Sunday, March 11, 2007

நீலக்கடல் - அத்தியாயம் -4

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

TA CHAIR ETAIT PAREILLE A CELLE DES COCOS,
LES MARCHANDS TE PORTAIENT DES PAGNES COULEUR D 'AIR
ET DES MOUCHOIR DE TETE A CARREAUX JAUNE-CLAIR,
LABOURDONNAIS SIGNAIT DES PAPIERS D 'AMIRAUX
- FRANCIS JAMMES

காமாட்சி அம்மாளிடம் அத்தீவு அப்படியொரு பிரியத்தைக் கொண்டிருந்தது. தீவிலிருந்த சுமார் முன்னூறு இந்தியக் குடும்பங்களுக்கு காமாட்சி; வாழும் பெண்தெய்வம். கடந்த நான்கு ஆண்டுகளாக கைலாசத்திற்கும், தெய்வானைக்கும் மட்டுமல்ல பிரெஞ்சுத் தீவிற்கே அன்னையாக; வழிபாட்டுக்குகுரியவளானாள். 'காமாட்சி அம்மா! என் குழைந்தைக்கு, மார்முழுக்கச் சளி, மூச்சுவிடத் திணறுகிறது '. 'காமாட்சி அம்மா! மல்காஷ் ஆட்கள் எதனையோ கொடுத்தார்களென்று குடித்துவிட்டு இரண்டு நாட்களாகப் போதை தெளியாமலிருக்கிறார் '.


'காமாட்சி அம்மா! புரட்டாசி மாதம், கோவிந்தனுக்கும் பொங்கலிடவேணும், நீங்கள்தான் நடத்தி வைக்க வரவேணும். ' 'காமாட்சி அம்மா! நம்ம விருத்தாசலம் காட்டிற்குள் முயலைத் துரத்திக் கொண்டு போனவன் ஏதோ விஷஜந்து கடித்து உயிர் போய்விட்டது.. அந்திமக் கிரியைகள் செய்யவேணும். எப்படிச் செய்வது என்பதில் பாவாடைச் செட்டிக்கும், நாராயணசாமிப் பிள்ளைக்கும் தர்க்கமிருக்கிறது.. நீங்கள் அவ்விடம்வந்து எது சரி என்பதைச் சொல்லிப் போகவேணும் '. இப்படித் தீவின் நல்லவை தீயவைகளை நடத்திவைப்பதற்காக காமாட்சி அம்மாள் அத்தியாவசியமாகிவிட்ட உயிர்.. வெள்ளையர் பண்ணைகளில் அடிமைகளாக, அதிகாலையிலிருந்து இரவுவரை உழைக்கும் கறுப்பின மக்களுக்கும், இந்தியரகளுக்கும்கூடத் தங்கள் பறங்கி எஜமானர்களிடம் படுகின்ற கஷ்டங்களைத் தெரிவிக்கக் காமாட்சி அம்மாளிடம் வருவதுண்டு. காமாட்சியம்மாளிடம் பறங்கியர்கள் இறங்கிவந்ததற்குக் காரணமில்லாமலில்லை.


இந்தியர்களைத் தங்கள் விருப்பம்போல ஆட்டுவிக்க அவர்களுக்கும் காமாட்சியம்மாளின் தயவு வேண்டியிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களையும் தனது குணத்தால் ஈர்த்திருப்பது நியாயமென்றாலும். அவரது உருவமும் அதற்கு உகந்ததாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். சொல்லப்போனால் இதுவே பிரதானமான காரணம். செந்தாமரையொத்த அடக்கமான நிறம், ஒற்றை நாடி, தெளிவும் சாந்தமும் இணைந்த முகம். முன்னால் நிற்பவரை முழுவதுமாக வாசிக்கும் கண்கள், சீரான நாசி. நெற்றியில் துலங்கும் திருநீறு; முடிந்தபோதெல்லாம் 'ஈஸ்வரா ' என உச்சரிக்கும் உதடுகள், தினந்தோறும் கசக்கிக் கட்டும் தூயவெண்ணிறச் சேலையென நடமாடிவந்தவர் தீவிலிருந்த புதுச்சேரி தமிழர்களுக்கான குலதேவதை.


எல்லையில் குறுகியும், மக்களெண்ணிக்கையில் குறைந்துமிருந்தத் தீவில் எந்தச் செய்தியும் சீக்கிரம் பரவிவிடும். நல்லதோ கெட்டதோ பறங்கியர், கிறேயோல், தமிழர்களென கூடிவிடுவார்கள். அடுத்துவரும் நாட்களில் இது போன்ற செய்திகளை, சாலைகளிலோ, கரும்புப் பண்ணைகளிலோ, மரக்கலங்கள் கட்டுகின்றயிடத்திலோ, ராணுவத்திற்கான கசெர்ன்கள் அல்லது வெள்ளையர்களூக்கான 'வில்லாக்களை எழுப்பிக்கொண்டோ ' வெள்ளையரல்லாத மற்றமக்கள் விவாதித்தபடியே, உழைத்துக் கொண்டிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களே அத்தீவிவின் ஆரம்பகால தமிழர்களுக்கு உழைத்த நேரம்போக உட்கார்ந்து பேச உதவியது. மயக்கத்திலிருந்த காமாட்சியைச் சுற்றிப் பயத்துடனும் கவலையுடனும் முகங்கள். கறுப்பு, பழுப்பு முகங்கள் கபானின் உள்ளேயும், வெளியேயும் இறைந்து கிடந்தன.


கபானுக்கு வெளியே கவர்னருக்கு வேண்டப்பட்டவரான மிஸியே குரோ, கரும்புப் பண்ணை வைத்திருக்கும் மிஷல் தெலகுருவா, மதாம் தூர், பிரான்சிலிருந்து சமீபத்தில் தீவிற்குச் செல்வம்சேர்க்க வந்திருக்கும் தவீது ஆகியோரை முக்கியமானவர்களாகக் கொள்ளலாம்.


