அந்தத் தீவு- மொரீஷியஸ் தீவு. சுற்றிலும் மலைத் தொடர்கள், அவற்றைத் தழுவிப் பிரிய மனமில்லாமல் சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்..வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இஇஇறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம் -. பெயர் போர் லூயி (Port Louis). நீலக்கடல் அலைகளின் நிறுத்தாத நடனம். நட்டுவாங்கமாக கிறீச்சிடும் கடல் நாரைகள், கரையும் நீர்க்காகங்கள். இடைக்கிடையே கரையின் திசையிற் பாய்ந்து மீண்டும், புறப்பட்ட இடத்தினை ஞாபகத்தில் வைத்துத் திரும்புகின்ற அவற்றின் தீராத விளையாட்டு. தெளிந்த கடல் நீரில், தெரிந்த இருட்டு படலம். அவற்றில் வெள்ளியும் தங்கமுமாய் உயிர்பெற்று அலைகின்ற மீன்படலம். வெள்ளியைப் பொடிசெய்து கரையெங்கும் பரப்பியதுபோன்று கடலோர மணல். முடிந்தமட்டும் அவற்றைக் கொள்ளை அடித்துக் கடலிற் சேர்ப்பதில் கவனமாயிருக்கும் அலைகள்.. அலைகளின் பிடியிலிருந்து தப்பித்து மணற் பறித்து முகம் புதைக்கும் இல்லி நண்டுகள், மென்சிவப்புக் கடலோர நண்டுகள். நீரும் காற்றுக் குமிழ்களுமாய் வெடித்து அடங்கும் அவற்றின் சுவாசம். மேற்கே தன் கதிர்களை, அடர்ந்திருந்த வேம்பு, மா, இலவு, வாதுமை, புன்னை, மூங்கில் அடர்ந்த மரங்களுக்கிடையே நிறுத்தித் தன்னை அடையாளப் படுத்தியவாறு வீடு திரும்பிகொண்டிருக்கும் சூரியன். தெளிந்த வானத்தில் திடுமென்று கருத்த மேகம். மலைப்பகுதிகளிலிருந்து எப்போதும் போல சிலுசிலுவென்ற சீதளக் காற்று, இகபர இன்பங்களை செய்தியாகச் சொல்லும் இயற்கையின் மடல்.
அவள் தெய்வானை, இளம் பழுப்புச் சருமம் - கரிய நீண்ட ஒற்றைப் பின்னல். முன் எழுந்த அளவான மூக்கு. மை பூசிய கரிய விழி.. அடர்த்தியான புருவங்கள் - வழுவழுப்பும் நேர்த்தியும் நெருங்கியிருக்கும் கன்னக் கதுப்புகள் - அவற்றில் பருவத்தின் நுண்ணிய மணிகள். ஈரப்பதமின்றி உலர்ந்திருந்த அதரங்கள் விரித்த பவழச் செவ்வாய். யோசித்துப் படைத்திருந்த அளவான நெற்றி. கடலலைகளின் தொடர்த் தழுவலில் கூடுதலாக வெளுத்துப் பூத்திருக்கும் பாதம். .நனைந்த கால்களில் சுழித்துக் கொண்டு பூனை ரோமங்கள். .அவ்வப்போது அலைச்சாரல்களில் நனைந்து நீர் சொட்டும் கூந்தல், மூக்கு, முகவாய், முலைக்காம்புகள். சுதந்திரமாகவிருந்த தோள்களில் வியர்வை உலர்ந்த உப்புத் தேமல்கள். உடலையொட்டிய திருபுவனம் ஈர நூற்சேலை. அழகி- தமிழச்சி...
.
காத்திருக்கிறாள். கடலையொட்டிக் காத்திருக்கிறாள். காத்திருப்பது என்பது கடந்த ஒருமாதமாக அவள் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். எப்போது வேண்டுமானாலும் வருவாள். மணிக்கணக்கில், சில நாட்களில் காலையிலிருந்து மாலைவரை காத்திருப்பாள். துறைமுகத்தில் வேலைசெய்துவிட்டுத் திரும்புகின்ற கறுப்பின மக்களுக்கு அவள் காத்திருப்பும், கேள்விகளும் பழகிவிட்டவை. இரவுநேரத்தில் அவர்களது கபான்களில் பாடும் கிறெயோல் பாடல்களிற்கூட அவள் இடம் பெறுகிறாள். அவள் கவனம் முழுவதும் கடற்கரையின் இடது பக்கமிருக்கும் லெ மோர்ன் டெ லா தெக்கூவர்த்து மலையை ஒட்டியே இருக்கும், தீவுக்குள் நுழையும் எந்தக் கப்பலாகவிருந்தாலும், அதன் மூக்கைக்காட்டித் தொடர்ந்து வெளிப்படும் மலை அது.
அவள் அவனுக்காகக் காத்திருக்கவில்லை, தனக்காகக் காத்திருக்கிறாள். அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக்கொண்டிருக்கிறாள். தனியொருவளாக தொப்புட் கொடியைக் கைககளிற் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறாள். இந்த மண், காற்று, ஆகாயமென அனைத்திலும் நுண்துகள்களாக ஒட்டி, விரட்ட விரட்ட, எழுந்து மீண்டும் படிந்து தன் வேரினைத்தேடிக் களைத்துப் போகிறாள். காலடியிற் கடலலைகள், திருமுடியிற் கதிரவனின் கதிர்களெனத் திரும்புகின்ற பக்கமெல்லாம் மலைத்தொடர்களின் மெளன ஓங்காரம். அவ்வோங்கார ஓசையின் நாதமாக, அலைகளூடே பயணித்து மீள்கிறாள். மலைமுலைகளை மறைத்து அழகூட்டும் மஸ்லின் மேகங்கள், அவற்றைத் தழுவும் மரகதப் பசுமையிற் கச்சைகள். கச்சையைக் கண்களால் உரிந்து, காதற்தாபத்துடன்கூடி, கழிவுகளிற் தன் முகம் தேடுகிறாள். மலைகளின் சிகரங்களில், ஊற்றெடுத்து உருண்டுவிழும் நீரருவிகளில் நீந்திக்களைத்து அதன் சங்கமச் சேற்றில் மிதக்கும் பவழப்படிமங்களில் தேடுகிறாள். சிவப்புப் புல்புல் -பச்சைக் கிளிகள்-புள்ளிகளிட்ட புறாக்கள்- துள்ளிப் பறக்கும் மைனாக்கள். அவற்றின் இதயத்தை வருடும் இயற்யைின் ஒட்டுமொத்த நாதவோசை.- முடிவற்ற சங்கீதம். அந்திநேர சுரங்களுக்காகவே காத்திருந்து, வானவில் இழைத்த வண்ணத்தடத்தில் மெல்லடிவைத்து பயணிக்கிறாள். என்றேனும் ஒருநாள் இந்தியப்பெருங்கடலில் அவன் முகம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறாள். கண்ணுக்கெட்டிய வானமும், கடலும் மென்மையான நீலத்தில் உறவு கொண்டாட, கண்ணுக்கெட்டா வானமும் கடலும் அடர்ந்த நீலத்தில் அமைதியாகக் கிடந்தது. அந்த அமைதிக்குப் பின்னேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். இந்தக் காட்சியும் காத்திருப்பும் கடந்த சிலநாட்களாக அவளது வாழ்க்கையாகிவிட்டது. போர் லூயி துறைமுகத்திலிருந்து இந்தியத் தீபகற்ப திசை நோக்கிப் பயணிக்கவிருக்கும் பிரெஞ்சு கிழக்கிந்தியகம்பெனியின் வணிகக் கப்பல்களில் ஏதாவதொன்றில் தொற்றிக்கொண்டு, அவனைத் தேடி ஓடலாம் என்கின்ற உந்துதலுங்கூட அவளிடம் இப்போது குறைந்து சோர்ந்திருக்கிறது. என்றாவது மீளுவான் என்கின்ற நம்பிக்கையில் வழக்கம்போல நீண்ட ஆழமான பெருமூச்சு. கண்களை மெல்ல மூடி அவன் சம்பந்தப்பட்ட நினைவுத் தோணியில் ஆனந்தமாகப் பயணித்தாள்......
'தெய்வானை.. தெய்வானை.. ' அழைப்பது பெர்னார் போலவிருந்தது. நினைவைக் கலைத்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பியபொழுது முழங்காற் சாராயும் ஓலைத் தொப்பியுமாக கைலாசம் நின்றுகொண்டிருந்தான். இ
' ம் ' புறப்படு தெய்வானை, அம்மா உனக்காகக் காலையிலிருந்து காத்திருக்கிறாங்க...
'இல்லை அண்ணா. நீங்கள் போங்கள் அவர் எப்படியும் வந்திடுவார். அவரில்லாமல் திரும்ப மாட்டேன். '
'கப்பல் புதுச்சேரியையே அடைந்ததோ என்னவோ ? அதற்குள் நாமுள்ள தீவுக்கு மீண்டும் எதிர்பார்க்கிறாய். நம்புகின்ற வகையிற் செயல்படு. வானம்வேறு இருண்டுகொண்டு வருகிறது. மழையும் காற்றும் வருவதற்கான அறிகுறி. உடனே கிளம்பு ' மறுத்த தெய்வானை என்ன நினைத்தாளோ, சகோதரனின் வலதுகரத்தை அன்பாகப் பற்றினான்.
அவன் கூறி முடிக்கவில்லை. தெற்கே மரங்களுக்கிடையில் நீண்டு உடைந்து அடுத்தடுத்து எழுந்து மறைந்தன ஒளிக் கீற்றுகளாய் மின்னல்கள். அதனைத் தொடர்ந்து ஒரு சில விநாடிகளில் இடியுடன் கூடிய மழை சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இருவருமே ஓடினர். தங்கையின் உடற்பலவீனத்தைப் புரிந்து மெதுவாகவே ஓடினான் சரிவுகளில் சற்று வேகமாகவும், சம நிலங்களில் நிதானமாகவும், செங்குத்தான பகுதிகளில் சிரமத்துடனும் கடக்கவேண்டியிருந்தது. மழையின் வேகம் கூடியிருந்தது. கடல் அலைகள் உயர்ந்து உடைந்தன. மரங்கள், குறிப்பாக தென்னைகள் வைளைந்து, தென்னையோலைகள் கழுத்தைவிட்டு உயர்ந்த கேசம்போலக் காற்றில் உயர்ந்து மீண்டும் திரும்பின..
தெய்வானை, 'எங்கேயாவது நின்றுபோகலாமே ' என்கின்ற தன் எண்ணத்தைச் சகோதரனிடம் வெளியிட்டாள்.
'அண்ணா என்னால் தொடர்ந்து ஓட முடியாது. கொஞ்சம் காத்திருப்போம் மழை விடட்டும். ' அங்கே தென்னை மரங்கள் வரிசையாக இருக்கின்றனவே. அங்கே சென்று நிற்கலாமா ? '
' வேண்டாம் அங்கே வேண்டாம். இந்த நேரத்தில் அவற்றின் காய்களோ, மட்டைகளோ தலையில் விழலாம். அதோ வாதுமை மரங்கள் நிற்கின்றன பார். அங்கே வேண்டுமென்றால் போகலாம் '
இருவரும் அருகே தெரிந்த வாதுமை மரங்களின் அடியில் போய் நின்றார்கள்; பக்கத்திலே, எங்கேயோ இடிவிழுந்து மூங்கிற் காடுகள் சட சடவெனப் பற்றி எறிவதும் அவற்றுக்கிடையேயிருந்து தப்பும் விலங்குகளின் அபயக் குரல்களும் அடை மழையின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டுக் கேட்கின்றன. மழையில் நனைந்திருந்த இருவரது உடல்களும் தேவையின்றி நடுங்கின..
'கிழக்கே பார். அடிவானம் கூடுதலாகக் கறுத்துக் கொண்டு வருகிறது. காற்றின் வேகம் குறையவில்லை. முந்தைக்கு இப்போது அதிகமாகவிருக்கிறது.. அநேகமாகப் புயல்கூட வீசலாம். ' கைலாசம் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, தங்கையின் இடதுகையை ஆறுதலாகத் தனது இடது கரத்தில் வசப்படுத்திக் கொண்டு பேசினான்.
'பறங்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. நம்மவர்களுக்கும், கறுப்பர்களுக்கும்ந்தான் பிரச்சினை. நம்முடைய தேசத்து விழல் வேய்ந்த குடிசைகளே பரவாயில்லை. இலைகளையும் தழைகளையுமிட்ட கபான்களில் எத்தனை நாைளைக்கு இப்படி வாழ்க்கையை ஓட்டுவது ? எப்படியாவது கவர்னர் சமூகம் சென்று நாம் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதுச்சேரிக்கே திரும்பவேண்டும் அண்ணா. அது முடியுமா ?. நமக்காக பயணம் மேற்கொண்டுள்ள பெர்னாரிடமிருந்து தகவல்கள்பெற எவ்வளவு நாட்கள் ஆகுமோ ? எனக்குப் பயமாக இருக்கிரது அண்ணா '
' புதுச்சேரிக்குத் திரும்புவது சுலபத்தில் இல்லை. நம்பிக்கைதான் வாழ்க்கையென அம்மா அடிக்கடி நம்மிடம் சொல்வாறே ? மறந்துவிட்டாயா ? பெர்னார் மீது எனக்கு அளவுகடந்த நம்பிக்கை இருக்கிறது. உரிய தகவல்களோடு தீவுக்குக் கூவருவார். காத்திருப்போம். அம்மா தினந்தோறும் வணங்கும் சர்வேஸ்வரன், புதுவை வேதபுரீஸ்வரர் தயவு வேண்டும். எனக்கும் நம்முடைய மண்ணை மீண்டும் மிதிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சரி புறப்படு. மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. '
இருவரும் வடகிழக்காகச் சென்ற செங்குத்தான பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
' என் பின்னே வா. விஷமுட்கள் நிறைய இருக்கின்றன '
அண்ணன் கைலாசத்தின் வார்த்தைகளை ஏற்று, தெய்வானை பின்தொடர்ந்தாள். கைலாசம் வேகமாக நடக்கப் பழகியவன். அவள் அப்படியல்ல. சிறிது தூரம் நடந்திருப்பார்கள்.
'அம்மா ' வலது காற்பாதத்தினைத் தூக்கியவாறு ஒற்றைக் காலில் நிற்க முயற்சிசெய்தவளை ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான். அவன் தோள்களை அழுந்தப்பற்றிக் கொண்டு வலதுகால் பாதத்தை முடிந்தமட்டும் திருப்ப முயன்றாள். குதிகாலில் முள்தைத்தவிடத்தில் நீலம் பாரித்திருந்தது. தனது ஆட்காட்டி விரலால் மெதுவாகத் தடவினான். முள் இருப்பதன் அடையாளமாக நெருடியது. வரிசையாக நின்றிருந்த தென்னைமரங்களின் திசைக்குச் சென்று, கீழே கிடந்த ஒரு தென்னை ஓலையிலிருந்து ஈர்க்கினை எடுத்து இரண்டாக உடைத்து அவளது பாதத்தில் முள் தைத்தவிடத்தில் மடித்துப் பொருத்தி, முள்ளைப் பிடுங்கி எறிந்தான். இரத்தம் முத்தாக எட்டிப் பார்த்து யோசித்துப் பின்னர் கசியத் தொடங்கியது. அருகிலிருந்த புதர்களிலிருந்து நாயுருவியைக் கொண்டுவந்து கசக்கி அதன் சாற்றினை முள்தைத்தவிடத்தில் விட்டு இலைகளாற் சூடுபறக்கத் தேய்த்தான். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணனின் சிசுருட்ஷைகளை ஏற்றுக் கொண்டாள். 'கொஞ்ச நேரம் இவ்வலி நீடிக்கும். பிறகு சரியாகிவிடும் ' என்ற. கைலாசத்தின் ஆறுதல் வார்த்தைகளையேற்று அவன் முன்னே நடக்க இவள்
வலதுகாலைப் பிடித்தவாறு நிதானித்து நடந்தாள்.
குறைந்தது இன்னும் இரண்டு கல் தூரமாகினும் அடர்ந்த மரங்களுக்கிடையே நடந்தாக வேண்டும். மழை இப்போது முற்றிலுமாக குறைந்திருந்தது. வானம் நீலப்படிகமாக எப்போதும்போலத் தெளிவான நிலைக்கு மீண்டிருந்தது. மரங்களின் கிளை மற்றும் இலைகளிலிருந்து மழைத்துளிகள் சீராகச் சருகுகளில் சொட்டிக்கொண்டிருந்தன. நிலம் சிலவிடங்களில் நீர்த்தாரைகளுக்கு வழிவிட்டு இறுகிக்கிடந்தது.
சிற்றோடைகளாகவும் மெல்லிய அருவியாகவும் ஆங்காங்கே மழைநீர்கள் அவதாரமெடுத்திருந்தன. அவ்வோடைகளில் நீர்தவழ்ந்து நிலத்தை அரித்து எழுந்த இடங்களில் சிறிய கெண்டைமீன்கள். கூடுதலாக நீர்தேங்கியிருந்த சிலவிடங்களில் பச்சைத் தவளைகள், மண்டூகங்களின் கர்ண கடூரமான சப்தம் . இரை கிடைத்த ஆர்வத்தில் அவற்றை நோக்கி ஊர்ந்துவரும் பாம்புகள். இடையிடையே பொன்வண்டுகளின் ரீங்காரம். பழகிய தடமென்றாலும் தெய்வானைக்குள் பயம் புகுந்துகொண்டது.
' அண்ணா சற்று வேகமாகப் போ. இருள் கவிழ்வதற்குள் காட்டைக் கடந்துவிடவேண்டும். எனக்கு மிகவும் அச்சமாகவுள்ளது. '
' பயம் வேண்டாம். 'நீண்ட மலையின் '(Montagne Longue) வடக்கு திசையின் அடிவாரத்திலேதானிருக்கிறோம். இன்னும் சிறிதுதூரந்தான். '
புதுவெள்ளக் களிப்பில் தூரத்தில் துள்ளிப்பாயும் 'கல்பாஸ் நதியின் '(River des Calebasses) ஆரவார ஓசையைக் காதில் வாங்கியவாறு இருவரும் அத்திசைநோக்கி நடக்கவாரம்பித்தார்கள். சகோதரன் வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையூட்டியிருக்கவேண்டும். பயத்தினை உதறிவிட்டு, அவன் பின்னே நடக்கவாரம்பித்தாள். கதிரவன், நாளைமுடித்ததன் அடையாளமாக மேற்கில்தெரிந்த மலைகளின் பின்னே கதவடைத்துக் கொண்டிருந்தான். கடிக்கும் அட்டைகளையும் தெள்ளுப்பூச்சிகளையும் ஒதுக்கிவிட்டுத் தாழ்ந்த கிளைகளின் மோதல்களிற் தப்புவித்து, அபாந்தொன்னே (River l 'abondonnais) ஆற்றினையொட்டியிருந்த சமதளத்தை இருவரும் அடைந்திருந்தார்கள்.
ஒழுங்கற்ற சாலைகளில், காளான்களென இந்தியத் தமிழர்களுக்கெனவும், மலபார் மக்களுக்கெனவும் உருவாக்கப்பட்டிருந்த கபான்கள் எனப்படும் குடியிருப்புகள். மரப்பலகைகளால் உருவாக்கபட்டு கூரைகளில் இலை, தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்களின் கூடுகள். கூரைகளிருந்து வரும் அரிசிச்சோறும், குழம்பின் மணமும் இவர்களின் நாசியை மட்டுமல்ல மனத்திற்கும் சந்தோஷத்தைக் கொண்டுவந்திருந்தது.
தங்கள் குடியிருப்பைக் கண்ட ஆனந்தத்தில் ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார்கள். கதவு திறந்திருந்தது. வீட்டிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் இறைந்து கிட,ந்தன. இவர்களின் அன்னை காமாட்சி மூர்ச்சையாகிக் கிடந்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.


தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் -3

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

சென்-மாலோவிலிருந்து சென்றோம் -ஒரு
சிங்காரப் போர்க்கப்பலொன்றில்
ஆங்கிலக் கால்வாய்க்காக -பிறகு
அங்கிருந்து பிரிஸ்டல் பயணம்
ஆங்கிலேயரை அழிப்பதற்காக (1)


'லெ பொந்திஷேரி ' என்றப் பிரெஞ்சு கப்பல். எப்போதும்போல பயணக் களைப்பை மறந்து கடற்பாடலை வட்டமாகக் கைகோர்த்து ஆடியபடி பாடிக்களிக்கின்ற மத்தலோக்கள்(கப்பல் ஊழியர்கள்).. மேலே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள நீலவானம். வானச்
சீலையில் வகை வகையாக ஓவிய உயிர்களை உலவவிடும் வெண்பஞ்சு மேகங்கள்; அவற்றிற்கு மெருகூட்டும் சூரியன். கீழே அதற்கிணையாக அமைதியாகக் கிடக்கும் நீலக்கடல். வானம் கடலிலா, கடல் வானத்திலா எனவறிந்துணர முடியாத வகையில், இரண்டிற்குமிடையே மயக்க உறவு. மேற்குக் காற்றில் எழுந்து அடங்கும் அலைகள். தெளிந்த நீருக்குள் கம்பீரமாக, பெரிய கண்களுடன் நீந்திச் செல்லும் சுறா, கும்பல் கும்பலாய்ப் பயணிக்கும் வெள்ளி நிற வெளவால் மீன்கள், தன் இனந்தேடி அலையும் விளைமீன்கள், வெள்ளியுடல் பாரை
மீன்கள். அவற்றைத் தொடர்ந்து மேலே பறந்து பயணிக்கும் கடல் நாரைகள். எப்போதேனுமெழுந்து அசுரத்தனமாக சுவாசித்து மீண்டும் நீரில் மூழ்கி மறையும் திமிங்கிலங்கள். ஈரக்காற்றுடன், உப்போடு கூடிய முடைநாற்றம். யுகங்கள் தோறும் வரலாறு படைக்கும் இந்தியப் பெருங்கடல்.
'லெ பொந்திஷேரி ' ஒரு கராவெல் ரக வர்த்தகக் கப்பல். நாற்பது மீட்டர் நீளமும் பன்னிரண்டு மீட்டர் அகலமும், நிறைய பாய்மரங்கள் கொண்ட, 1200 டொன்னொ ( ஒரு டொன்னோ என்பது 2,83M3) கொள்ளளவும் பொருட்கள் ஏற்றக்கூடிய பிரெஞ்சு கிழகிந்தியக்
கம்பெனியின் பிரத்தியேகக் கப்பல். கப்பலின் தலைவன் வழக்கம்போல 'தெலாமர் ' (.Delamare). பதினைந்து நாட்களுக்கு முன்னதாக, போர் லூயி துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருந்தது. இந்திய வியாபரிகளுக்கென சுத்தமான தங்கமும் வெள்ளியும் போக, புதுச்சேரி கவர்னருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், இதர பிரெஞ்சு இந்தியக் கம்பெனியின் ஊழியர்களுக்குமாக இரண்டாயிரம் பொர்தோ சிவப்பு ஒயின் போத்தல்கள், சாராயம், கோதுமை மாவு, பதப்படுத்தபட்ட பாற்கட்டி, பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, இரும்புத் தகடுகள்-கட்டிகள், துப்பாக்கிகள், அவைகளுக்கான ரவைகளெனப் பயணித்துக் கொண்டிருந்தன. அவற்றை கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டி கப்பலின் மத்தலோக்கள் (Matelots), முன்பும் பின்பும் பீரங்கிகளை ஒட்டி மிகக் கவனத்தோடு நின்றிருக்க, பின்புறமும், வலமும் இடமுமாக இரு பக்கங்களிலும் பாதுகாப்பிற்காக பீரங்கிகளுடன் கொர்சேர்கள்*(Corsaire).2
பிரான்சின் சேன் மாலோ(Saint -Malo) பகுதியைச் சேர்ந்த தரகர்கள், ஸ்பெயின் காலனி நாடுகளிடமிருந்து பெறப்பட்ட இருபத்து நான்கு காரட் சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளைச் சுமந்து சென்று இந்தியாவில் இறக்கிவிட்டு அதற்குப் பதிலாக வாசனைத்திரவியங்களையும், பட்டுத் துணிகளையும், கொழுத்த இலாபத்துக்குப் பெற்றுக் கப்பல்களை நிரப்பிவருவது வழக்கம். சில சமயங்களில் பிரான்சின் செனான் மற்றும் அமியன் பகுதியிலிருந்து அழகிய வேலைப்பாடுள்ள கம்பளி விரிப்புகளும், பிரான்சின் லாங்குடோக் பகுதியிலிருந்து சற்றுக்
கனமான கம்பளிகளும், மிக மெல்லிய துணிகளும், இந்தியப் நவாப்களுக்கும், சுல்தான்களுக்கும், வசதிவாய்ந்த உயர்ஜாதி இந்துக்களுக்குமெனத் தங்கச் சரிகைகளும், பவழ வேலைப்பாடுகளும் கொண்டு வருவதுண்டு. ஆனால் இவற்றிற்கான சந்தைத் தேவை குறைவாகவே இருந்தது. இந்தத் துறையில் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கிலேயரோடு போட்டியிடும் நிலையில் பிரெஞ்சு வணிகர்களில்லை.
பிரான்சுக்கும் இந்தியாவுக்குமான கப்பல் போக்குவரத்தென்பது ஏப்ரலிலிருந்து அக்டோபர்வரை வீசும் பருவக்காற்றினைப் பொறுத்தது.
காத்திருந்து இந்தியப் பெருங்கடலில் வீசுகின்ற தென்மேற்குப் பருவக் காற்றைத் தங்கள் பயணத்திற்கு உபயோகிக்க, இப்பாய்மர வணிகக் கப்பல்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இதனை உணர்ந்து பிரான்சிலிருந்து கப்பல்கள் பெரும்பாலும் டிசம்பரிலிருந்து -மார்ச்சுக்குள் புறப்பட்டுவிடும். கொண்டு செல்லும் பொருட்களுக்கு நல்ல விலை வேண்டுமென்றால் இதர ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்கு முன்னதாக இந்தியாவில் இவர்கள் வசமிருக்கும் புதுச்சேரியிலும், பின்னர் வங்காளத்தில் சந்திரநாகூரிலும் பொருட்களை இறக்கியாகவேண்டும்.
பிரான்சின் வடமேற்கிலுள்ள லொரியான்(Lorient) துறைமுகத்தில் கடுங்குளிர்காலத்தில், கப்பற்போக்குவரத்து என்பது மிகவும் கடுமையாகவிருக்கும் எனக் கருதப்படும் நேரத்தில் நேரத்தில் வணிகக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் நிதானித்துப் பாய்விரித்துப் பயணத்தைத் தொடங்கிவிடும். கஸ்கோஜ்ன் வளைகுடாவில் (Le golfe de Gascogne) ஒரு மாதம் மெள்ள ஊர்ந்து ஆப்ரிக்காவின் 'கொரே ' (Goree)துறைமுகத்தில் சில நாட்கள் ஓய்வு. பின்னர் பூமத்தியரேகையைக் கடக்கும்வரை போதிய காற்றில்லாமல் பயணம் மிகவும் சிக்கலாகிவிடும். ஆப்ரிக்காவின் நன்நம்பிக்கை முனை (Le Cap) கடக்கப்படுவதற்கு இந்தவகையில் நான்குமாதங்கள் பிடித்திருக்கும். இந்த நேரத்தில் பிரெஞ்சுத் தீவு (Ile de France) நான்குமாதப் பயணத்திற்குப் பிறகு கப்பல் தலைவனுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சொர்க்க பூமி. ஒரு மாதத்திற்கு குறையாமல் ஓய்வு. தவிர டச்சுகாரர்கள் கி.பி 1710ல்இந்தத் தீவினை விட்டுப்போன பிறகு 1715ல் கியோம் துய்ஃப்ரெஸ்ன் (Guillaume Dufresne) என்ற கப்பற் தலைவன் பிரெஞ்சு அரசின்பேரில் கைப்பற்றியபிறகு இவர்களுக்கு இஇத்தீவு மிகவும் வசதியாயிற்று. இத்தீவிலிருந்து மடகாஸ்கர் நோக்கி வடமேற்காகப் பயணித்து அங்கிருந்து வடகிழக்காக பயணிக்கவேண்டும். இந்தியாவை நெருங்கும்போது மாலைதீவுக்கும் இலட்சத்தீவுகளுக்குமிடையில் பயணித்து மலபார் கடற்கரையை அடைந்து அங்கிருந்து தெற்கு நோக்கி குமரிமுனையை நோக்கி நகர்ந்து இலங்கைக்குத் தெற்காக கடந்து கிழக்குக் கடற்கரையில் வடக்கு நோக்கிச் சென்று இறுதியாக புதுச்சேரியில் நங்கூரமிடும்.
இன்றைக்குக் காற்றுச் சாதகாமாக இருந்தது. கப்பல் கப்பித்தேன் தெலாமர் 'லெ பொந்திஷேரி ' கப்பலின் அனைத்துப் பாய்களையும் விரித்திருந்தான். மணிக்குப் பத்துக் கடல்மைல் வேகத்தில் கப்பல் போய்கொண்டிருந்த சந்ததோஷத்தில் கபினுக்குத் திரும்பினான். அவனது கபின் மூன்று டொன்னோ அளவுடையது. அவனுடைய அதிகபட்ச உடைமைகள் பெரும்பாலான கப்பலூழியர்களைப் போன்றே கூடுதலாக ஒரு ஆடை, ஜெபித்தற் பொருட்டு ஒரு பைபிள், பிரத்தியேகச் சலுகையில் சாராயம், இறைச்சி வற்றல்கள் மற்றும் சொஸ்ஸீஸ்கள். கபினுக்குள் நுழைந்தவன் ஓரு சாராயப் போத்திலையும், இரண்டு கண்ணாடிக் குப்பிகளையும் எடுத்துகொண்டு, மகோகனி மரப்படிகளில் இறங்கி, அருகில் இருந்த மற்றொரு கபினுக்குள் நுழைந்தான். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் உயர்மட்ட மக்களுக்கான பிரத்தியேக அறை. கபினின் கதவைத் மெல்லத் தட்டிவிட்டு நுழைந்தான். சிறியகபினென்றாலும், வேலைபாட்டுடன் கூடிய கருங்காலி மரத்தினாலான மேசையும் நாற்காலியும். நாற்காலியின் இருக்கையிற் தோல்தைத்திருந்தது. அழகான மகோகனி மரத்தினாலான கட்டில், மத்தியில் இழுப்பறைகொண்ட பிரான்சின் ரென்(Rennes) பகுதியைச் சேர்ந்த ஒரு பண்டப் பேழை. அந்த இளைஞன் மேசையில் உட்கார்ந்துகொண்டு, மையைத் தொட்டு இறகினால் எழுதிக் கொண்டிருந்தான்.
நல்ல திடகாத்திரமான வாலிபன். நீண்டகால்களும் அதற்கிணையாக உறுதியான தோள்களுடன் கூடிய நீண்ட கைகள். பரந்த மார்பு. பெண்ணின் சாயல்கொண்ட வட்ட முகம், எடுப்பான மூக்கு, உதட்டின்மேல் அரும்பிநிற்கும் மெல்லிய மீசை.. நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
'மன்னிக்க வேண்டும் பெர்னார். உனக்கு நான் இடையூறு செய்கின்றேனோ ?
'அப்படியெல்லாம் இல்லை. கப்பித்தேன். உட்காருங்கள். காற்றின் நிலை சீராகியுள்ளதா ?
'அந்த மகிழ்ச்சியிற்தான் உதவி கப்பித்தேனிடம் கப்பலை நடத்துமாறு பணித்துவிட்டு, நான் கீழே இறங்கிவந்துள்ளேன். காற்றின் நிலை இவ்வாறே நீடிக்குமாயின் அடுத்த கிழமை புதுச்சேரியில் இருக்கலாம். கிழக்குக் கடற்கரையில் இந்திய விலைமகளிருடன் சாராயம் குடித்து மகிழலாம். '
'கப்பித்தேன்; உனக்கு எப்போதும் மதுவும் மங்கையும் பற்றிய கவலைதானா ? பிரெஞ்சுத் தீவில் கிறேயொல் பெண்களை அனுபவித்தது போதாதா ? '
' நீயும் இந்தியாவில் இருந்து வந்தவன்தானே ? அங்குள்ள பண்டிதர்களைக்கேள். பெண்களின் வகைகளையும் அவர்கள் தரும் இன்பங்களையும், அவர்களை அனுபவிக்கும் நுட்பங்களையும் சொல்லித் தருவார்கள். இனிமேலாகிலும் தெரிந்துகொள். தெரியாதென்றால் என்னுடன் வா நான் அழைத்துப் போகிறேன். '
' கப்பித்தேன் எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்.. இது கொஞ்சம் ரகசியமான காரியம். இயலுமா ? '
' நான் ஏதோ பிரெஞ்சுத் தீவுக்குக் கைவினைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல வேண்டி கவர்னர் லாபூர்தொனேயின் கடிதத்துடன் பிரெஞ்சு நிர்வாகத்தை விண்ணபிக்க வந்துள்ளதாகத்தானே நினைத்தேன் '.
'ஆம். நான் மறுக்கவில்லை. அது தவிர வேறு சில காரியங்களும் எனக்கு ஆகவேண்டியிருக்கிறது
' நீயும் புதுச்சேரியில் இருந்தவனாயிற்றே. கவர்னருக்கும் அவரது மதாமுக்கும் வேண்டியனாயிற்றே, உன்னால் முடியாததா ? '
' உண்மை. ஆனால் இது கவர்னருக்குத் தெரியாமலும், அவர் பக்கத்திலிருக்கும், துபாஷ்களுக்கும், குறிப்பாக உயர்ஜாதி இந்துக்களுக்கும் தெரியாமல் செய்யப்படவேண்டிய காரியம். '
'ஜாக்கிரதை. எதுவென்றாலும் யோசித்துச் செய். ஜாதி இந்துக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உள் விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது. நம்முடைய கலாச்சாரத்துக்கு முற்றிலும் முரண்பட்டவர்கள். எதையாவது செய்துவிட்டு ஆபத்தை விலைக்கு வாங்காதே! '
அதற்கடுத்த ஒரு கிழமையில் 'லெ போந்திஷேரி ' ' கடற்கரைக்கு மூன்றுகல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு காத்திருக்க, சரக்குகளை இறக்குவதற்காக குவர்னர் நிர்வாக உத்தரவின் பேரில் வந்திருந்த ஷெலாங்குகள் (பெரியபடகுகள்) சூழ்ந்து கொண்டன.
கப்பித்தென் தலாமேரும் பிரான்சுவாவும் ஒரு பிரத்தியேகப் படகில் ஏறி கடற்கரை அடைந்தனர். கெளபீனத்துடன் நின்றுகொண்டிருந்த மீனவப் பிள்ளைகளை புதுச்சேரி அரசாங்கச் சேவகர்களிருவர் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களை வறவேற்பதற்காக குவர்னர்ருக்கு மிகவும் வேண்டிய இரண்டாம் மட்ட அதிகாரி பிரான்சுவா ரெமி வந்திருந்தான்.. நான்கு ஆண்டுகளுக்குமுன் பெர்னார் புதுச்சேரியில் இருந்தகாலத்தில் இருவரும் பிரச்சினைப்பட்டு குவர்னர் தலையிட வேண்டியிருந்தது. பிரான்சுவாத் தன்னைப் புதுச்சேரி உருவாகக் காரணமாகவிருந்த பிரான்சுவா மர்த்தேனின் உறவினன், எனச் சொல்லிக் கொள்பவன். கப்பல் மத்தலோக்களை எதிர்பார்த்து, வெற்றிலையால் சிவந்த அதரங்களும், மைவழியும் கண்களுமாக, கடற்காற்றின் அலைக்கழிப்பில் விலகும் சேலையில், தளர்ந்த தனங்களுடன் காத்திருக்கும் விலைபோகா விலைமாதர்கள், அவர்களுக்குத் துணையாக வெற்றிலைச் செல்லத்துடன் இரண்டும் கெட்டான் மனிதர்களெனப் புதுச்சேரி கடற்கரை. கப்பித்தேன் தெலாமரும், பெர்னாரும் பிரான்சுவாவை நோக்கிச் சென்றார்கள். கை கொடுத்து வரவேற்ற பிரான்சுவா இருவரையும் பிரெஞ்சு முறைப்படி தழுவி வரவேற்றான். கப்பித்தேன் தன்னிடமிருந்த பயணம் மற்றும் கப்பற் தொடர்பான ஆவனங்களைப்
பிரான்சுவாவிடம் காண்பிக்க, அவன் அதனை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.
'கப்பித்தேன் உங்களுக்கு கோர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே வழக்கம்போல ஏற்பாடு செய்துள்ளது. குளித்துவிட்டு ஓய்வெடுங்கள். இரவு எழுமணிக்கெல்லாம் டினே( இரவு சாப்பாடு) தயாராகிவிடும். கோழியுடன், ஆற்று மீன்களும் ரொட்டியும், நீங்கள் விரும்பிக் குடிக்கும் உள்ளூர்ச் சாராயமும் உள்ளன. '
' பெண்கள் ? '
'அவ்ர்கள் இல்லாமலா ? எனக் கண்ணடித்த பிரான்சுவா, பெர்னாரை பார்த்தான். '
'மன்னிக்கவும் பெர்னார். உனக்கும் சகல ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன. நீ ஏற்கனவே தங்கியிருந்த வீட்டையே ஒழுங்கு செய்துள்ளோம்.. நாளை காலை குவெர்னரைச் சந்திக்கலாம். ' என்றவன், அங்கிருந்த இந்தியச் சேவகனைப் பார்த்தான். அதனை எதிர்பார்த்ததுபோல அவன் இவர்கள் அருலில்வந்து பயபக்தியுடன் நின்றான் '
' என்ன சொன்னதெல்லாம் ஞாபகத்தில்ருக்கிறதா ? ஐயா புதுச்சேரியில் தங்கும்வரை அவரது அனைத்து நலன்களையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். புரிந்ததா '
'உத்தரவு ஐயா! ' என்றவன் பதிலில் விஷமமிருந்தது.


தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------
1.De Saint-Malo j 'avons parti
Sur une frளூgate bien jolie
Pour s 'en aller dedan La Manche
Dedam la Manche vers Bristol
Pour aller attaquer Les Anglais
2. பாதுகாப்புப் பணியைச் செய்யும் மரக்கலங்கள்;


nakrish2003@yahoo.fr

நீலக்கடல் - அத்தியாயம் -4

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

TA CHAIR ETAIT PAREILLE A CELLE DES COCOS,
LES MARCHANDS TE PORTAIENT DES PAGNES COULEUR D 'AIR
ET DES MOUCHOIR DE TETE A CARREAUX JAUNE-CLAIR,
LABOURDONNAIS SIGNAIT DES PAPIERS D 'AMIRAUX
- FRANCIS JAMMES

காமாட்சி அம்மாளிடம் அத்தீவு அப்படியொரு பிரியத்தைக் கொண்டிருந்தது. தீவிலிருந்த சுமார் முன்னூறு இந்தியக் குடும்பங்களுக்கு காமாட்சி; வாழும் பெண்தெய்வம். கடந்த நான்கு ஆண்டுகளாக கைலாசத்திற்கும், தெய்வானைக்கும் மட்டுமல்ல பிரெஞ்சுத் தீவிற்கே அன்னையாக; வழிபாட்டுக்குகுரியவளானாள். 'காமாட்சி அம்மா! என் குழைந்தைக்கு, மார்முழுக்கச் சளி, மூச்சுவிடத் திணறுகிறது '. 'காமாட்சி அம்மா! மல்காஷ் ஆட்கள் எதனையோ கொடுத்தார்களென்று குடித்துவிட்டு இரண்டு நாட்களாகப் போதை தெளியாமலிருக்கிறார் '.


'காமாட்சி அம்மா! புரட்டாசி மாதம், கோவிந்தனுக்கும் பொங்கலிடவேணும், நீங்கள்தான் நடத்தி வைக்க வரவேணும். ' 'காமாட்சி அம்மா! நம்ம விருத்தாசலம் காட்டிற்குள் முயலைத் துரத்திக் கொண்டு போனவன் ஏதோ விஷஜந்து கடித்து உயிர் போய்விட்டது.. அந்திமக் கிரியைகள் செய்யவேணும். எப்படிச் செய்வது என்பதில் பாவாடைச் செட்டிக்கும், நாராயணசாமிப் பிள்ளைக்கும் தர்க்கமிருக்கிறது.. நீங்கள் அவ்விடம்வந்து எது சரி என்பதைச் சொல்லிப் போகவேணும் '. இப்படித் தீவின் நல்லவை தீயவைகளை நடத்திவைப்பதற்காக காமாட்சி அம்மாள் அத்தியாவசியமாகிவிட்ட உயிர்.. வெள்ளையர் பண்ணைகளில் அடிமைகளாக, அதிகாலையிலிருந்து இரவுவரை உழைக்கும் கறுப்பின மக்களுக்கும், இந்தியரகளுக்கும்கூடத் தங்கள் பறங்கி எஜமானர்களிடம் படுகின்ற கஷ்டங்களைத் தெரிவிக்கக் காமாட்சி அம்மாளிடம் வருவதுண்டு. காமாட்சியம்மாளிடம் பறங்கியர்கள் இறங்கிவந்ததற்குக் காரணமில்லாமலில்லை.


இந்தியர்களைத் தங்கள் விருப்பம்போல ஆட்டுவிக்க அவர்களுக்கும் காமாட்சியம்மாளின் தயவு வேண்டியிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் தனது குணத்தால் ஈர்த்திருப்பது நியாயமென்றாலும். அவரது உருவமும் அதற்கு உகந்ததாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். சொல்லப்போனால் இதுவே பிரதானமான காரணம். செந்தாமரையொத்த அடக்கமான நிறம், ஒற்றை நாடி, தெளிவும் சாந்தமும் இணைந்த முகம். முன்னால் நிற்பவரை முழுவதுமாக வாசிக்கும் கண்கள், சீரான நாசி. நெற்றியில் துலங்கும் திருநீறு; முடிந்தபோதெல்லாம் 'ஈஸ்வரா ' என உச்சரிக்கும் உதடுகள், தினந்தோறும் கசக்கிக் கட்டும் தூயவெண்ணிறச் சேலையென நடமாடிவந்தவர் தீவிலிருந்த புதுச்சேரி தமிழர்களுக்கான குலதேவதை.


எல்லையில் குறுகியும், மக்களெண்ணிக்கையில் குறைந்துமிருந்தத் தீவில் எந்தச் செய்தியும் சீக்கிரம் பரவிவிடும். நல்லதோ கெட்டதோ பறங்கியர், கிறேயோல், தமிழர்களென கூடிவிடுவார்கள். அடுத்துவரும் நாட்களில் இது போன்ற செய்திகளை, சாலைகளிலோ, கரும்புப் பண்ணைகளிலோ, மரக்கலங்கள் கட்டுகின்றயிடத்திலோ, ராணுவத்திற்கான கசெர்ன்கள் அல்லது வெள்ளையர்களூக்கான 'வில்லாக்களை எழுப்பிக்கொண்டோ ' வெள்ளையரல்லாத மற்றமக்கள் விவாதித்தபடியே, உழைத்துக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களே அத்தீவிவின் ஆரம்பகால தமிழர்களுக்கு உழைத்த நேரம்போக உட்கார்ந்து பேச உதவியது. மயக்கத்திலிருந்த காமாட்சியைச் சுற்றிப் பயத்துடனும் கவலையுடனும் முகங்கள். கறுப்பு, பழுப்பு முகங்கள் கபானின் உள்ளேயும், வெளியேயும் இறைந்து கிடந்தன.


கபானுக்கு வெளியே கவர்னருக்கு வேண்டப்பட்டவரான மிஸியே குரோ, கரும்புப் பண்ணை வைத்திருக்கும் மிஷல் தெலகுருவா, மதாம் தூர், பிரான்சிலிருந்து சமீபத்தில் தீவிற்குச் செல்வம்சேர்க்க வந்திருக்கும் தவீது ஆகியோரை முக்கியமானவர்களாகக் கொள்ளலாம்.


காமாட்சி அம்மாளைச் சீனுவாசநாயக்கர் மனைவி, விசாலாட்சி மடியிலிருத்தியிருந்தாள். அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாவின் வலதுதுகரத்தைப் பற்றி நாடிபார்த்து நிம்மதியாய்ப் பெருமூச்சுவிட்டார். சற்றுத் தள்ளி வரிசையாக உட்கார்ந்திருந்த சீனுவாசநாயக்கர், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்து செட்டியாரென அனவருக்கும் இப்போது தெம்பு வந்திருந்தது. கபாானுக்கு வெளியே வாயிலுக்கருகில், ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த முனுசாமி, எட்டியான், அஞ்சலை, பிச்சைக்கும் காமாட்சியம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை என்றசெய்தி பரவச் சற்று முன்னர்வரை சோகத்தைச் சுமந்திிருந்த முகங்களில் மீண்டும் சந்தோஷம். தெய்வானையைத் தாங்கியிருந்த அவள் தோழி, கறுப்பினப் பெண் சில்வியா, மெல்ல தோளினைத் தட்டி விடயத்தைச் சொல்லத் தெய்வானை, கலங்கியைருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று, வந்திருந்த அனைவருக்கும் வெல்லப் பானகம் ஏற்பாடு செய்தாள்.
கடந்த இரண்டு மணிநேரமாகத் தன்நினைவிற்கு வந்த தெய்வங்களையெல்லாம் பிரார்த்தித்துக்கொண்டிருந்த கைலாசத்திற்கும், தனது அன்னைக்கு எந்தத்தீங்கும் ஏற்படவில்லையென அறி,ய மகிழ்ச்சி.. அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாளின் விழிகளின் கண்ணிரப்பைகளை, விரல்களால் மெல்ல மேலே உயர்த்திப் பார்த்தார். தலைலிருந்த காயத்தினை வெந்நீர் கொண்டுவரச் செய்து சுத்தமான துணியால் அழுந்தத் துடைத்து பச்சிலை வைத்துக் கட்டினார்.