காமாட்சி அம்மாளைச் சீனுவாசநாயக்கர் மனைவி, விசாலாட்சி மடியிலிருத்தியிருந்தாள். அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாவின் வலதுதுகரத்தைப் பற்றி நாடிபார்த்து நிம்மதியாய்ப் பெருமூச்சுவிட்டார். சற்றுத் தள்ளி வரிசையாக உட்கார்ந்திருந்த சீனுவாசநாயக்கர், வேலுப்பிள்ளை, சுப்பு முதலியார், செல்லமுத்து செட்டியாரென அனவருக்கும் இப்போது தெம்பு வந்திருந்தது. கபாானுக்கு வெளியே வாயிலுக்கருகில், ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த முனுசாமி, எட்டியான், அஞ்சலை, பிச்சைக்கும் காமாட்சியம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லை என்றசெய்தி பரவச் சற்று முன்னர்வரை சோகத்தைச் சுமந்திிருந்த முகங்களில் மீண்டும் சந்தோஷம். தெய்வானையைத் தாங்கியிருந்த அவள் தோழி, கறுப்பினப் பெண் சில்வியா, மெல்ல தோளினைத் தட்டி விடயத்தைச் சொல்லத் தெய்வானை, கலங்கியைருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று, வந்திருந்த அனைவருக்கும் வெல்லப் பானகம் ஏற்பாடு செய்தாள்.
கடந்த இரண்டு மணிநேரமாகத் தன்நினைவிற்கு வந்த தெய்வங்களையெல்லாம் பிரார்த்தித்துக்கொண்டிருந்த கைலாசத்திற்கும், தனது அன்னைக்கு எந்தத்தீங்கும் ஏற்படவில்லையென அறி,ய மகிழ்ச்சி.. அருணாசலத் தம்பிரான் காமாட்சியம்மாளின் விழிகளின் கண்ணிரப்பைகளை, விரல்களால் மெல்ல மேலே உயர்த்திப் பார்த்தார். தலைலிருந்த காயத்தினை வெந்நீர் கொண்டுவரச் செய்து சுத்தமான துணியால் அழுந்தத் துடைத்து பச்சிலை வைத்துக் கட்டினார்.


'தெய்வானை..! அம்மாவிற்குக் ஒரு தாக செம்பில் பானகம் கொடு ' என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத், தம்பிரான் தனது சுருக்குப் பையிருந்து கொஞ்சம் திருநீறு எடுத்தவர் கணீரென்று சுற்றிலுமுள்ளவர்களை மறந்து,
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவாய் உலக நாடாய வடி
செறிகதிரும் திங்களுமாய் நின்றாடி தீத்திரளாய் உள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவுமடி மந்திரமும் தந்திரமும் ஆயவடி
செறிகெடில் நாடர் பெருமானடி திருவீரட்டானத்தெஞ் செல்வனடி '
தேவாரப் பதிகத்தை இனிய குரலெடுத்துப் பாடிமுடித்து, திருநீறைக் கைலாசத்திடம் கொடுத்து காமாட்சி அம்மாளின் நெற்றியில் பூசச்செய்தார்.. வெளியே காமாட்சியம்மாள் உடல் நலன் தேறிவிட்டது எனவடிமைகள் சொல்லக் கேட்டு பல்லக்கில் புறப்படவிருந்த பறங்கியர்களுக்கு தெம்பு வந்தது. தம்பிரானின் தேவாரப்பதிகத்தைக் கேட்டு காபானுக்குள்ளிருந்தக் கூட்டம் சூழல் மறந்து 'ஆஹா ' வென்றது. எல்லோருடையக் கண்களும் நனைந்திருந்தன. கபானுக்கு வெளியே மலர்ந்திருந்த முல்லையும் மல்லிகையுங்கூட இசையில் மயங்கிப் பூக்கைளைச் சொரிய, குருத்துவாழைகள் அவற்றைக் குனிந்து வாங்கிக் கொண்டன.


காமாட்சியம்மாள் மெல்ல கண்விழித்தார். தன்னருகே கூடியுள்ளவர்களைக் கண்டு நிலைமையை ஓரளவு ஊகிக்கமுடிந்தது. ஏதோ பேசமுற்பட்டபோது, தம்பிரான் 'இப்போதெதுவும் வேண்டாம்!.. பிறகு பேசலாம் என்பதாக, கையசைக்க, காமாட்சியம்மாளுக்குப் புரிந்திருக்கவேண்டும், அமைதியானார்.


'தெய்வானை, உங்கள் காபானுக்குள் வருவது எங்களுக்கெல்லாம் தெய்வ சந்நிதிக்குள் நுழைவதுபோல.இன்றைக்குத் தம்பிரானின் பாடலும் சேர்ந்துகொள்ள, தில்லையம்பலத்தில் நாங்கள் இருப்பதாக நினைவு. முற்றிலுமாக இருட்டுவதற்குள் அவரவர் இருப்பிடத்திற்குப் போய்ச் சேரவேணும். எங்களுக்கு விடை கொடம்மா ' சீனுவாசநாயக்கர்தான் முதலில் வார்த்தையாடிவர்.


' எல்லோரும் கொஞ்சம் பானகமாவது பருகிவிட்டுப் போகலாம். பசும்பால் கூடவைத்திருக்கிறேன். ' - மெல்லிய குரலில் தெய்வானை.
'நன்றியம்மா. பக்கத்திற்தானே இருக்கிறோம் ? அம்மாவும் எழுந்து நடக்கட்டும். இப்போதைக்கு அவர்களுக்கு ஓய்வு தேவை. அப்படித்தானே தம்பிரான் ? ' தான் சொல்வது சரிதான் என்பதுபோல தம்பிரான் பக்கம் நாயக்கர் திரும்பிப்பார்த்தார்.


வைத்தியர் அருணாசலத் தம்பிரான் மெல்லச் சிரித்தார். 'நாயக்கர்! உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு ஏது ? நீங்கள் சொன்னால் எதுவும் சரியாகத்தானிருக்கும். அப்படியே ஆகட்டும் ' என்றார்.
நாயக்கர்களும், மற்றவர்களும் விடை பெற்றுக்கொண்டு ஒருவர்பின் ஒருவராகப் புறப்பட்டுச் சென்றார்கள். இறுதியாக நின்றவர் அருணாசலத்தம்பிரான்.


தெய்வானையிடம்,
'தெய்வானை.. அம்மாவுக்கு சுடச்சுடக் கஞ்சி கொடு. தெம்பு கிடைக்கும். சிறிது நாட்கள் ஓய்வெடுக்கட்டும். நான் நாளை 'மொகா ' வரை போகவேண்டும்; நம்ம சடையன் மகள் 'பூபடைந்து ' விட்டாள்.. அம்மாவும் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. இதுபோல ஆகிவிட்டது. நான் நாளைக்கு மறுநாள் வந்துபார்க்கிறேன். கைலாசம் நாளைக்கு நீயும் கட்டுமானவேலையெதற்கும் போகாமல் கபானிலிருந்து அம்மாவைப் பார்த்துக்கொள். எப்படியும் இன்றிரவு மிஸியே குரோமூலம் குவர்னருக்கும் செய்தி எட்டிடும். '


'தங்கள் விருப்பப்படியே நடக்கிறேன் ஐயா ' எனப் பதிலிறுத்தான் இளைஞன் கைலாசம்.


தம்பிரான் புறப்படுவதற்கெனவே காத்திருந்ததுபோலக் காமாட்சியம்மாள் விழித்துக் கொண்டாள். 'கைலாசம், தெய்வானை என் செல்வங்களே உங்களுக்கொன்றும் ஆகவில்லையே. அருகில்வந்த கைலாசத்தையும் தெய்வானையையும் அவேசத்தோடு இறுகவணைத்துக் கொண்டாள்.


'அங்கே யார் ? சில்வி நீயா ? இப்படி அருகில் வாம்மா. உன்னைப் பார்த்து இரண்டு கிழமையிருக்குமே. ? உன் பெற்றோர்கள் அந்த ரெனோ தடியனிடந்தான் வேலையிலிருக்கின்றார்களா ? '


சில்வியாவும் இப்போது காமாட்சி அம்மாளிடம் நெருங்கி நின்றாள்.
'அம்மா.. இப்போதைக்கு உங்களுடைய நலமே முக்கியம். உங்களுக்கு ஓய்வு தேவையென வைத்தியர் தம்பிரான் சொல்லியிருக்கிறார். ' எனச் சில்வியா பதிலிறுக்க, தெய்வானையும் கைலாசமும் ஆமாம் என்று தலையசைத்தனர்.


'இல்லைப் பிள்ளைகளே. நீங்கள் உடனே ஒரு காரியஞ் செய்யவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்தென என்மனம் அஞ்சுகின்றது. எந்த ஆபத்து உங்களை நெருங்கக் கூடாதென இத்தீவிற்கு வந்தோமோ, இப்போது நடந்துவிடுமென்கிற அச்சம். இவ்வளவு நாட்களாக இங்குள்ள இந்தியர்கள் அனைவரும் நமது நம்பிக்கைக்கு உரியவர்கள் என நம்பினேன். இன்றைக்கு என்மீது நடந்த தாக்குதல் அதனைப் பொய்யாக்கிவிட்டது.

'ஈஸ்வரா! நாங்கள் யாருக்கு என்ன தீங்கிழைத்தோம் ? ஏனிப்படிச் சோதனை செய்கிறாய். ? '

'அம்மா..! நீங்கள் இவ்வளவு கவலையை மனதிற் புதைத்துக் கொண்டுதான் இத்தனை நாட்களாக வாழ்ந்து வந்தீர்களா ? நாங்கள் என்ன சின்னக்குழைந்தைகளா. எதையும் தாங்குகின்ற எதிர்க்கின்ற வாலிபப் பிராயத்திலிருக்கிறோம். இப்போதாவது உங்களது மனச் சுமையை இறக்கிவையம்மா ' - கைலாசம்.


' இல்லை மகனே. அதற்கு முன்னதாகவொரு காரியம் உடனடியாக நடந்தாக வேண்டும். '


' என்ன செய்ய வேண்டும் ? அம்மா! '


' பாம்ப்ளுமூஸ் அருகேயுள்ள பெரியமூங்கிற்காடுவரை சென்றாக வேண்டும். அங்குள்ள துர்க்கை பீடத்தருகே, வலது புறத்தில் இரண்டு தென்னைகள் ஒன்றையொன்று பின்னியிருக்கும். அதன்கீழே இரண்டு அல்லது மூன்றடி தோண்டினால் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி கிடைக்கும் அதனை உடனே கொண்டுவந்துவிடுங்கள்.


' என்னம்மா ? இந்தநேரத்திலா ?


' ஆமாம் இந்தநேரத்தில்தான். இப்போதே புறப்பட்டாகவேண்டும். ஏன் பயமாகவிருக்கிறதா ? நீ ஆண்மகன்தானே ?. '


'அம்மா.. '


' போடா போ சொன்னதைச் செய்.. அதுவரை எந்த ஆகாரமும் எனக்கிறங்காது '


'கைலாஸ்..! நானழைத்துப் போகிறேன் வாருங்கள். ' சில்வி அவனது தோளைத் தொட்டு அழைத்தாள்.


'அண்ணா..! நான்.. '


'இல்லை தெய்வானை நீ அம்மாவுக்குத் துணையாகக் கபானில் இரு, நாங்களிருவரும் போய் வருகிறோம் '.


கைலாசமும் சில்வியும் கபானைவிட்டு இறங்கி, இன்னும் முழுச்சாலையாகப் பரிணமிக்காத பாதையில் நடக்கவாரம்பித்தார்கள். நட்சத்திரங்கள் இல்லாத கும்மிருட்டு. தீவில், நல்லபகல் நேரத்திலேயே சரைளைக் கற்களில் இடிபட்டு நடக்கவேண்டும். தொட்டால் ஒட்டிக் கொள்ளுமிருட்டில், கபான்களை பின்னேதள்ளி பாம்ப்ள்மூஸ் செல்லும் கரடுமுரடான பாதையில் நடப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.