'தெய்வானை..! அம்மாவிற்குக் ஒரு தாக செம்பில் பானகம் கொடு ' என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத், தம்பிரான் தனது சுருக்குப் பையிருந்து கொஞ்சம் திருநீறு எடுத்தவர் கணீரென்று சுற்றிலுமுள்ளவர்களை மறந்து,
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவாய் உலக நாடாய வடி
செறிகதிரும் திங்களுமாய் நின்றாடி தீத்திரளாய் உள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவுமடி மந்திரமும் தந்திரமும் ஆயவடி
செறிகெடில் நாடர் பெருமானடி திருவீரட்டானத்தெஞ் செல்வனடி '
தேவாரப் பதிகத்தை இனிய குரலெடுத்துப் பாடிமுடித்து, திருநீறைக் கைலாசத்திடம் கொடுத்து காமாட்சி அம்மாளின் நெற்றியில் பூசச்செய்தார்.. வெளியே காமாட்சியம்மாள் உடல் நலன் தேறிவிட்டது எனவடிமைகள் சொல்லக் கேட்டு பல்லக்கில் புறப்படவிருந்த பறங்கியர்களுக்கு தெம்பு வந்தது. தம்பிரானின் தேவாரப்பதிகத்தைக் கேட்டு காபானுக்குள்ளிருந்தக் கூட்டம் சூழல் மறந்து 'ஆஹா ' வென்றது. எல்லோருடையக் கண்களும் நனைந்திருந்தன. கபானுக்கு வெளியே மலர்ந்திருந்த முல்லையும் மல்லிகையுங்கூட இசையில் மயங்கிப் பூக்கைளைச் சொரிய, குருத்துவாழைகள் அவற்றைக் குனிந்து வாங்கிக் கொண்டன.


காமாட்சியம்மாள் மெல்ல கண்விழித்தார். தன்னருகே கூடியுள்ளவர்களைக் கண்டு நிலைமையை ஓரளவு ஊகிக்கமுடிந்தது. ஏதோ பேசமுற்பட்டபோது, தம்பிரான் 'இப்போதெதுவும் வேண்டாம்!.. பிறகு பேசலாம் என்பதாக, கையசைக்க, காமாட்சியம்மாளுக்குப் புரிந்திருக்கவேண்டும், அமைதியானார்.


'தெய்வானை, உங்கள் காபானுக்குள் வருவது எங்களுக்கெல்லாம் தெய்வ சந்நிதிக்குள் நுழைவதுபோல.இன்றைக்குத் தம்பிரானின் பாடலும் சேர்ந்துகொள்ள, தில்லையம்பலத்தில் நாங்கள் இருப்பதாக நினைவு. முற்றிலுமாக இருட்டுவதற்குள் அவரவர் இருப்பிடத்திற்குப் போய்ச் சேரவேணும். எங்களுக்கு விடை கொடம்மா ' சீனுவாசநாயக்கர்தான் முதலில் வார்த்தையாடிவர்.


' எல்லோரும் கொஞ்சம் பானகமாவது பருகிவிட்டுப் போகலாம். பசும்பால் கூடவைத்திருக்கிறேன். ' - மெல்லிய குரலில் தெய்வானை.
'நன்றியம்மா. பக்கத்திற்தானே இருக்கிறோம் ? அம்மாவும் எழுந்து நடக்கட்டும். இப்போதைக்கு அவர்களுக்கு ஓய்வு தேவை. அப்படித்தானே தம்பிரான் ? ' தான் சொல்வது சரிதான் என்பதுபோல தம்பிரான் பக்கம் நாயக்கர் திரும்பிப்பார்த்தார்.


வைத்தியர் அருணாசலத் தம்பிரான் மெல்லச் சிரித்தார். 'நாயக்கர்! உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு ஏது ? நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத்தானிருக்கும். அப்படியே ஆகட்டும் ' என்றார்.
நாயக்கர்களும், மற்றவர்களும் விடை பெற்றுக்கொண்டு ஒருவர்பின் ஒருவராகப் புறப்பட்டுச் சென்றார்கள். இறுதியாக நின்றவர் அருணாசலத்தம்பிரான்.


தெய்வானையிடம்,
'தெய்வானை.. அம்மாவுக்கு சுடச்சுடக் கஞ்சி கொடு. தெம்பு கிடைக்கும். சிறிது நாட்கள் ஓய்வெடுக்கட்டும். நான் நாளை 'மொகா ' வரை போகவேண்டும்; நம்ம சடையன் மகள் 'பூபடைந்து ' விட்டாள்.. அம்மாவும் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. இதுபோல ஆகிவிட்டது. நான் நாளைக்கு மறுநாள் வந்துபார்க்கிறேன். கைலாசம் நாளைக்கு நீயும் கட்டுமானவேலையெதற்கும் போகாமல் கபானிலிருந்து அம்மாவைப் பார்த்துக்கொள். எப்படியும் இன்றிரவு மிஸியே குரோமூலம் குவர்னருக்கும் செய்தி எட்டிடும். '


'தங்கள் விருப்பப்படியே நடக்கிறேன் ஐயா ' எனப் பதிலிறுத்தான் இளைஞன் கைலாசம்.


தம்பிரான் புறப்படுவதற்கெனவே காத்திருந்ததுபோலக் காமாட்சியம்மாள் விழித்துக் கொண்டாள். 'கைலாசம், தெய்வானை என் செல்வங்களே உங்களுக்கொன்றும் ஆகவில்லையே. அருகில்வந்த கைலாசத்தையும் தெய்வானையையும் அவேசத்தோடு இறுகவணைத்துக் கொண்டாள்.


'அங்கே யார் ? சில்வி நீயா ? இப்படி அருகில் வாம்மா. உன்னைப் பார்த்து இரண்டு கிழமையிருக்குமே. ? உன் பெற்றோர்கள் அந்த ரெனோ தடியனிடந்தான் வேலையிலிருக்கின்றார்களா ? '


சில்வியாவும் இப்போது காமாட்சி அம்மாளிடம் நெருங்கி நின்றாள்.
'அம்மா.. இப்போதைக்கு உங்களுடைய நலமே முக்கியம். உங்களுக்கு ஓய்வு தேவையென வைத்தியர் தம்பிரான் சொல்லியிருக்கிறார். ' எனச் சில்வியா பதிலிறுக்க, தெய்வானையும் கைலாசமும் ஆமாம் என்று தலையசைத்தனர்.


'இல்லைப் பிள்ளைகளே. நீங்கள் உடனே ஒரு காரியஞ் செய்யவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்தென என்மனம் அஞ்சுகின்றது. எந்த ஆபத்து உங்களை நெருங்கக் கூடாதென இத்தீவிற்கு வந்தோமோ, இப்போது நடந்துவிடுமென்கிற அச்சம். இவ்வளவு நாட்களாக இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் நமது நம்பிக்கைக்கு உரியவர்கள் என நம்பினேன். இன்றைக்கு என்மீது நடந்த தாக்குதல் அதனைப் பொய்யாக்கிவிட்டது.

'ஈஸ்வரா! நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம் ? ஏனிப்படிச் சோதனை செய்கிறாய். ? '

'அம்மா..! நீங்கள் இவ்வளவு கவலையை மனதிற் புதைத்துக் கொண்டுதான் இத்தனை நாட்களாக வாழ்ந்து வந்தீர்களா ? நாங்கள் என்ன சின்னக்குழைந்தைகளா. எதையும் தாங்குகின்ற எதிர்க்கின்ற வாலிபப் பிராயத்திலிருக்கிறோம். இப்போதாவது உங்களது மனச் சுமையை இறக்கிவையம்மா ' - கைலாசம்.


' இல்லை மகனே. அதற்கு முன்னதாகவொரு காரியம் உடனடியாக நடந்தாக வேண்டும். '


' என்ன செய்ய வேண்டும் ? அம்மா! '


' பாம்ப்ளுமூஸ் அருகேயுள்ள பெரியமூங்கிற்காடுவரை சென்றாக வேண்டும். அங்குள்ள துர்க்கை பீடத்தருகே, வலது புறத்தில் இரண்டு தென்னைகள் ஒன்றையொன்று பின்னியிருக்கும். அதன்கீழே இரண்டு அல்லது மூன்றடி தோண்டினால் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி கிடைக்கும் அதனை உடனே கொண்டுவந்துவிடுங்கள்.


' என்னம்மா ? இந்தநேரத்திலா ?


' ஆமாம் இந்தநேரத்தில்தான். இப்போதே புறப்பட்டாகவேண்டும். ஏன் பயமாகவிருக்கிறதா ? நீ ஆண்மகன்தானே ?. '


'அம்மா.. '


' போடா போ சொன்னதைச் செய்.. அதுவரை எந்த ஆகாரமும் எனக்கிறங்காது '


'கைலாஸ்..! நானழைத்துப் போகிறேன் வாருங்கள். ' சில்வி அவனது தோளைத் தொட்டு அழைத்தாள்.


'அண்ணா..! நான்.. '


'இல்லை தெய்வானை நீ அம்மாவுக்குத் துணையாகக் கபானில் இரு, நாங்களிருவரும் போய் வருகிறோம் '.


கைலாசமும் சில்வியும் கபானைவிட்டு இறங்கி, இன்னும் முழுச்சாலையாகப் பரிணமிக்காத பாதையில் நடக்கவாரம்பித்தார்கள். நட்சத்திரங்கள் இல்லாத கும்மிருட்டு. தீவில், நல்லபகல் நேரத்திலேயே சரைளைக் கற்களில் இடிபட்டு நடக்கவேண்டும். தொட்டால் ஒட்டிக் கொள்ளுமிருட்டில், கபான்களை பின்னேதள்ளி பாம்ப்ள்மூஸ் செல்லும் கரடுமுரடான பாதையில் நடப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.


சில்வியா முன் செல்லக் கைலாசம் பின்னே நடந்தான். காற்றில் மரங்கள் கூடுதலாகவே அசைந்து அச்சமூட்டின. எங்கேயோவொரு ஆந்தை அலறிவிட்டுச் சடசடவென இறக்கையடித்து எழுந்து பறக்கின்ற சப்தத்தைக் கேட்டு, இருவருமே தயங்கி நின்றனர். துர்க்கைபீடமிருக்கும் பெரிய மூங்கிற்காடு திசையில்- பாதையைய விட்டு இறங்கிக் கற்றாழை, கோரைப்புற்கள், பனை வடலிகள் எனவொதுங்கி, அரைமைல் தூரம் ஒற்றைத் தடத்தில் நடந்தனர். இதற்குள், இருவருக்குமே இருட்டுப் பழகிவிட்டிருந்தது. சுமார் பத்தடி தூரத்தில் துர்க்கைப் பீடந்தெரிய மனதைத் திடப்படுத்திக்கொண்டு இருவரும் நடந்தனர். இப்போது கைலாசத்தை முன்னே செல்ல அனுமதித்துச் சில்வி பின் தொடர்ந்தாள்.
சில அடிகள் எடுத்துவைத்திருப்பார்கள். திடாரென்று ஓர் அந்நியமணம், சில்வியின் நாசி மடல்களைத் தீண்டியது. சில்வியின் மனது, வரவிருக்கும் ஆபத்தை எச்சரித்தது. முன்னே செல்லும் கைலாசத்தின் வலது கையினைத் தொட்டிழுத்தாள். அவளின் எச்சரிக்கையைப் புரிந்து.கொள்ளவியலாத கைலாசம், வாய் திறந்து காரணம் கேட்பதற்குள் முந்திகொண்டாள். அவன் உதடுகளின் பிளவுகளுக்கிடையில் தனது ஆள்காட்டி விரலை அழுந்தப் பதித்தாள்.


'உஸ். .. கைலாஸ் நம்மை யாரோ பின் தொடருகின்றார்கள். அமைதியாக இரு. '


'எப்படிச் சொல்கிறாய் ? '


' எங்களால் அறியமுடியும். காற்றில் வாசம் பிடித்தே மனிதர்களா மிருகங்களா என்பதை எங்களால் உணர முடியும். என்பதை நீ அறிந்தவன் தானே ? '


உண்மைதான். மோப்ப மூலம் என்ன விலங்குகள் எங்கே இருக்கின்றன என்பதைக்கூடத் தெளிவாக சில்வி சொல்லிவிடுவாள் என்பதைக் கைலாசம் அறிவான்.


'இப்போது என்ன செய்யலாம் ? '


' அதோ அங்கே.. அந்தப் புதரின் பின்னே தற்போதைக்குப் பதுங்கிக்கொள்ளுவோம் '


இருவரும் புதரின்பின்னே மெல்லநடந்து ஒளிந்துகொண்டனர்.. இவர்கள் பதுங்கியிருந்தப் புதரினை நோக்கி இப்போது காலடிகள். சில்வியின் இதயம் அதிவேகமாக இயங்கியது. வீசுகின்ற குளிர்காற்றால், உடல் நடுக்கம் கண்டது. அவளை அமைதிப்படுத்துகின்றவகையில், கைலாசம் அருகிலிழுத்து அணைத்துக்கொண்டான். உடலையொட்டியும் மனதை ஒட்டாமலும் காத்திருந்தனர்.

தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் - 5

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை....... குயில்பாட்டு - பாரதியார்.



கிழக்கே வங்காள விரிகுடாவிற்கு மேலே அக்கினிக்கோளமாய்ச் சிவந்திருந்த சூரியன். அதனைச்சுற்றி கும்மட்டியிலிட்ட வெள்ளியாய் மேகம். அடிவயிற்றில் சூரியனைச் சுமக்கின்ற சுகத்தில் வெளுத்திருக்கும் வானம். அவ்வழகில் ஈர்க்கப்பட்டுத் தலை உயர்த்திப் பின்னர் நீலத்திரையில் முகம் மறைக்கும் அலைகள். அவற்றினூடே கிழக்குத் திசையில் தலையை உயர்த்தி நீந்திச் செல்லும் படகுகள். அதிகாலைக்கு ஆரத்தி எடுக்கும் கடலோர நுரையலைகள். கடலையொட்டி வரிசையாக நிறுத்தபட்டிருந்த பீப்பாய்களை நிரப்ப, செம்படவப் பெண்கள் தள்ளியிருந்த கிணறுகளிலிருந்து சும்மாடுகளில் பருத்த மார்புகள் அசைய குடங்களில் நீர்சுமந்து ஊற்றிக்கொண்டிருக்க, அவற்றில் தலையை நனைத்து, பின் சிலிர்த்து எழுந்தோடும் நீர்க்காகங்கள். தைமாத சாம்பல்வண்ணமேகங்கள், வெண்பனிச்சாரல்.

கோட்டைக்குள்ளிருந்து ஒலிக்கும் தேவாலயமணி, வேதபுரீஸ்வராலயத்தில் ஓதுவார் பாடும் தேவாரம், வரதராசபெருமாள் ஆலயத்திலொலிக்கும் ஆழ்வார் திருமொழி, வழுதாவூர்ச்சாலையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளில் இடையிடையேயிருக்கின்ற ஆலமரங்களிலிருந்தும், இலவமரங்களிலிருந்தும் வைகறைக் குரலெழுப்பும் காக்கைகள், குயில்கள், வெளவால்கள், தூக்கணாங்குருவிகள் - அடடா..புதுச்சேரி விழித்துக் கொண்டது.

புதுச்சேரித் துறைமுகத்தில் வந்து சேர்ந்திருந்த 'லெ பொந்திஷேரி ' என்கின்ற வணிகக் கப்பலும், பாதுகாப்பாக வந்திருந்த போர்க்கப்பல்களான 'கொர்சேர் ' கப்பல்களும் கரையிலிருந்து பாதுகாப்பாக மிகவும் விலகி நங்கூரமிட்டிருந்தன. அப்படி நிற்கக் காரணமிருந்தது. அக்டோபரிலிருந்து ஜனவவரிவரை சில நேரங்களில் பிப்ரவரியிற்கூட வீசுகின்ற புயற்காற்றுக்குப் பயந்தாகவேண்டும். 'லெ பொந்திஷேரி 'யிலிருந்து பொதிகள் இறக்கபட்டுச் சுற்றிலும் சூழ்ந்துநின்ற ஷெலேங்கு(Chelingue)படகுகளில் சுறுசுறுப்பாக ஏற்றப்பட்டன. படகுகள் செலுத்தும் செம்படவர்களின் குரலும், பொருட்களை இறக்குந் தினக் கூலிகளின் குரல்களும் கோட்டைக்குள்ளிருந்த கிடங்குகள்வரை தொடர்ந்தன.