சில்வியா முன் செல்லக் கைலாசம் பின்னே நடந்தான். காற்றில் மரங்கள் கூடுதலாகவே அசைந்து அச்சமூட்டின. எங்கேயோவொரு ஆந்தை அலறிவிட்டுச் சடசடவென இறக்கையடித்து எழுந்து பறக்கின்ற சப்தத்தைக் கேட்டு, இருவருமே தயங்கி நின்றனர். துர்க்கைபீடமிருக்கும் பெரிய மூங்கிற்காடு திசையில்- பாதையைய விட்டு இறங்கிக் கற்றாழை, கோரைப்புற்கள், பனை வடலிகள் எனவொதுங்கி, அரைமைல் தூரம் ஒற்றைத் தடத்தில் நடந்தனர். இதற்குள், இருவருக்குமே இருட்டுப் பழகிவிட்டிருந்தது. சுமார் பத்தடி தூரத்தில் துர்க்கைப் பீடந்தெரிய மனதைத் திடப்படுத்திக்கொண்டு இருவரும் நடந்தனர். இப்போது கைலாசத்தை முன்னே செல்ல அனுமதித்துச் சில்வி பின் தொடர்ந்தாள்.
சில அடிகள் எடுத்துவைத்திருப்பார்கள். திடாரென்று ஓர் அந்நியமணம், சில்வியின் நாசி மடல்களைத் தீண்டியது. சில்வியின் மனது, வரவிருக்கும் ஆபத்தை எச்சரித்தது. முன்னே செல்லும் கைலாசத்தின் வலது கையினைத் தொட்டிழுத்தாள். அவளின் எச்சரிக்கையைப் புரிந்து.கொள்ளவியலாத கைலாசம், வாய் திறந்து காரணம் கேட்பதற்குள் முந்திகொண்டாள். அவன் உதடுகளின் பிளவுகளுக்கிடையில் தனது ஆள்காட்டி விரலை அழுந்தப் பதித்தாள்.


'உஸ். .. கைலாஸ் நம்மை யாரோ பின் தொடருகின்றார்கள். அமைதியாக இரு. '


'எப்படிச் சொல்கிறாய் ? '


' எங்களால் அறியமுடியும். காற்றில் வாசம் பிடித்தே மனிதர்களா மிருகங்களா என்பதை எங்களால் உணர முடியும். என்பதை நீ அறிந்தவன் தானே ? '


உண்மைதான். மோப்ப மூலம் என்ன விலங்குகள் எங்கே இருக்கின்றன என்பதைக்கூடத் தெளிவாக சில்வி சொல்லிவிடுவாள் என்பதைக் கைலாசம் அறிவான்.


'இப்போது என்ன செய்யலாம் ? '


' அதோ அங்கே.. அந்தப் புதரின் பின்னே தற்போதைக்குப் பதுங்கிக்கொள்ளுவோம் '


இருவரும் புதரின்பின்னே மெல்லநடந்து ஒளிந்துகொண்டனர்.. இவர்கள் பதுங்கியிருந்தப் புதரினை நோக்கி இப்போது காலடிகள். சில்வியின் இதயம் அதிவேகமாக இயங்கியது. வீசுகின்ற குளிர்காற்றால், உடல் நடுக்கம் கண்டது. அவளை அமைதிப்படுத்துகின்றவகையில், கைலாசம் அருகிலிழுத்து அணைத்துக்கொண்டான். உடலையொட்டியும் மனதை ஒட்டாமலும் காத்திருந்தனர்.

தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் - 5

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை....... குயில்பாட்டு - பாரதியார்.



கிழக்கே வங்காள விரிகுடாவிற்கு மேலே அக்கினிக்கோளமாய்ச் சிவந்திருந்த சூரியன். அதனைச்சுற்றி கும்மட்டியிலிட்ட வெள்ளியாய் மேகம். அடிவயிற்றில் சூரியனைச் சுமக்கின்ற சுகத்தில் வெளுத்திருக்கும் வானம். அவ்வழகில் ஈர்க்கப்பட்டுத் தலை உயர்த்திப் பின்னர் நீலத்திரையில் முகம் மறைக்கும் அலைகள். அவற்றினூடே கிழக்குத் திசையில் தலையை உயர்த்தி நீந்திச் செல்லும் படகுகள். அதிகாலைக்கு ஆரத்தி எடுக்கும் கடலோர நுரையலைகள். கடலையொட்டி வரிசையாக நிறுத்தபட்டிருந்த பீப்பாய்களை நிரப்ப, செம்படவப் பெண்கள் தள்ளியிருந்த கிணறுகளிலிருந்து சும்மாடுகளில் பருத்த மார்புகள் அசைய குடங்களில் நீர்சுமந்து ஊற்றிக்கொண்டிருக்க, அவற்றில் தலையை நனைத்து, பின் சிலிர்த்து எழுந்தோடும் நீர்க்காகங்கள். தைமாத சாம்பல்வண்ணமேகங்கள், வெண்பனிச்சாரல்.

கோட்டைக்குள்ளிருந்து ஒலிக்கும் தேவாலயமணி, வேதபுரீஸ்வராலயத்தில் ஓதுவார் பாடும் தேவாரம், வரதராசபெருமாள் ஆலயத்திலொலிக்கும் ஆழ்வார் திருமொழி, வழுதாவூர்ச்சாலையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளில் இடையிடையேயிருக்கின்ற ஆலமரங்களிலிருந்தும், இலவமரங்களிலிருந்தும் வைகறைக் குரலெழுப்பும் காக்கைகள், குயில்கள், வெளவால்கள், தூக்கணாங்குருவிகள் - அடடா..புதுச்சேரி விழித்துக் கொண்டது.

புதுச்சேரித் துறைமுகத்தில் வந்து சேர்ந்திருந்த 'லெ பொந்திஷேரி ' என்கின்ற வணிகக் கப்பலும், பாதுகாப்பாக வந்திருந்த போர்க்கப்பல்களான 'கொர்சேர் ' கப்பல்களும் கரையிலிருந்து பாதுகாப்பாக மிகவும் விலகி நங்கூரமிட்டிருந்தன. அப்படி நிற்கக் காரணமிருந்தது. அக்டோபரிலிருந்து ஜனவவரிவரை சில நேரங்களில் பிப்ரவரியிற்கூட வீசுகின்ற புயற்காற்றுக்குப் பயந்தாகவேண்டும். 'லெ பொந்திஷேரி 'யிலிருந்து பொதிகள் இறக்கபட்டுச் சுற்றிலும் சூழ்ந்துநின்ற ஷெலேங்கு(Chelingue)படகுகளில் சுறுசுறுப்பாக ஏற்றப்பட்டன. படகுகள் செலுத்தும் செம்படவர்களின் குரலும், பொருட்களை இறக்குந் தினக் கூலிகளின் குரல்களும் கோட்டைக்குள்ளிருந்த கிடங்குகள்வரை தொடர்ந்தன.

கடற்கரைக்கு நேர் எதிரே, ஆபத்தைத் தவிர்க்கின்றதோ இல்லையோ அழகாகப் பிரான்சிலுள்ள 'வொபான் ' கோட்டைகளின் சாயலில் வடிவமைக்கபட்டிருந்த சென் - லூயி(Saint-Louis)க் கோட்டை. ஐந்து கொத்தளங்களும் இரண்டு பெரிய கதவுகளுடன்கூடிய வாயில்களும் இருந்தன. முதல்வாயில் பிரதானவாயில். குவர்னர், அவரது குடும்பத்தினர், பிரஞ்சு இந்திய குழுமத்தின் முக்கிய நிர்வாகிகள், துபாஷ், மதகுருமார், அரசின் முக்கிய விருந்தினர்களென அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களின் உபயோகத்திலிருந்த வாயில். இதரதரப்பினருக்கும், அடிக்கடி சண்டைபிடித்துக்கொண்டு பிரெஞ்சு நிர்வாகத்திடம் தஞ்சம் புகும் துக்கடா இராசாக்களுக்கும், நிலவில்லாப்பின்னிரவுகளில் மூடிய பல்லக்குகளில் தாசிகள் வந்துபோகவும் உபயோகத்திலிருந்தது.

இரண்டம்ாவாயில் எனவழைக்கபட்ட டெல்பின் வாயில். கோட்டைக்குள்ளே குவர்னர் மாளிகை. அதனையடுத்து சொல்தாக்களின் (படை வீரர்களின்) 'கசெர்ன் ' எனவழைக்கப்படும் குடியிருப்புகள். 'கப்புசென் ' தேவாலயம், வணிகவளாகமென வெள்ளையர்களுக்கான இதயப்பகுதி. இப்பகுதிகளையொட்டி வடக்குத் தெற்காகப் பரவியிருந்த பறங்கியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 'வெள்ளையர் குடியிருப்பு ' (La Ville blanche) அதனைத் தொடர்ந்து தமிழர்களுக்கான 'கறுப்பர் குடியிருப்பு '(La Ville noire). இவ்விரு பகுதிகளையும் பாதுகாக்கின்றவகையில் சுமார் ஏழு மீட்டர் உயரத்திற்குப் பலமான சுவர்கள். இச்சுவர்களுக்கிடையில் சிப்பாய்களின் பாதுகாப்புடன் கூடிய மூன்று சிறிய வாயில்கள். அவை முறையே வில்லியனூர், வழுதாவூர், மதராஸ் வாயில்கள் எனப்பட்டன.

கோட்டையை ஒட்டி குவர்னர் துய்மா ஏற்படுத்தியிருந்த அகழியை, அவருக்குப் பின் பொறுப்பேற்றிருந்த குவர்னர் துய்ப்ளெக்ஸ் முடித்திருந்தார்.
பெர்னார் தங்கியிருந்த குடியிருப்பு, பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் புதுச்சேரிப் பிரிவின் துணை நிர்வாகி வேன்சான் குடியிருப்புக்கருகே, ஒதுக்கப்பட்டிருந்தது. அனைத்துப் பறங்கியர்க்கான குடியிருப்பைப்போலவே முகப்புடனும், உயர்ந்த தூண்களில் நிறுத்தப்பட்டு, கீழைநாடுகளுக்கேயுரிய செடிகள், கொடிகள், மரங்களின் அடர்த்தியில் - சூழலில், சற்றே ஒளிந்து, கடலைப்பார்த்த வராண்டாவுடன் அமைந்த குடியிருப்பு.. உயர்ந்த தளம். எப்போதாவது, குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பாராதவிதமாக வீசுகின்ற மண்காற்றினைத் தடுப்பதற்காக தொங்கவிடப்பட்ட மிகவும் தடித்த வெட்டிவேராலான திரைகள். குளிர்காலமென்பதால் அவை மேலேசுருட்டப்பட்டு உத்தரத்தில் கட்டபட்டிருந்தன. நடுக்கூடத்தில் இருக்கைகளுக்குமத்தியில் ஒரு பங்கா. அதன் நீண்டகயிறு கிழக்கேயிருந்த சன்னலையொட்டிக் கட்டப்பட்டிருந்தது. கீழை நாடுகளின் பட்டுவிரிப்புகள், புதுச்சேரியில் தீட்டபட்ட வண்ணத் துவாலைகள், சீன, பாரசீக ஓவியங்களென என நம்மை ஆச்சரியமூட்டும் அலங்காரம். இதுபோதாதென்று, பித்தளைப் பூண்களும் - முகப்புகளும் கொண்ட தேக்கு, மஹோகனி, கருவாலி மரங்களாலான, தந்தங்கள் அல்லது முத்துச் சிப்பிகள் பதிக்கப்பட்ட, மேசை நாற்காலிகள், அலமாரிகள், நிலைபெட்டிகள். தேவையான இடங்களில் காகித்தாலான சீனப் பரவான்கள். மொத்தத்தில் நேர்த்தியும் வசதியும் நெருங்கியிருந்த குடியிருப்பு.

இவனது குடியிருப்பைக் கவனித்துக் கொள்வதற்காக இரண்டு சிறுவர்களை குப்பன்- சுப்பன் பெயர்களில் பக்கத்துக் குடியிருப்பிலிருக்கும் நிர்வாகி அனுப்பியிருந்தார். அவர்களிருவரும் புதுச்சேரிக்குத் தென்மேற்கேயிருந்த பாகூரிலிருந்து பஞ்சகாலங்களில் விலைக்கு வாங்கப் பட்டிருந்த அடிமைககள். இது தவிர அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த கீழ்சாதித் தமிழர்கள் இருவரும் பணியிலிருந்தனர். பறங்கியர்களுக்கு இஇப்படியான தமிழர்களை வைத்துக் கொள்வதிலொரு செளகரியமிருந்தது. மற்றவர்களென்றால் அடிக்கடி தலையைச் சொறிகின்ற ரகம்.. தோட்ட வேலை செய்பவன், தோட்டி வேலையை மறுப்பான், துணிதுவைப்பன் முடி வெட்டினால் தன் சாதிக்கு அவமானமென்பான்.