கடற்கரைக்கு நேர் எதிரே, ஆபத்தைத் தவிர்க்கின்றதோ இல்லையோ அழகாகப் பிரான்சிலுள்ள 'வொபான் ' கோட்டைகளின் சாயலில் வடிவமைக்கபட்டிருந்த சென் - லூயி(Saint-Louis)க் கோட்டை. ஐந்து கொத்தளங்களும் இரண்டு பெரிய கதவுகளுடன்கூடிய வாயில்களும் இருந்தன. முதல்வாயில் பிரதானவாயில். குவர்னர், அவரது குடும்பத்தினர், பிரஞ்சு இந்திய குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள், துபாஷ், மதகுருமார், அரசின் முக்கிய விருந்தினர்களென அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களின் உபயோகத்திலிருந்த வாயில். இதரதரப்பினருக்கும், அடிக்கடி சண்டைபிடித்துக்கொண்டு பிரெஞ்சு நிர்வாகத்திடம் தஞ்சம் புகும் துக்கடா இராசாக்களுக்கும், நிலவில்லாப்பின்னிரவுகளில் மூடிய பல்லக்குகளில் தாசிகள் வந்துபோகவும் உபயோகத்திலிருந்தது.

இரண்டம்ாவாயில் எனவழைக்கபட்ட டெல்பின் வாயில். கோட்டைக்குள்ளே குவர்னர் மாளிகை. அதனையடுத்து சொல்தாக்களின் (படை வீரர்களின்) 'கசெர்ன் ' எனவழைக்கப்படும் குடியிருப்புகள். 'கப்புசென் ' தேவாலயம், வணிகவளாகமென வெள்ளையர்களுக்கான இதயப்பகுதி. இப்பகுதிகளையொட்டி வடக்குத் தெற்காகப் பரவியிருந்த பறங்கியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 'வெள்ளையர் குடியிருப்பு ' (La Ville blanche) அதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கான 'கறுப்பர் குடியிருப்பு '(La Ville noire). இவ்விரு பகுதிகளையும் பாதுகாக்கின்றவகையில் சுமார் ஏழு மீட்டர் உயரத்திற்குப் பலமான சுவர்கள். இச்சுவர்களுக்கிடையில் சிப்பாய்களின் பாதுகாப்புடன் கூடிய மூன்று சிறிய வாயில்கள். அவை முறையே வில்லியனூர், வழுதாவூர், மதராஸ் வாயில்கள் எனப்பட்டன.

கோட்டையை ஒட்டி குவர்னர் துய்மா ஏற்படுத்தியிருந்த அகழியை, அவருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த குவர்னர் துய்ப்ளெக்ஸ் முடித்திருந்தார்.
பெர்னார் தங்கியிருந்த குடியிருப்பு, பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் புதுச்சேரிப் பிரிவின் துணை நிர்வாகி வேன்சான் குடியிருப்புக்கருகே, ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பறங்கியர்க்கான குடியிருப்பைப்போலவே முகப்புடனும், உயர்ந்த தூண்களில் நிறுத்தப்பட்டு, கீழைநாடுகளுக்கேயுரிய செடிகள், கொடிகள், மரங்களின் அடர்த்தியில் - சூழலில், சற்றே ஒளிந்து, கடலைப்பார்த்த வராண்டாவுடன் அமைந்த குடியிருப்பு.. உயர்ந்த தளம். எப்போதாவது, குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பாராதவிதமாக வீசுகின்ற மண்காற்றினைத் தடுப்பதற்காக தொங்கவிடப்பட்ட மிகவும் தடித்த வெட்டிவேராலான திரைகள். குளிர்காலமென்பதால் அவை மேலேசுருட்டப்பட்டு உத்தரத்தில் கட்டபட்டிருந்தன. நடுக்கூடத்தில் இருக்கைகளுக்குமத்தியில் ஒரு பங்கா. அதன் நீண்டகயிறு கிழக்கேயிருந்த சன்னலையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. கீழை நாடுகளின் பட்டுவிரிப்புகள், புதுச்சேரியில் தீட்டபட்ட வண்ணத் துவாலைகள், சீன, பாரசீக ஓவியங்களென என நம்மை ஆச்சரியமூட்டும் அலங்காரம். இதுபோதாதென்று, பித்தளைப் பூண்களும் - முகப்புகளும் கொண்ட தேக்கு, மஹோகனி, கருவாலி மரங்களாலான, தந்தங்கள் அல்லது முத்துச் சிப்பிகள் பதிக்கப்பட்ட, மேசை நாற்காலிகள், அலமாரிகள், நிலைபெட்டிகள். தேவையான இடங்களில் காகித்தாலான சீனப் பரவான்கள். மொத்தத்தில் நேர்த்தியும் வசதியும் நெருங்கியிருந்த குடியிருப்பு.

இவனது குடியிருப்பைக் கவனித்துக் கொள்வதற்காக இரண்டு சிறுவர்களை குப்பன்- சுப்பன் பெயர்களில் பக்கத்துக் குடியிருப்பிலிருக்கும் நிர்வாகி அனுப்பியிருந்தார். அவர்களிருவரும் புதுச்சேரிக்குத் தென்மேற்கேயிருந்த பாகூரிலிருந்து பஞ்சகாலங்களில் விலைக்கு வாங்கப் பட்டிருந்த அடிமைககள். இது தவிர அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த கீழ்சாதித் தமிழர்கள் இருவரும் பணியிலிருந்தனர். பறங்கியர்களுக்கு இஇப்படியான தமிழர்களை வைத்துக் கொள்வதிலொரு செளகரியமிருந்தது. மற்றவர்களென்றால் அடிக்கடி தலையைச் சொறிகின்ற ரகம்.. தோட்ட வேலை செய்பவன், தோட்டி வேலையை மறுப்பான், துணிதுவைப்பன் முடி வெட்டினால் தன் சாதிக்கு அவமானமென்பான்.

இவர்கள் முகம்ஞ்சுளிக்காமல் எல்லா வேலைகளையும் செய்தார்கள். இவர்களைத் தவிர, இதர வெள்ளையர்களின் குடியிருப்புக்களையொப்ப தமிழர்களுக்கும், பறங்கியருகுமிடையில் இருந்துகொண்டு ஊழியர்கைளை வேலைவாங்கவும், எஜமான் பறங்கியனின் இந்தியச் சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கவும், மொழி பெயர்க்கவும் இங்கேயும்மொரு 'துபாஷ் ' (Dubash or Doubachi பெயர் -பலராம் பிள்ளை.
துபாஷ் பலராம்பிள்ளை வெளியே அதட்டிக் கொண்டிருந்தார்.. அவர் குரல்கேட்டு பெர்னார் விழித்துக் கொண்டான். கப்பற் பயணக் களைப்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. இலவம் பஞ்சினாலான மெத்தை, பருத்தி விரிப்புகள் அவனைக் கூடுதலாகக் கண்ணயருமாறு வற்புறுத்தின. பின்னிரவுக் கனவில் தெய்வானை. அவள் நிலவு முகமும், நிலம் நோக்கிய பார்வையும், இருளொத்த கூந்தலும் இரண்டாய்ப் பிளந்த மாதுளை அதரங்களும், உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் அவனைத் தேடிவருபவை. அவன் உயிரிற் கலந்த மூச்சுஅவை. அம்மூச்சுக்காக, இவனது உயிர், ஆற்றவேண்டிய காரியங்கள் வரிசையாகவுள்ளன. கட்டிலிருந்து எழுந்து சப்பாத்தணிந்து, கிழக்கேவிருந்த பெரிய சன்னலையொட்டி நின்றான்.

திரையினை நீக்கியதும் கண்கள் முழுக்க நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலைகளால் விடுக்கும் அழைப்பு. அதில் இறங்கி வா! எங்கள் தேவதை தெய்வானையிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்கின்ற உறுதிப்பாடு. 'நிலம் கடந்து, நீரிறங்கி தெய்வானையைக் கைபிடித்து வானமேறி யுகங்கள்தோறும் ஜீவிக்கவேண்டும் ' இயலுமா ? 'இயேசுவே ' முணுமுணுத்தான்.

'ஐயா.. கபே..... '

சீனப் பீங்கான் குவளையில் பால் கலவாத கறுப்பு காப்பியும், கிண்ணத்தில் சர்க்கரையுடனுமான தட்டத்தினைப் பணிப்பெண் தாழ்த்திப் பிடித்தாள். பெர்னார் காப்பியுடனான குவளையையும், ஒரு கரண்டியும் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு அவளை அனுப்பிவைத்தான்.

வணங்கியவாறு பின்சென்றவளிடம்
' பலராம்பிள்ளையை உள்ளே வரச்சொல் ' என்றான்.

இவன் குரலுக்காகவே காத்திருந்ததுபோலப் பலராம்பிள்ளை உள்ளே ஒடிவந்தார். குனிந்து வணங்கினார். குனிந்ததால் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்தது. அதனை எடுத்து இருகைகளிலும் பிடித்துக்கொண்டு மீண்டும் பணிவாகக் குரலைத் தாழ்த்திப் பிரஞ்சில் கேட்டார்.

' ஏதாவது காரியம் ஆகவேண்டுங்களா '

'மிஸியே பல்ராம் புள்ளே. உடனடியாக நான்செய்யவேண்டியது, புதுச்சேரி குவர்னரைச் சந்தித்து, பிரஞ்சுத்தீவின் குவர்னரிடமிருந்து கொண்டுவந்துள்ள கடிதத்தைச் சேர்ப்பிக்கவேண்டும். பிறகு மேன்மைமிகு புதுச்சேரி குவர்னர் வற்புறுத்தினால் அவருடன் மதிய உணவு. பயணக் களைப்பிலிருந்து நான் முழுவதுமாக விடுபடவில்லையென்பதால்.அதன்பிறகு கொஞ்சம் ஓய்வு.. பிற்பகல், புதுச்சேரியைச் சுற்றிப்பார்த்துவரலாமென்கிற எண்ணம்.. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்தது.

இது தவிர உடனடியாக எனக்கு இரண்டு காரியங்கள் ஆகவேண்டும். முதலாவதாக, புதுச்சேரியிலிருக்குவரை நம்பகமான இளைஞன் ஒருவன் துணைக்கு வேண்டும். இரண்டாவதாக ஒரு நல்ல அராபியக் குதிரையொன்று எனது உபயோகத்திற்காக புதுச்சேரி நிருவாகத்திடம் கேட்கப்படவேண்டும்.. '

'பிரான்சுவா துரை அனுப்பியதாகக் கூறிக்கொண்டு காலையிலிருந்து உங்களுக்காக தேவராசன் என்கின்ற சிப்பாய் ஒருவன் காத்திருக்கின்றான் பிரபு!.. '

'மிஸியே பலராம் புள்ளே.. நாமிருவரும் தனித்திருக்கும்போது நீங்கள் என்னை பெர்னார் என்றே அழைக்கலாம். நான் வயதில் சிறியவன் '

' இல்லை துரை.. என்னவிருந்தாலும் நாங்கள் உங்களை அண்டிப் பிழைக்கின்றவர்கள். '

'வேண்டாம் புள்ளே எனக்கந்தச் செயற்கை மரியாதைகளில் விருப்பமில்லை. வேண்டாமென்றால் வேண்டாம். அப்படி அழைப்பதுதான் விருப்பமென்றால், நீங்கள் வேறுயாரிடமாவது துபாஷாகவிருக்கலாம் '

'ஐயா..! '

' சரி.. சரி இனி அப்படியென்னை அழைக்கமாட்டார்களென்றே நம்புகிறேன். நான் சொன்னவற்றை செய்யுங்கள் '

'பிரான்சுவா துரை அனுப்பிய தேவராசன்பற்றித் தங்களிடம் விண்ணப்பித்தேனே '

'மன்னிக்கவும். அவனை நேற்றே வரவேண்டாமென்று சொல்லியிருந்தேனே. ஏதேனும் காரணங்கள் எடுத்துரைத்து அவனைப் பக்குவமாக அனுப்பிவிடுங்கள். எனக்கு வேறொரு நம்பகமான ஆள் வேண்டும். '

'அப்படியே! தங்கள் மனசுபோல நடக்கிறேன். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குவர்னர் சமூகம் செல்லலாம். நான் வெளியே காத்திருக்கிறேன். ' மீண்டும் துபாஷ் பல்ராம்பிள்ளை பணிவாகத் தனதுப் பதிலினைத் தெரிவித்தார்.

'பல்லக்கு வேண்டாம்.! இங்கிருந்து குவர்னர் மாளிகைக்குச் செல்வதற்குப் பல்லக்கு எதற்கு ? நடந்தே போகலாம்.. நீங்கள் இங்கேயே இருந்து நான் சொன்ன மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

முத்தியால்பேட்டைவரை சென்று வேலாயுதமுதலியார் என்பவர் பற்றிய முழுத் தகவல்களை அறிந்துவாருங்கள். இது ரகசியமாக இருக்கட்டும். மாலை நாம் இருவரும், இரவு உணவிற்குப் பிறகு முழுவதுமாக பேசுவோம். '

' அவ்வாறே ஆகட்டும் மிஸியே '

'இல்லை, அப்படி இல்லை பெர்னார் எனவழையுங்கள் '

' அவ்வாறே ஆகட்டும் பெர்னார் ' தயங்கியவாறே கூறிவிட்டுச் சென்ற பலராாம் பிள்ளையை நினைத்துப் பெர்னாருக்குச் சிரிப்புவந்தது.
காலை பதினோருமணிக்கு, பெர்னார் குவர்னர் மாளிகையை அடைந்தபோது, குவர்னர் துய்ப்ளெக்ஸ், மதாம் ழான் அல்பெர்த் துய்ப்ளெக்ஸ் பொறியியல் வல்லுனர் பராதீ, குவர்னருக்கு வேண்டப்பட்டவனும் சீனா, பிலிப்பைன்ஸ் வணிகக்கப்பல்களோடு பயணிப்பவனுமான பிரான்சுவா கார்வாலே, பெத்ரோ கனகராயமுதலியார், மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகிகள் வட்டமாகக் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்து மதுவருந்திகொண்டிருந்தனர்.

முதலியாரைத்தவிர அனைவரது கைகளிலும் மதுக் கோப்பைகளிருந்தன. துணைக்குப் பொரித்த மீன்கள், முதலியார் தனது இல்லத்திலிருந்து கொண்டுவந்திருந்த இறைச்சி உருண்டைகள், பிரான்சிலிருந்து வந்திருந்த 'சொஸ்ஸிஸ்ஸோன். '

'மேன்மைமிகு கவர்னருக்கும் மற்றவர்களுக்கும் வணக்கம் ' கூறியவன், அருகிலிருந்த மதாம் ழான் துய்ப்ளெக்ஸ் வலது கரத்தை மெல்லப்பற்றிக் குனிந்து முத்தமிட்டுத் தன் வணக்கத்தை அவளுக்கும் தெரிவித்துவிட்டு, எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

'உட்கார்! பிரெஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயத்தைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் பருகு ' குவர்னர் துய்ப்ளெக்ஸ்
'நன்றி. இப்போது எனக்கு வேண்டாம். '

'அப்பெரித்திஃப் ' ஆக கொஞ்சமேனும் பருகு. எங்களுக்கும் உற்சாகமாகவிருக்கும். நன்கு ஓய்வெடுத்தாயா ? '
'நன்கு தூங்கினேன். உங்களைக் காணவேண்டுமென்ற கடமையுள்ளதல்லவா ? அதனால் வந்திருக்கிறேன்.