இவர்கள் முகம்ஞ்சுளிக்காமல் எல்லா வேலைகளையும் செய்தார்கள். இவர்களைத் தவிர, இதர வெள்ளையர்களின் குடியிருப்புக்களையொப்ப தமிழர்களுக்கும், பறங்கியருகுமிடையில் இருந்துகொண்டு ஊழியர்கைளை வேலைவாங்கவும், எஜமான் பறங்கியனின் இந்தியச் சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கவும், மொழி பெயர்க்கவும் இங்கேயும்மொரு 'துபாஷ் ' (Dubash or Doubachi பெயர் -பலராம் பிள்ளை.
துபாஷ் பலராம்பிள்ளை வெளியே அதட்டிக் கொண்டிருந்தார்.. அவர் குரல்கேட்டு பெர்னார் விழித்துக் கொண்டான். கப்பற் பயணக் களைப்பு உடலில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. இலவம் பஞ்சினாலான மெத்தை, பருத்தி விரிப்புகள் அவனைக் கூடுதலாகக் கண்ணயருமாறு வற்புறுத்தின. பின்னிரவுக் கனவில் தெய்வானை. அவள் நிலவு முகமும், நிலம் நோக்கிய பார்வையும், இருளொத்த கூந்தலும் இரண்டாய்ப் பிளந்த மாதுளை அதரங்களும், உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் அவனைத் தேடிவருபவை. அவன் உயிரிற் கலந்த மூச்சுஅவை. அம்மூச்சுக்காக, இவனது உயிர், ஆற்றவேண்டிய காரியங்கள் வரிசையாகவுள்ளன. கட்டிலிருந்து எழுந்து சப்பாத்தணிந்து, கிழக்கேவிருந்த பெரிய சன்னலையொட்டி நின்றான்.

திரையினை நீக்கியதும் கண்கள் முழுக்க நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலைகளால் விடுக்கும் அழைப்பு. அதில் இறங்கி வா! எங்கள் தேவதை தெய்வானையிடம் சேர்ப்பித்து விடுகிறேன் என்கின்ற உறுதிப்பாடு. 'நிலம் கடந்து, நீரிறங்கி தெய்வானையைக் கைபிடித்து வானமேறி யுகங்கள்தோறும் ஜீவிக்கவேண்டும் ' இயலுமா ? 'இயேசுவே ' முணுமுணுத்தான்.

'ஐயா.. கபே..... '

சீனப் பீங்கான் குவளையில் பால் கலவாத கறுப்பு காப்பியும், கிண்ணத்தில் சர்க்கரையுடனுமான தட்டத்தினைப் பணிப்பெண் தாழ்த்திப் பிடித்தாள். பெர்னார் காப்பியுடனான குவளையையும், ஒரு கரண்டியும் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு அவளை அனுப்பிவைத்தான்.

வணங்கியவாறு பின்சென்றவளிடம்
' பலராம்பிள்ளையை உள்ளே வரச்சொல் ' என்றான்.

இவன் குரலுக்காகவே காத்திருந்ததுபோலப் பலராம்பிள்ளை உள்ளே ஒடிவந்தார். குனிந்து வணங்கினார். குனிந்ததால் தலைப்பாகை அவிழ்ந்து விழுந்தது. அதனை எடுத்து இருகைகளிலும் பிடித்துக்கொண்டு மீண்டும் பணிவாகக் குரலைத் தாழ்த்திப் பிரஞ்சில் கேட்டார்.

' ஏதாவது காரியம் ஆகவேண்டுங்களா '

'மிஸியே பல்ராம் புள்ளே. உடனடியாக நான்செய்யவேண்டியது, புதுச்சேரி குவர்னரைச் சந்தித்து, பிரஞ்சுத்தீவின் குவர்னரிடமிருந்து கொண்டுவந்துள்ள கடிதத்தைச் சேர்ப்பிக்கவேண்டும். பிறகு மேன்மைமிகு புதுச்சேரி குவர்னர் வற்புறுத்தினால் அவருடன் மதிய உணவு. பயணக் களைப்பிலிருந்து நான் முழுவதுமாக விடுபடவில்லையென்பதால்.அதன்பிறகு கொஞ்சம் ஓய்வு.. பிற்பகல், புதுச்சேரியைச் சுற்றிப்பார்த்துவரலாமென்கிற எண்ணம்.. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்தது.

இது தவிர உடனடியாக எனக்கு இரண்டு காரியங்கள் ஆகவேண்டும். முதலாவதாக, புதுச்சேரியிலிருக்குவரை நம்பகமான இளைஞன் ஒருவன் துணைக்கு வேண்டும். இரண்டாவதாக ஒரு நல்ல அராபியக் குதிரையொன்று எனது உபயோகத்திற்காக புதுச்சேரி நிருவாகத்திடம் கேட்கப்படவேண்டும்.. '

'பிரான்சுவா துரை அனுப்பியதாகக் கூறிக்கொண்டு காலையிலிருந்து உங்களுக்காக தேவராசன் என்கின்ற சிப்பாய் ஒருவன் காத்திருக்கின்றான் பிரபு!.. '

'மிஸியே பலராம் புள்ளே.. நாமிருவரும் தனித்திருக்கும்போது நீங்கள் என்னை பெர்னார் என்றே அழைக்கலாம். நான் வயதில் சிறியவன் '

' இல்லை துரை.. என்னவிருந்தாலும் நாங்கள் உங்களை அண்டிப் பிழைக்கின்றவர்கள். '

'வேண்டாம் புள்ளே எனக்கந்தச் செயற்கை மரியாதைகளில் விருப்பமில்லை. வேண்டாமென்றால் வேண்டாம். அப்படி அழைப்பதுதான் விருப்பமென்றால், நீங்கள் வேறுயாரிடமாவது துபாஷாகவிருக்கலாம் '

'ஐயா..! '

' சரி.. சரி இனி அப்படியென்னை அழைக்கமாட்டார்களென்றே நம்புகிறேன். நான் சொன்னவற்றை செய்யுங்கள் '

'பிரான்சுவா துரை அனுப்பிய தேவராசன்பற்றித் தங்களிடம் விண்ணப்பித்தேனே '

'மன்னிக்கவும். அவனை நேற்றே வரவேண்டாமென்று சொல்லியிருந்தேனே. ஏதேனும் காரணங்கள் எடுத்துரைத்து அவனைப் பக்குவமாக அனுப்பிவிடுங்கள். எனக்கு வேறொரு நம்பகமான ஆள் வேண்டும். '

'அப்படியே! தங்கள் மனசுபோல நடக்கிறேன். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குவர்னர் சமூகம் செல்லலாம். நான் வெளியே காத்திருக்கிறேன். ' மீண்டும் துபாஷ் பல்ராம்பிள்ளை பணிவாகத் தனதுப் பதிலினைத் தெரிவித்தார்.

'பல்லக்கு வேண்டாம்.! இங்கிருந்து குவர்னர் மாளிகைக்குச் செல்வதற்குப் பல்லக்கு எதற்கு ? நடந்தே போகலாம்.. நீங்கள் இங்கேயே இருந்து நான் சொன்ன மற்ற ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

முத்தியால்பேட்டைவரை சென்று வேலாயுதமுதலியார் என்பவர் பற்றிய முழுத் தகவல்களை அறிந்துவாருங்கள். இது ரகசியமாக இருக்கட்டும். மாலை நாம் இருவரும், இரவு உணவிற்குப் பிறகு முழுவதுமாக பேசுவோம். '

' அவ்வாறே ஆகட்டும் மிஸியே '

'இல்லை, அப்படி இல்லை பெர்னார் எனவழையுங்கள் '

' அவ்வாறே ஆகட்டும் பெர்னார் ' தயங்கியவாறே கூறிவிட்டுச் சென்ற பலராாம் பிள்ளையை நினைத்துப் பெர்னாருக்குச் சிரிப்புவந்தது.
காலை பதினோருமணிக்கு, பெர்னார் குவர்னர் மாளிகையை அடைந்தபோது, குவர்னர் துய்ப்ளெக்ஸ், மதாம் ழான் அல்பெர்த் துய்ப்ளெக்ஸ் பொறியியல் வல்லுனர் பராதீ, குவர்னருக்கு வேண்டப்பட்டவனும் சீனா, பிலிப்பைன்ஸ் வணிகக்கப்பல்களோடு பயணிப்பவனுமான பிரான்சுவா கார்வாலே, பெத்ரோ கனகராயமுதலியார், மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிருவாகிகள் வட்டமாகக் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்து மதுவருந்திகொண்டிருந்தனர்.

முதலியாரைத்தவிர அனைவரது கைகளிலும் மதுக் கோப்பைகளிருந்தன. துணைக்குப் பொரித்த மீன்கள், முதலியார் தனது இல்லத்திலிருந்து கொண்டுவந்திருந்த இறைச்சி உருண்டைகள், பிரான்சிலிருந்து வந்திருந்த 'சொஸ்ஸிஸ்ஸோன். '

'மேன்மைமிகு கவர்னருக்கும் மற்றவர்களுக்கும் வணக்கம் ' கூறியவன், அருகிலிருந்த மதாம் ழான் துய்ப்ளெக்ஸ் வலது கரத்தை மெல்லப்பற்றிக் குனிந்து முத்தமிட்டுத் தன் வணக்கத்தை அவளுக்கும் தெரிவித்துவிட்டு, எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

'உட்கார்! பிரெஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயத்தைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் பருகு ' குவர்னர் துய்ப்ளெக்ஸ்
'நன்றி. இப்போது எனக்கு வேண்டாம். '

'அப்பெரித்திஃப் ' ஆக கொஞ்சமேனும் பருகு. எங்களுக்கும் உற்சாகமாகவிருக்கும். நன்கு ஓய்வெடுத்தாயா ? '
'நன்கு தூங்கினேன். உங்களைக் காணவேண்டுமென்ற கடமையுள்ளதல்லவா ? அதனால் வந்திருக்கிறேன்.

' இச்சாராயம் மிகவும் அருமை. பிரஞ்சுத் தீவுத் தயாரிப்பா ?.
' பராதி.
' உண்மை!. மிஸியே பராதி! இது பிரஞ்சுத் தீவிலிருந்து வந்துள்ள சாராயம். கரும்பிலிருந்து தயாரித்திருக்கின்றார்கள் குவர்னர் லாபொர்தெனே எனக்காகவென்று ஐம்பது போத்தல்களைக் கொடுத்துவிட்டிருக்கிறார். '
'மிகவும் அருமை. இதுவரை இப்படியொன்றை அருந்தியதில்லை. கூடுதலாகச் 'சொஸ்ஸிஸ்ஸோன் ' வேறு. ' கார்வாலே ஆமோதித்தான்.

'பிரஞ்சுத் தீவில் குறிப்பாக போர் லூயி (Port Louis) யின் கட்டுமானப் பணிகள் எவ்வாறு உள்ளன. ? '
' இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற தமிழர்களின் திறனால் வேலைகள் மிகத் துரிதமாக, மேன்மை மிகு குவர்னர் எண்ணத்தைப் போல நடந்து வருகின்றன. நமது தாய்நாட்டிலிருந்தும் பொருளீட்டுவதற்கெனத் தீவுக்கு அவ்வப்போது இரண்டொரு குடும்பங்கள் ஆர்வத்துடன் வந்த வண்ணமிருக்கின்றனர். திவீல் எங்கே கால்டி எடுத்து வைத்தாலும் கட்டுமானப் பணிகள். எல்லாவற்றையும் செம்மைப்படுத்த
வேண்டியுள்ளதால், சற்று கடுமையான வாழ்க்கை. '

' மிஸியே பராதி.. புதுச்சேரி நாணயச்சாலை வேலைகள் எவ்வாறுள்ளன ? முன்னேற்றம் கண்டுள்ளதா ? ' - பெர்னார்

'குறிப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் உள்ளது.. ஓரளவு உபயோகத்திலும் இருக்கிறது. எனினும் முழுவதுமாகக் கட்டி முடிக்கக் கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். ' - பராதி

' பெர்னார் அங்கே பெண்கள் கிடைக்கின்றார்களா ? ' மதாம் ழான் சிரித்தவாறு கேட்டுக் கண்ணைச் சிமிட்டினாள் '

' இல்லை ஷெரீ. நமது பெர்னார் நல்ல பிள்ளை. அவ்வாறான தப்பெல்லாம் செய்யமாட்டான் என்று கேள்வி '

'தங்கள் அபிப்ராயம் முற்றிலும் உண்மை பிரபு. என்னை மணக்கவிருப்பவளுக்கு நான் உண்மையானவனாக இருக்கவேண்டுமல்லவா ?. '

' அப்படியா சந்தோஷம். நமது பிரபுவிற்கு குடித்து முடித்தால் வெத்திலைமெல்லும் தாசிகளும், கவிச்சியடிக்கும் செம்படவப் பெண்களும் தேவையாகின்றது. ' என்று சொல்லிவிட்டு மதாம் துப்ளெக்ஸ் குவர்னரைப் பார்த்தாள். '

பராதி உரையாடலை வேறுதிசைக்குத் திருப்ப விரும்பினான்.