' இச்சாராயம் மிகவும் அருமை. பிரஞ்சுத் தீவுத் தயாரிப்பா ?.
' பராதி.
' உண்மை!. மிஸியே பராதி! இது பிரஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயம். கரும்பிலிருந்து தயாரித்திருக்கின்றார்கள் குவர்னர் லாபொர்தெனே எனக்காகவென்று ஐம்பது போத்தல்களைக் கொடுத்துவிட்டிருக்கிறார். '
'மிகவும் அருமை. இதுவரை இப்படியொன்றை அருந்தியதில்லை. கூடுதலாகச் 'சொஸ்ஸிஸ்ஸோன் ' வேறு. ' கார்வாலே ஆமோதித்தான்.

'பிரஞ்சுத் தீவில் குறிப்பாக போர் லூயி (Port Louis) யின் கட்டுமானப் பணிகள் எவ்வாறு உள்ளன. ? '
' இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற தமிழர்களின் திறனால் வேலைகள் மிகத் துரிதமாக, மேன்மை மிகு குவர்னர் எண்ணத்தைப் போல நடந்து வருகின்றன. நமது தாய்நாட்டிலிருந்தும் பொருளீட்டுவதற்கெனத் தீவுக்கு அவ்வப்போது இரண்டொரு குடும்பங்கள் ஆர்வத்துடன் வந்த வண்ணமிருக்கின்றனர். திவீல் எங்கே கால்டி எடுத்து வைத்தாலும் கட்டுமானப் பணிகள். எல்லாவற்றையும் செம்மைப்படுத்த
வேண்டியுள்ளதால், சற்று கடுமையான வாழ்க்கை. '

' மிஸியே பராதி.. புதுச்சேரி நாணயச்சாலை வேலைகள் எவ்வாறுள்ளன ? முன்னேற்றம் கண்டுள்ளதா ? ' - பெர்னார்

'குறிப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் உள்ளது.. ஓரளவு உபயோகத்திலும் இருக்கிறது. எனினும் முழுவதுமாகக் கட்டி முடிக்கக் கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். ' - பராதி

' பெர்னார் அங்கே பெண்கள் கிடைக்கின்றார்களா ? ' மதாம் ழான் சிரித்தவாறு கேட்டுக் கண்ணைச் சிமிட்டினாள் '

' இல்லை ஷெரீ. நமது பெர்னார் நல்ல பிள்ளை. அவ்வாறான தப்பெல்லாம் செய்யமாட்டான் என்று கேள்வி '

'தங்கள் அபிப்ராயம் முற்றிலும் உண்மை பிரபு. என்னை மணக்கவிருப்பவளுக்கு நான் உண்மையானவனாக இருக்கவேண்டுமல்லவா ?. '

' அப்படியா சந்தோஷம். நமது பிரபுவிற்கு குடித்து முடித்தால் வெத்திலைமெல்லும் தாசிகளும், கவிச்சியடிக்கும் செம்படவப் பெண்களும் தேவையாகின்றது. ' என்று சொல்லிவிட்டு மதாம் துப்ளெக்ஸ் குவர்னரைப் பார்த்தாள். '

பராதி உரையாடலை வேறுதிசைக்குத் திருப்ப விரும்பினான்.

'ஐரோப்பாவில் நடக்கும் ஆஸ்திரியா வாரிசு உரிமைப் போர், கவலை கொள்ள வைத்திருக்கிறது. இங்கே நாம் ஆங்கிலேயர்களிடம் கவனமாயிருத்தல் அவசியம். '

'உண்மை மறுப்பதற்கில்லை. இது விஷயமாகக் குவர்னர் லாபொர்தெனேவிற்குத் தகவல் போயிருக்கிறது. நமக்கேனும் பிரச்சினையெனில் அவரது உதவியை எதிர்பார்க்கலாம். ' என்ற குவர்னர் துய்ப்ளெக்ஸ் எதிரே அமர்ந்திருந்த பெர்னாரைப் பார்த்தார்.

'பிற்பகலுக்கு ஏதேனும் பிரத்தியேகப் பணிகள் இருக்கின்றதா ?. குதிரைகள் கேட்டிருந்தாக அறிந்தேன் '

' புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவரலாம் என்கின்ற விருப்பமின்றி வேறல்ல '

' அப்படியா நல்லது. அதிகதூரம் போவது உசிதமல்ல. சரி சரி நேரமாகின்றது. பெத்ரோ..! பரிசாரகனை உணவினைக் கொண்டுவரச் சொல்லுங்கள். '

நீண்ட வேலைப்பாடுமிகுந்த அம்மேசையிலிருந்த போத்தல்களும், குப்பிகளும் அகற்றப்பட்டு புதிய விரிப்பு இடப்பட்டது, சீனப் பீங்கான் தட்டுகளும் கொண்டுவரப்பட்டன. முட்கரண்டிகளும், கத்திகளும் அவற்றின் இருபுறமும் வைக்கப்பட்டன. முட்டை சலாட், நெருப்பில் வாட்டப்பட்டிருந்த இரண்டு பெரிய வான் கோழி, ஆலிவ்வுடன் கூடிய பன்றி இறைச்சி, ஒரு தட்டில் இத்தாலியன் பாஸ்த்தா, பாதாமில் செய்யப்பட்டக் கேக், சிவப்பு ஒயின் வரிசையாகக் கொண்டுவரப்பபட மேசை நிரம்பியது.



.
பெர்னார் அவைகளை வியப்போடு பார்த்துகொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. தட்டங்களில் பறிமாறப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பாம்புகளும் தேள்களுமாக உயிர்பெற்று மெள்ள அவனை நோக்கி ஊர்ந்துவந்தன. அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் 6

<>நீலக்கடல் <>

நாகரத்தினம் கிருஷ்ணா


'Akabya ben Mahalel said; Ponder on three things and you will not come under the power of error: Know where you came from, where you are going, and before Whom you are destined to make an accounting. Where do you come from ? From a stinking drop (of semen). Where are you going ? To a place of dust and worms (the grave). Before Whom are you destined to make an accounting ? Before the Supreme Potentate over all of the earth 's rulers, the Holy Blessed One '
- Talmud, Pirke Abot 3:1.


இருபதாம் நூற்றாண்டு...

'பெண்ணே நில் ' இவனது குரல் அவளுக்குக் கேட்கின்றதா ?


கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால், இவன் திசையில், பார்வையைச் செலுத்தியிருப்பாளா ? அவள் கால்கள் தயங்குகின்றன. ஒன்றையொன்று இடறுகின்றன. அவள் மனதிற்குள் அத்தயக்கம் இருந்திருக்குமா ?

இருந்திருந்தால் இவனது குரலை அல்லது அவனது வேண்டுதலை இப்படி அலட்சியம் செய்துவிட்டு, உடலைச் செலுத்த முனைவாளா ? தன் எண்ணத்தை நிறைவேற்றுவதிலொரு முடிவான தீர்மானமிருக்க வேண்டும். அவளைத் தொடர்ந்து இதுவரை ஓடிவந்ததில் இதயத்தின் இயக்கம் இருமடங்காகியிருந்தது.


இயல்புக்கு மாறாக நூரையீரல் விரிந்து சுருங்கியதில் சோர்ந்திருந்தான். நின்றான். மூச்சுவாங்கினான். நிமிர்ந்தான். பார்த்தான். தொட்டுவிடும் தூ......ரத்தில் அவள். நடையை எட்....டிவைத்தால் தொட்டுவிடலாம், அவைளை பிடித்துவிடலாம்... அப்படித்தான் நினைத்து நினைத்து, நடந்து நடந்து, ஓடிஓடி... இல்லை, தொடமுடியவில்லை. அவனுக்கும் அவளுக்குமான அந்தத் 'தொட்டுவிடும் தூரம் ' நெருங்க நெருங்கக் குறையாமல், போக்குக்காட்டும் வானவில்லாக ஆனால் வண்ணங்களை இழந்த வானவில்லாக, விலகி விலகி இவனை மட்டும் பாலைமணலில் நிறுத்தி, மணற் புயலிற் தவிக்கச் செய்து, இறுதியில் மறைந்தும் போகிறாள்.


...மீண்டும் இவன் முன்னே முளைத்து, அவளிருப்பை இவன் அங்கீகரிப்பதற்கு முன்பாக, கண்முன்னே-பிரமாண்டமான கோபுரத்தில் ஒவ்வொரு மாடத்திலும் ஏறி நின்று, கீழ் நோக்கி ஒரு திடமான வெறித்தப் பார்வை. அடுத்தகணம், அம்பு தைத்த புறாவாக, தலை கீழாக, காற்றைக் கிழித்துக்கொண்டு நீரில்.. தொபீர்...


' ஐயா... ஆரேனும் ஒடி வாருங்களேன்.. இவளைக் காப்பாற்றுங்களேன் '


இவனது கதறல் யாருக்கேனும் கேட்டிருக்குமா ? இவனையே எட்டவில்லையே.! மற்றவர்களுக்கெப்படி ?
கைகளையும் கால்களையும் இங்கே இவன் உதறிக்கொள்ள,... அவளது உயிர் குமிழ்களாக நீர்ப்பரப்பில் உடைந்து கொண்டிருக்கின்றன..


'ஆரேனும்.. ஐயா....!ஆரேனும்...இவளைக் காப்பாற்றக்கூடாதா ?.. '


'சார்.. சார்...! என்னாச்சு ? கதவைத் திறங்க ' தொடர்ந்து கதவு இடிபடுகின்றது. பெர்னார் விழித்துக் கொண்டான்.


எதிரே சுவரொட்டி நிறுத்தப்பட்டிருந்த பிரான்சின் லியோன் நகரத்துக் கடிகாரத்தில் அதிகாலை மணி மூன்றரையென அறிவித்தது. கனவின் தொடர்ச்சியாக வியர்த்திருந்தான். எழுந்து மின்சார விளக்கை எரியவிடுவதற்காக, அதற்கான ஸ்விட்சைப் போட்டான். அவ்வறையில் காற்றின்றி ஒருவித இறுக்கம். தலையை உயர்த்திப்பார்க்க, மின்சார விசிறியும் சுழாலாமிருக்க, மின்சாரத் தடையெனக் காரணம் புரிந்தது. இதுபோன்ற நேரங்களிற்தான் இந்தியாவின் மீது எரிச்சலும், சொந்த நாட்டு ஏக்கமும் தவறாமல் ஏற்படும். எழுந்து ஸ்லிப்பரை அணிந்துகொண்டு, அறையையொட்டிய கூடத்து மேசையிலிருந்து சிகரெட்டொன்றைப் பற்றவைத்தான். பதட்டம் தணிந்தது.


'சார்!.. என்ன ஆச்சு சார் ? ஏதாவது பிரச்சினைங்களா ? ' மீண்டும் வெளியேயிருந்து கரகரத்த - உடைந்த குரல்.

உதவிக்காக இவனுடனேயே வைத்துக் கொண்டிருக்கும் பையன் மணியின் குரல்.


'ஒண்ணுமில்லை மணி.. நீ போய்ப் படு ' பெர்னார்.


இவனது பதில் பையனுக்குத் திருப்தி அளித்திருக்கவேண்டும். அவனிடமிருந்து வேறுவகையானக் கேள்விகள் வரவில்லை.
இனித்தூங்கவியலுமா ? முடியாது. கடந்த சிலவாரங்களாக, அவனுக்கேற்பட்டிருக்கும் அனுபவமிது.


'எழுந்து சென்று, மனதுக்கு இதந்தருகின்ற நூல்களை வாசிக்கலாமா ? அல்லது விடிகின்றவரை கனவுகள் விட்டுச்சென்றிருக்கும் நினைவுகளை மீள்வாசிப்புச் செய்து களைத்து போகலாமா ? 'கருமாறிப் பாய்தல் ' என்ற சொல் என்னிடம் ஏற்படுத்துகின்ற அனுபவங்களின் மூலமென்ன ? இதற்கேனும் பொருளுண்டா ? எல்லாமே, கற்பனையா ? இவனது நித்திரைக்காகக் காத்திருந்து நடத்தப்படும் தாண்டவங்களனைத்துமே பொய்யா ? மாயையா ? நேற்று நடந்த ஓர் விவாதத்தில் வேலு சொன்னதுபோன்று அபத்தமா ? மேற்கே பிறந்தும், இனம்புரியாது அழும் குழைந்தையாகிப் போனேனா ? ஒவ்வொருமுறையும் கனவில் அந்தப் பெண்ணைக் கண்டபிறகு, என்னில் அர்த்தமேதுமில்லாமல் போய்விடுகிறதே ? மீண்டும் மீண்டும் கனவுக்காகவும் அது தந்துகொண்டிருக்கிற சுவைக்காகவும் மனம் பரபரத்து, அவளைத் துரத்திக் கொண்டு, எத்தனை நாட்களுக்கு ? எத்தனை ஆண்டுகளுக்கு ? எத்தனை யுகங்களுக்கு ? இப்படி அலுப்பில்லாமல் தொடரப்போகிறேன். '


கேள்விகள், அவனுக்குள் பதிலுக்குக் காத்திராமல், மின்மினிப்பூச்சிகளாய் எந்த வெளிச்சத்ததையும் தந்துவிடாமல் கவனமாய், இருட்டில் நிறுத்திவிட்டு மறைந்துபோகின்றன.

' தூக்கமா வேண்டும் ? உறங்கி விழித்தெழும்போது உன்னிடமுள்ள தேடலை அறிந்திருக்கிறாயா ? உன்னுடைய கனவனுபங்களை மீண்டும் பெறமுடியாதபோது, நினைவிற் திரும்பவும் கொண்டுவர இயலாதகணங்களில் நீ சுற்றிவருவது யாரையென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? என்னையே. நம்மிருவரில் எவர் மலர், எவர் தேனி என்பது இப்போதாவது புரிந்ததா ? உன்னை அமைதிபடுத்துகின்றவகையில் நடந்துமுடிந்ததை காட்சிகளாக மறுபடியும் வரிசைபடுத்துகின்றேனே, அந்தக் கணத்திலாவது ' இந்த 'நான் ' யாரென 'நீ ' அறிந்திருக்கவேண்டும், தவறிவிட்டாய். அருமை நண்பனே! 'நீ ' சேர்ந்து வைத்தவன் 'நான் '. கடைசிவரை யாரோ இல்லை ? 'நான் '. பிறவிகள்தோறும் தொடர்பவன். பிறந்து இறந்து பிறந்து இறந்து.... புல்லாகி, பூடாகிப் பொய்க்கதியை அடைவதுதானா வாழ்வின் நோக்கம் ?. அதுதானா ஜனன-மரண, சம்சார சாகர தொடர்கதை ? சன்னலை, ஒழுங்காகத் திறந்துவை. எதிர்பார்த்துக் காத்திரு. விதிகளை மீறாதே. 'என் ஆயுளைக் கூட்டிவிடாதே. '

மாலை புதுச்சேரி, வல்லபாய் பட்டேல் சாலையில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் கோவிந்தராஜனைச் சந்தித்துவிட்டு வரலாமென்றிருந்தான். பெர்னாருக்கு ஏற்படும் கனவுகளுக்கு ஏதேனும் பதிலிறுக்கலாமென 'பிரெஞ்சு மொழி ஸ்தாபனத்தின் நண்பர்கள் வற்புறுத்தி டாக்டரைப் பார்க்கச் சொன்னார்கள். இயக்குனர் டாக்டர் கிரிமால், 'முதலில் உன்னை கவனிச்சுக்க, பிறகு ஸ்தாபனத்திற்கு உழைக்கலாம் ' எனக் கட்டளையிட்டபோது இவனால் பதில் சொல்லமுடியவில்லை.


தன் நண்பன் வேலுவை அழைத்துக்கொண்டு மாலை ஆறுமணிக்கெல்லாம் கிளினிக்கிற்கு வந்தாயிற்று. டாக்டர் கோவிந்தராஜன் வாசலிலேயே போர்டு வைத்திருந்தார். அதில் பார்வைநேரம் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுவரையென எழுதப்பட்டிருப்பதை வாசித்துக் கொண்டிருந்த போது, ஓர் அம்மாள் இவர்களை ஒதுங்கச் சொல்லி வாசலில் தண்ணீர் தெளித்தாள்.


ஈரப்புழுதியின் மணத்தை வாங்கியவாறு உள்ளே நுழைந்து இருவரும் காத்திருந்தார்கள்.


'டாக்டர் வர்ற நேரந்தான், உட்காருங்க ' என்று சொன்ன அந்தப் பெண்மணியின் உத்தரவாதத்தை நம்பி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று - மேசையில் கிடந்த ஆங்கிலத் தினசரியை இரண்டாவது முறையாக படித்துவிட்டு, பக்கத்திற் கிடந்தத் தமிழ் தினசரியில் நடிகையின் வயிற்றில் கவனம் திரும்பியபோது டாக்டர் ஏப்பமிட்டுக்கொண்டே உள்ளே வந்தார். இவனுக்கு முன்னே இரண்டு பேர் காத்திருந்தும், முதாலவதாக அழைக்கப்பட்டான். வெள்ளைத் தோலுக்கு இந்தியர்கள் எப்போதும் அடிமைகள்.


டாக்டர் கோவிந்தராஜன் முகத்தைத் தவிர உடல்முழுக்க ரோமதாரியாகயிருந்தார். காது மடல்களிற் கூட அக்கறையெடுத்து முடி வளர்த்திருந்தார். இருக்கை கொடுத்து, காதைக் குடைந்துகொண்டே இவனுக்கு நேர்ந்த கனவுகளைப் பொறுமையாகக் கேட்டார்.


'மிஸியே..... என்ன பேரு சொன்னீங்க ? '


'பெர்னார். பெர்னார் ஃபோந்த்தேன்.. நீங்க 'பெர்னார் ' ன்னே அழைக்கலாம் '


'மிஸியே பெர்னார். நீங்க புதுச்சேரிக்கு வந்து எத்தனை வருஷமாகுது ? மார்க்கெட் பக்கமெல்லாம் போயிருக்கீங்களா ? '


'ம்... '


'போயிருக்கீங்க... அங்க தொடை தெரியப் புடவையை வழித்துக் கொண்டு, குலை குலையா மார்புகளைச் சுமந்துகொண்டு மிளகாய்த் தூள் விற்கும் பொம்பிளையைப் பார்க்கறீங்க. அட வேணாங்க, எங்க ஊரு சினிமாவுக்குப் போறீங்க.. பெருசான பிருஷ்டத்துடன் பலான உபாதைகளோடு ஆடும் பெண்களை பார்க்கரீங்க '


'..... '


' என்ன ஆகும் ? கனவு வரும். உங்களை உச்சத்துக்கு கையப் பிடிச்சு கூட்டிப் போகும். விடிஞ்சு பார்த்தா... '


இப்படித்தான் ஒவ்வொருமுறையும் கேள்வியைச் சொடுக்கி அநியாயத்துக்குக் கொக்கோகம் வாசித்த கோவிந்தராஜனிடம் பெர்னாருக்கு எரிச்சல் வந்தது.


'வேலுவைத் திரும்பிப் பார்த்தான். அவனும் இவனைப் போலவே முகத்தை இறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.


'நீங்க என்ன சொல்ல வர்றீீங்க ? '


' ....கனவுங்கிறது என்னண்ணு நினைக்கிறீங்க. சமூகத்தில சில காரியங்களை வெளிப்படையாச் செய்ய நம்மால முடியறதில்லை. அது தப்போ சரியோ, அடிப்படையிலே நம்மால நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஆசைகளென்ற வகையில மூளையில பதியம் போட்டுண்டு, முளைவிட காத்திண்டிருக்கும். என்றைக்காவது உடம்புல உழைப்போ, உள்ளத்துல பாரமோ கூடிப்போயிட்டா அன்றைக்கு நீங்க படுக்க மாட்டிகளாண்ணு காத்திண்டிருந்து, தளிர், இலைன்னு நாடகம் நடத்திட்டு ஒருபாட்டம் ஆடி முடிச்சிடும். கனவு காண்பவன் ஒரு பார்வையாளனா, தேமேண்ணு முடிஞ்சசப்போல்லாம் அழவோ அல்லது சிரிக்கவோ செய்யணும் '


'.......... '


'பழைய ஏற்பாட்டுல 'சில சம்பங்கள் கனவுகள்மூலமாலவே நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன ' என்று பைபிள் சொல்லலியா ? கனவுகள் என்பது அன்றைய நாள்ல உங்களுக்கு ஏற்படுற அனுபங்கள் மட்டுமல்ல, சில நேரங்கள்ல எச்சரிக்கைகளையும் கொண்டுவருது. அது நினைவுக்கும் மறதிக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும், நிறைவேற்றமுடிந்த அல்லது முடியாத விருப்பங்களுக்குமிடையிலும் ஓரிணைப்பாசெயல்படுது. அது கண்ணாடி. பொய்சொல்வதில்லை. இப்போதைக்கு முதலுதவியா உங்களுக்கு நான் சிபாரிசு செய்வது என்னன்னா.....


'...... '


' மனசைக் கட்டுப்பாடா வச்சிக்கணும். பக்கத்துல கடற்கரை இருக்கு. படுக்கப் போவதற்கு முன்னர் நல்லா நடங்க. வெந்நீர்வைத்து குளியுங்க இரவுல வாசிக்கிற புத்தகங்கள் நல்லதாக இருக்கட்டும். திரும்பவும் கனவுகள் வந்துதுண்ணா என்னை மறுபடியும் வந்து பாருங்க '


கோவிந்தராஜன் கேட்ட ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு விடைபெற்றபோது. குழப்பங்கள் கூடியிருந்தனவே தவிரக் குறையவில்லை. அவரது பதில் அவன் எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தவில்லை.
பெர்னாரும் வேலுவும் சைக்கிளிலேயே வல்லபாய் பட்டேல் சாலையைத் தொடர்ந்து சென்று கிழக்குக் கடற்கரையை அடைந்தார்கள். வழக்கம்போல கரியமிலவாயுவைப் பண்டமாற்றுச் செய்துக்கொண்டு சுவாசிக்கும் மக்கள்.


எங்கே ஒதுங்கினாலும் சினிமாவும் அரசியலும் பேசும் தமிழர்கள். கையேந்திபவன்கள். அதனைச் சுற்றித் பிறவியெடுத்ததே தின்பதற்காக என்றலையும் மனிதர்கள். அவசரகதியிற் தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் நாற்பது வயதுகளெனப் பார்த்துக்கொண்டு காந்தி சிலையை அடைந்தார்கள். பிறகு, சைக்கிள்களை நிறுத்திவிட்டு, கிழக்கு திசையில் கற் சுவரில், இரு சுண்டற் பொட்டலங்களை வாங்கி, பிரித்துக்கொண்டு உட்கார்ந்தார்கள்.


' ராசா! குறி சொல்லட்டுங்களா ? ' திரும்பிப் பார்த்தார்கள். கோடாலி முடிச்சுக் கொண்டை, முகம் முழுக்க மஞ்சள், நெற்றி நிறையக் குங்குமம், தோள்வரை இறங்கி - தங்கட்டி சுமக்கும் காதுமடல்கள்,. கையில் முழங்கை நீளத்திற்கு ஒரு பிரம்பும், கண்டாங்கிச் சேலயுமாய் நடுத்தர வயதுப் பெண்மணி.


' ஏம்மா போ போ. இந்த நேரத்தில எந்தக் கையைப் பார்த்து என்ன சொல்லமுடியும் ' - வேலு.


' உனக்கு இல்லை ஐயா, இந்தத் தொரைக்கு, முன் ஜென்ம வினையால, விபரீத ராசயோகம். கிரக நிலை சரியில்லே. அஞ்சு ரூவா கொடுங்க. காலமேர்ந்து வயித்துக்கொண்ணுமில்லை; கை பார்த்து சொல்லுறன். '


' இந்தா அஞ்சு ரூபா. நீ இடத்தைக் காலி பண்ணு ' வேலுவே தன்னிடமிருந்த ஐந்து ரூபாயை நீட்டினான்.


கொடுத்த ஐந்து ரூபாயை சங்கடத்துடன் வாங்கிக் கொண்டவள்,
' கை பார்க்காமல் காசு வாங்கறதில்லை. இருந்தாலும் தொரையைக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. முன் ஜென்ம கன்னியால தொந்தரவு இருக்குது '


எச்சரித்துவிட்டு நடந்து சென்றாள்.


தொடரும்.....
nakrish2003@yahoo.fr

நீலக்கடல் - அத்தியாயம் - 7

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

'....ELLE ETAT FORT DESHABILLEE
ET DE GRANDS ARBRES INDISCRETS
AUX VITRES JETAIENT LEUR FEUILLEE
MALINEMENT, TOUT PRES, TOUT PRES. '
- Arthur Rimbaud

காற்றுச் சுழன்றுசுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்கள் உக்கிரம்வந்து ஆடிக்கொண்டிருந்தன. மூங்கிற்புதர்களில் மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்புவது ஓசையல்ல, பிடாரிகளின் ஓலம். தொலைதூரத்தில் கீழ்வானத்தில் வெட்டும் மின்னற்கீற்றுகள். அவற்றின் ஒளியில் சரசரவென ஓடி மறையும் பாம்புகள். மலைகளிரண்டு ஒன்றோடொன்று மோதித்தெறிக்கும் வகையில், மின்னலைத் தொடர்ந்த இடியோசை.


இடிக்குப் பலியாகி மளமளவென்று எங்கோ முறியும் கிளைகள், சாயும் மரங்கள். தப்பிப் பிழைத்து ஓடுகின்ற நரிகள், அவற்றின் ஊளைகள். அக்காட்சியைப் பார்த்து மிரளும் ஆந்தைகள், அவற்றின் அலறல்கள்.
சில்வியின் உடல் வெடவெடத்தது. இதுபோன்ற இரவுகள் அவளுக்குப் புதியதல்ல. காட்டுப் பன்றிகளையும், முயல்களையும், தப்பிக் கரையொதுங்கும் கடலாமைகளையும், சில சமயங்களில் இவளது விருப்பத்திற்குமாறாக, கொளுத்திய பந்தங்களை நோக்கிப் பாயும் பெருமீன்களை வெட்டிப் பிடிப்பதற்கும், போர்த்துகீசியர்கள் காலத்திலேயே முற்றிலுமாக வேட்டையாடப் பட்டு அழிந்துபோன தொதோ(Dodo) பறவைகள் இரவுநேரத்தில் வலம்வருவதாக உலவும் கதைகளை நம்பிக்கொண்டு அவற்றைத்தேடி அலையவும் சில்வியாவின் தந்தை 'குரூபா '; இதுபோன்ற இரவுகளையே தேர்ந்தெடுப்பான்.


இவளது சகோதரன் லூதர், எப்போதும் கபானில் தங்குவதில்லை. கறுப்புநதியை ஒட்டியக் கரும்புப் பண்ணையில் சிலகாலம் அடிமையாகவிருந்தவன், பண்ணை முதலாளி 'லொரான்ஸ் அர்த்துய்ர் ' ஐத் தாக்கிவிட்டுக் காட்டில் புகுந்துகொண்டான். எப்போதும் குடித்துக் கொண்டிருப்பான். எனவே சில்விக்குக் காடுகளில் இரவு நேரங்களில் தந்தையுடன் அலைவதென்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது; ஆனால் இன்றைய இரவு அப்படிப்பட்டதல்ல.


வித்தியாசமான இரவு. கைலாசத்தோடு அநேக பகற்பொழுதுகளில் அருகருகே உட்கார்ந்து, கொட்டுகின்ற அருவிகளின் சாரலில், சூரிய ஒளியை மறுத்துநிற்கும் அடர்ந்த மரங்களின் நிழலில் இனிக்க இனிக்கப் பேசியிருக்கிறாள். அவன் பேசுகின்ற அழகை, அரை மயக்கத்தோடு அவதானித்திருக்கின்றாள். அப்போதெல்லாம் தோன்றாத, உடலிற் பரவாத, நெஞ்சில் ஊறாத தாபம் இன்றைக்கு, இந்த இரவில், இந்தக் கணத்தில் அவனது அண்மையில் ஏற்பட்டிருக்கிறது. இருட்டின் கோர விளையாட்டினால் ஏற்பட்ட அவளது அச்சத்தைத் தணிக்கும் வகையில் கைலாசம், அவனது ஆண்மை. அருகில் சில்வியா இவளது பெண்மை. இடிக்கும் மின்னலுக்குப் பதிலளிக்கும்வகையில் இருவரும் அணைத்தவாறிருந்தனர். அறிவும், உணர்ச்சியும் மல்யுத்தம் நடத்தின.


சில நேரங்களில் உணர்ச்சி மிகச் சுலபமாய் வென்றுவிடும்.. இங்கேயும் அதுதான் நடந்ததது. யாார் முதலில் அணைத்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இருட்டும் தனிமையும் இருவரையும் ஒருவராக்கியிருந்தது, உமையொருபாகனாய் வடிவெடுத்திருந்தனர். மோகத்தின் வசப்பட்டுப் பளபளத்த அவளது கறுத்த உடல், இவனது இந்திரியங்களை இயக்கவாரம்பித்திருந்து சில நொடிகள் கழிந்திருந்தன. இருவரது கைகளும் கால்களும், அவைகளின் எதிர்த் திசைகளில், இன்ப மூலங்களைத் தேடியலைந்தன. தழுவலில் இவளது கறுத்த பெரிய முலைகள் அவனது பரந்த மார்பில் இறங்க முயற்சித்து முகம் தாழ்ந்தன. அவனது எச்சிலூறிய அதரங்களில் இவளது பெரிய அதரங்கள் பற்களோடு பதிந்திருக்க, இருவருமே இமைகள்மூடி மயக்கத்திலிருந்தனர்.


நட்சத்திர ஒளியில், கைலாசத்தின் நீண்ட கரங்களின் முரட்டுத்தனமான இறுக்கத்தினை இவளது உடலிற் தாபத்துடனும், மனத்தில் ஏக்கமுமாக சுகத்தின் பிரவாகத்தில் மூழ்கி அனுமதிக்கிறாள். அவளது ஆடையை அவன் விரல்கள் மெல்லக் களைய முயற்சித்தபோது மயக்கத்திலிருந்த பெண்மை விழித்துக் கொண்டது.


'கைலாசம் வேண்டாம். உங்கள் ஊர்ப் பெண்கைளைப் பற்றியும், கற்புக்குக் கொடுக்கும் மரியாதைப்பற்றியும் தெய்வானை நிறைய சொல்லியிருக்கிறாள்.. உன் அம்மாவின் எதிர்பார்ப்பிற்குரிய பெண்ணாக நான் நடந்துகொள்ளவேணும்... '


'உள்ளது.. மெல்ல வார்த்தையாடு. நீ சொல்வது நிஜமானப் பேச்சு. வந்த காரியம் மறந்தாகிவிட்டது. என்மனசு சஞ்சலமுற்றுவிட்டது. என்னை மன்னிக்கவேணும் சில்வி ' இருவரும் விலகிக்கொண்டார்கள்.
'போகட்டும்.. உன்னை நிந்திப்பதற்கில்லை. இந்தபடிக்காய் நடந்து கொண்டதற்கு இருவருமே பொறுப்பு. வார்த்தையாடலுக்கு நேரமில்லை சற்றுநேரத்திற்கு முன்னாலே, இருவர் நம்மைப் பின் தொடர்வதாகத் தோன்றியதே அது உண்மையா ? இல்லைப் பிரமையா ? '


' இதுவரை பிரமையில்லை என்றே நினைக்கிறேன். என் உள்மனது அதனை மறுக்கிறது. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து ஆர் என்று
பார்ப்போம். '


ஒரு பெரிய மின்னலொன்று அடிவானில் தோன்றிக் கீழ் நோக்கி இறங்கியது.
'கைலாசம் என்னால் எதையும் பார்க்க இயலவில்லை. அனைத்துமே இருட்டாக இருக்கின்றது. என் கண்பார்வை போய்விட்டதா ? '


'பைத்தியக்காரி..! எதையாவது உளறாதே! மின்னலைப்பார்த்ததால் வந்த கோளாறு. ஏற்கனவே இருட்டைத் தவிர இங்கே வேறென்ன தெரிகிறது. மறுபடியும் விழிகளிரண்டையும் சிறிதுநேரம் மூடி மீண்டும் திற, எல்லாம் பிரவேசமாகும் '


அவன் கட்டளைக்குப் பணிந்து, சில்வி அவ்வாறே செய்தாள்.
' ரொம்ப சரி. நான் என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன். அதோ....! ஒன்றையொன்று பின்னியிருக்கும் தென்னைகளை இங்கிருந்து பார்க்க முடிகின்றது. துர்க்கைக்கல், இங்கிருந்து பார்ப்பதற்கு இருட்டை விலக்கிக்கொண்டு எழுந்து நிற்பது தெரிகிறது. வா பக்கத்திற் போகலாம். ' அவனது கையினைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றாள்.


இருவரும் எழுந்து நிற்பதற்குக் காத்திருந்ததுபோல, அவர்கள் நின்ற இடத்துக்கு நேரெதிரே இருவர் வந்து நின்றனர். அவர்களின் கறுத்த உருவமும் தலையொட்டிச் சுருண்டிருந்த கேசமும் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்பதனை வலியுறுத்தின. முதலாவதாக நின்றிருந்தவனின் குரலைக் கேட்டதும் சில்விக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர வந்தன.


அவளது சகோதரன் லூதர் அவன். இரண்டாவது மனிதனை யாரென்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குரல் ஏற்கனவே அவளுக்குப் பரிச்சயமானது. லூதர் இரவு நேரங்களில் தங்களுடைய கபானுக்கு நேரம் கழித்து வரும்போதெல்லாம் அவனைத் துரத்திவந்து வெளியில் நின்றவாறே அவனை அழைக்கும் குரல். அந்த நேரத்திலெல்லாம் சில்வியின் தந்தை குருபா ஆவேசமுற்றிருக்கிறார். அவனது சகவாசம் வேண்டாமென எச்சரித்திருக்கிறார். அவன் மதிப்பதில்லை. குடிபோதையிற் கண்டதை உளறிவிட்டு அந்தக் குரலுக்குரியவனோடு ஓடி இருட்டில் மறைந்து விடுவான். இருவரும் இப்படித் தங்களைத் துரத்திக்கொண்டு வருவார்களெனச் சில்வி எதிர்பார்க்கவில்லை.


ஒருவேளை, வேறு காரணத்தை முன்னிட்டு இங்கே வந்திருப்பார்களா என்ற ஐயமும் அவளிடம் எழாமலில்லை.


புதிய மனிதர்கள் இருவரும் ஆப்ரிக்க மொழிகலந்த பிரஞ்சில் பேசினர். கைலாசத்துக்குச் சரியாக விளங்கவில்லையெனினும், சில்விக்கு விளங்கியது. அவர்கள் பேசுவது கிறேயொல் மொழி. அவர்கள் வீட்டில் பேசுகின்ற மொழி.


அவர்கள் பேசப்பேச இவள் மொழிபெயர்த்தாள்.


லூதர்தான் முதலாவதாகப் பேசினான்.

'இப்போது மிஸியேவுக்கு (ஐயாவுக்கு) என்ன பதில் தெரிவிப்பது. ஒவ்வொரு நாளும் அவர்கைளைப் பின் தொடர்ந்து, இன்றைக்கு முக்கியமான தருணத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்படி ஆகி விட்டதே! '


' என்னைக் குற்றம் சொல்லாதே! எதனையும் உருப்படியாகச் செய்யாதவன் நீ.. நேற்றும் அப்படித்தான் அந்த அம்மாவிடம் கொஞ்சம் மிரட்டி உண்மையை வரவழைத்திருக்கலாம். இப்போது இது மாதரியானதொரு இருட்டில் அவர்கைளைப் பின் தொடர்ந்து சங்கடப்பட வேண்டியதில்லை. அதனை விடுத்து எதையெதையோ உருட்டி அங்கே தேடவாரம்பிக்க, அந்த அம்மா கபானுக்குள் நுழைந்துவிட்டது. '


' நீ மட்டுமென்ன ? யோக்கியமா ? அந்த அம்மாவை இப்படித் தாக்கியிருக்கவேண்டாம். முதலுக்கே மோசம் வந்திருக்கும். அந்த அம்மா மட்டுமே உண்மையான ரகசியங்கைளை அறிந்தவர். அவர்களுக்கேதேனும் நடந்திருந்தால் மிஸியே நம்மைக் கொன்றே போட்டிருப்பார். '


' சரி.. சரி இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். பயல் கைலாசமும், சில்வியும் எங்கே போய்த் தொலைந்தார்கள். அவர்களிருவரும் நாம் தேடுவதைத்தான் தேடிவந்திருக்கிறார்கள். அதிக தூரங்கூடப் போயிருக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்யலாம் '


'அதுதான் ஆச்சரியமாகவுள்ளது. எப்படி இருவரும் மாயமாய் மறைந்தார்கள் ?


அந்தப் பயல் கைலாசத்துக்குக்கு ஏதேனும் மாய வித்தைகள் தெரியுமோ ? '


'இருக்கலாம். இந்தியர்கள் மாயவித்தைகள் அறிந்தவர்கள். நம்முடைய ஆப்ரிக்க இனத்தைப் போன்றே அவர்களுக்கும் வசியம், பில்லி சூனியம், மாரணம் (மந்திரத்தாற் கொல்லுதல்), வூடு (Voodoo), பலிகள் போன்றவற்றில் கை தேர்ந்தவர்கள். நம்முடைய எஜமானரும் மாயவித்தைகள் தெரிந்தவர் என்பதை என் இரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன் '


'அப்படியா! எனக்கும் நம்முடைய மிஸியேவை பார்க்கவேண்டுமென்கின்ற வெகு நாட்களாக ஆசை. எப்போது அழைத்துப் போவாய் ? '


' அதற்குக் காலம்வரும். அழைத்துப் போகிறேன். இப்போது வேண்டாம். ஐயாவும் அதனை இப்போதைய சூழலில் விரும்பமாட்டார். சரி சரி இங்கே வெட்டியாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டு மீண்டும், போர் லூயிக்குத் திரும்புவோம். காமாட்சி அம்மாளுடைய கபானுக்குச் சென்று காத்திருப்போம்.. எப்படியும் உனது தங்கையும், கைலாசமும் திரும்பியாகவேண்டும். என்ன நடக்கின்றது ? பார்ப்போம் '.


அவ்விருவரும் வடக்குத் திசைநோக்கி எட்டி நடந்து மீண்டும் காட்டுக்குள் புகுந்தனர்.


அவர்கள் போகவும் மேகத்தைக் கலைத்துக்கொண்டு நிலா வெளிப்பட்டது. காற்று முற்றிலுமாக அடங்கியிருந்தது. வானம் தூறல் வானமாக மாறியிருந்தது. இந்துமகா சமுத்திரத்தின் இரைச்சலும், ஆப்பிரிக்க மக்கள்வசிக்கும் பகுதியிலிருந்து பாட்டும் ஆட்டமும் கேட்டது. றபாணம், மற்றும் போபரை* வேகமாக அடித்துக்கொண்டு அதனிசைக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தனர். பறங்கியரின் கரும்புப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறக்க இரவு நேரங்களில் இம்மாதிரி குடித்தும் பாடியாடி மகிழ்வது வழக்கம்.


கைலாசத்திற்கும், சில்விக்கும் மனதிற் தைரியம் ஏற்பட்டது.. கைலாசம் மெல்லச் சில்வியின் தோளைப்பற்றி அழைத்தான்.


'வா.. இனிப் பயமில்லை. துர்க்கைப் பீடம் அருகிற்தானுள்ளது. அம்மா குறிப்பிட்ட இடம், துர்க்கைப் பீடத்திற்கருகில் , சற்றுமுன்னர் நீ சுட்டிக்காட்டிய இரண்டுதென்னைகள் பின்னியுள்ள இடம்.... '


அவன் முன்னே செல்ல, அவனையொட்டியே சில்வியும் சென்றாள்.
மெள்ள இருவரும் துர்க்கைப் பீடத்தருகே நெருங்கி நின்றார்கள், பிணைந்துள்ள இரு தென்னைகளையொட்டிப் பார்வையைக் கொண்டுபோனார்கள். பெரிய பள்ளமொன்று வெட்டப்பட்டிருந்தது. பள்ளம்முழுக்க மழைநீர். பலநாட்களுக்கு முன்னதாகவே கள்ளிப்பெட்டி வேறொருவர் கைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாயிற்று.. சில்விக்கு ஏமாற்றாமாகவிருந்தது. கைலாசம் முகத்தில் எந்த வெளிப்பாடுமில்லை.


'கைலாசம்.. உங்கள் அம்மாவிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். இந்தப் படுபாவிகளும் எதற்காக நம்மைப் பின்தொடர்ந்துவந்தார்கள் எனத் தெரியவில்லையே ? என் தந்தை சொன்னது சரியாகிவிட்டது. என் சகோதரன் ஏதோ தகாதசெயலில் ஈடுபட்டிருக்கின்றான் என்பது நிச்சயம். தவிர உங்கள் அன்னைக்கு எதிராகவென்றால், என் தந்தையின் கோபம் அவன்மீது மேலும்கூடுமே தவிர, ஒருக்காலும் குறையாது. எனது மனதிற்குக்கூட சங்கடமாகவுள்ளது. உங்கள் அன்னைக்குத் தெரியவந்தால் எங்கள் குடும்பத்தைப் பற்றிய அவரது அபிப்ராயம் சிதைந்துவிடுமோ ? நம்மிரு குடும்பங்களுக்கிடையில் பகைவந்து சேருமோவென்று, மிகவும் அச்சமாகவுள்ளது. '


' என் அன்னையின் குணவிசேடங்களை அறிந்துமா இப்படியான முடிவுக்குவந்தாய். உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் என் அன்னைக்கு அளவுகடந்த பிரியமும் உள்ளது. அந்தப் பிரியத்திற்கும், நம்பிக்கைக்கும் பங்கமெதுவும் ஏற்பட்டுவிடாது. வீணாக அஞ்சவேண்டாம். வா சீக்கிரம் கபானுக்குத் திரும்புவோம். அன்னையும், என் தங்கை தெய்வானையும் நமக்காகக் காத்திருப்பார்கள். '

சில்வியை அழைத்துக் கொண்டு மேற்குத்திசையை நோக்கி நடந்தான்.
கைலாசமும் சில்வியும் கபானை அடைந்தபோது விளக்கேற்றிவைத்துக்கொண்டு பின்னிரவிலும் தூங்காமல், காமாட்சி அம்மாளும் தெய்வானையும் .இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
காமாட்சி அம்மாவின் பார்வை கைலாசத்தின் கைகளில் விழுந்தது..


'என்ன நேர்ந்தது மகனே ? பெட்டியைக் கொண்டுவரவில்லையா ? '
' அம்மா.. உள்ளே சென்று பேசுவோமே. இந்த அகாலநேரத்தில் இப்படி வெளியே நின்று நாம் வார்த்தையாடுவது நல்லதல்ல. '
நால்வரும் உள்ளே நுழைந்து மணையிட்டு அமர்ந்தார்கள்.


' அம்மா யாரோ நமக்கு முன்னதாக அப்பெட்டியைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். '


' என்ன சொல்கின்றாய். இங்கேயும் நமக்கு எதிரிகளா ? ஈஸ்வரா! கடவுளே என்ன சோதனையிது. ? இனி யாரிடம் முறையிடுவேன் ? '


'அம்மா. கஸ்தியேதும்வேண்டாம். எல்லாம் நல்லதுக்கே என்று நினை. எந்த ஆபத்தும் நம்மை அண்டாது '


' எனக்கு ஆபத்தென்றால் வருத்தப்பட என்ன இருக்கிறது. என் கண்மணிகள் உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது '


'அம்மா.. இப்படித் தொடர்ந்து எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ரகசியத்தினை மறைத்துவைத்து எவ்வளவு நாைளைக்குத் துன்புறப் போகிறாய் ?

எங்களிடம் உண்மையைச் சொன்னாலென்ன ? நானும் தெய்வானையும் சின்னைப் பிள்ளைகளா ? எதனையும் சந்திக்கின்ற உடல் வலிமையும் மனவலிமையும் எங்களுக்கு உள்ளது என்பதை நீ உணரமறுக்கிறாய். '


' உண்மை மகனே. உங்களிடம் ஆரமம்பத்திலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் உன் தந்தை அதற்கான காலம் வரும் அப்போது சொல் என்றார். நம் குடும்பத்து ரகசியத்தை அறிந்த இன்னொரு நபர் நம்மோடு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுத் தீவுக்கு வந்தவர் இங்கிருக்கிறார். அவரது ஒப்புதலில்லாமல் அந்த ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது. அவர் வரட்டும். அவரது அனுமதி பெற்று அனைத்தையும் ஆதியோடந்தமாகச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். குறிப்பாகத் தெய்வானையின் மீதொரு கண் வைத்திரு. குழந்தாய் சில்வி உன்னுடைய தயவும் எங்களுக்கு நிறைய வேண்டும் ' என்ற காமாட்சி அம்மாளின் கைகளைப்பற்றி சில்வி கண்களில் ஒத்திக் கொண்டாள்.


திடாரென வெளியே கூச்சல் கேட்டது. இரண்டொரு கறுப்பர்கள் முன்னே ஓட அவர்களைத் துரத்திக் கொண்டு குதிரைகள். ' ' போல் ' கரும்புப் பண்ணையிற் குழப்பமாம். அங்கிருந்த கறுப்பு அடிமைகளிற் சிலரை வெட்டிப்போட்டுவிட்டு மற்ற அடிமைகள் தப்பித்திருக்கின்றார்கள் ', என்ற செய்தி பரவியது. நாளை நடக்கவிருப்தை நினைத்து போர் லூயி (Port Louis) கறுப்பின மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் தூக்கம் போயிற்று.

தொடரும்.....


*the bobre, the ravane, the maravane and the triangle. New ingenuous instruments never heard before. The bobre is a long wooden bow kept arched over a large gourd-like, rough skinned, hollow fruit (the calebasse) by a vegetal string, this being hit by a stout wooden rod. Its mournful twang has however, sadly, been lost over the years and it is no longer part of a sega music team. The ravane is a hide, pulled taught over a wooden circular frame. Tightened even more to a vibrant limit over a fire-wood flame, and sometimes ringed with bells, it is at the heart of the sega 's beat.