'ஐரோப்பாவில் நடக்கும் ஆஸ்திரியா வாரிசு உரிமைப் போர், கவலை கொள்ள வைத்திருக்கிறது. இங்கே நாம் ஆங்கிலேயர்களிடம் கவனமாயிருத்தல் அவசியம். '

'உண்மை மறுப்பதற்கில்லை. இது விஷயமாகக் குவர்னர் லாபொர்தெனேவிற்குத் தகவல் போயிருக்கிறது. நமக்கேனும் பிரச்சினையெனில் அவரது உதவியை எதிர்பார்க்கலாம். ' என்ற குவர்னர் துய்ப்ளெக்ஸ் எதிரே அமர்ந்திருந்த பெர்னாரைப் பார்த்தார்.

'பிற்பகலுக்கு ஏதேனும் பிரத்தியேகப் பணிகள் இருக்கின்றதா ?. குதிரைகள் கேட்டிருந்தாக அறிந்தேன் '

' புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்துவரலாம் என்கின்ற விருப்பமின்றி வேறல்ல '

' அப்படியா நல்லது. அதிகதூரம் போவது உசிதமல்ல. சரி சரி நேரமாகின்றது. பெத்ரோ..! பரிசாரகனை உணவினைக் கொண்டுவரச் சொல்லுங்கள். '

நீண்ட வேலைப்பாடுமிகுந்த அம்மேசையிலிருந்த போத்தல்களும், குப்பிகளும் அகற்றப்பட்டு புதிய விரிப்பு இடப்பட்டது, சீனப் பீங்கான் தட்டுகளும் கொண்டுவரப்பட்டன. முட்கரண்டிகளும், கத்திகளும் அவற்றின் இருபுறமும் வைக்கப்பட்டன. முட்டை சலாட், நெருப்பில் வாட்டப்பட்டிருந்த இரண்டு பெரிய வான் கோழி, ஆலிவ்வுடன் கூடிய பன்றி இறைச்சி, ஒரு தட்டில் இத்தாலியன் பாஸ்த்தா, பாதாமில் செய்யப்பட்டக் கேக், சிவப்பு ஒயின் வரிசையாகக் கொண்டுவரப்பபட மேசை நிரம்பியது.



.
பெர்னார் அவைகளை வியப்போடு பார்த்துகொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது. தட்டங்களில் பறிமாறப்பட்ட உணவுகளுக்குப் பதிலாக பாம்புகளும் தேள்களுமாக உயிர்பெற்று மெள்ள அவனை நோக்கி ஊர்ந்துவந்தன. அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

தொடரும்.....

நீலக்கடல் - அத்தியாயம் 6

<>நீலக்கடல் <>

நாகரத்தினம் கிருஷ்ணா


'Akabya ben Mahalel said; Ponder on three things and you will not come under the power of error: Know where you came from, where you are going, and before Whom you are destined to make an accounting. Where do you come from ? From a stinking drop (of semen). Where are you going ? To a place of dust and worms (the grave). Before Whom are you destined to make an accounting ? Before the Supreme Potentate over all of the earth 's rulers, the Holy Blessed One '
- Talmud, Pirke Abot 3:1.


இருபதாம் நூற்றாண்டு...

'பெண்ணே நில் ' இவனது குரல் அவளுக்குக் கேட்கின்றதா ?


கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால், இவன் திசையில், பார்வையைச் செலுத்தியிருப்பாளா ? அவள் கால்கள் தயங்குகின்றன. ஒன்றையொன்று இடறுகின்றன. அவள் மனதிற்குள் அத்தயக்கம் இருந்திருக்குமா ?

இருந்திருந்தால் இவனது குரலை அல்லது அவனது வேண்டுதலை இப்படி அலட்சியம் செய்துவிட்டு, உடலைச் செலுத்த முனைவாளா ? தன் எண்ணத்தை நிறைவேற்றுவதிலொரு முடிவான தீர்மானமிருக்க வேண்டும். அவளைத் தொடர்ந்து இதுவரை ஓடிவந்ததில் இதயத்தின் இயக்கம் இருமடங்காகியிருந்தது.


இயல்புக்கு மாறாக நூரையீரல் விரிந்து சுருங்கியதில் சோர்ந்திருந்தான். நின்றான். மூச்சுவாங்கினான். நிமிர்ந்தான். பார்த்தான். தொட்டுவிடும் தூ......ரத்தில் அவள். நடையை எட்....டிவைத்தால் தொட்டுவிடலாம், அவைளை பிடித்துவிடலாம்... அப்படித்தான் நினைத்து நினைத்து, நடந்து நடந்து, ஓடிஓடி... இல்லை, தொடமுடியவில்லை. அவனுக்கும் அவளுக்குமான அந்தத் 'தொட்டுவிடும் தூரம் ' நெருங்க நெருங்கக் குறையாமல், போக்குக்காட்டும் வானவில்லாக ஆனால் வண்ணங்களை இழந்த வானவில்லாக, விலகி விலகி இவனை மட்டும் பாலைமணலில் நிறுத்தி, மணற் புயலிற் தவிக்கச் செய்து, இறுதியில் மறைந்தும் போகிறாள்.


...மீண்டும் இவன் முன்னே முளைத்து, அவளிருப்பை இவன் அங்கீகரிப்பதற்கு முன்பாக, கண்முன்னே-பிரமாண்டமான கோபுரத்தில் ஒவ்வொரு மாடத்திலும் ஏறி நின்று, கீழ் நோக்கி ஒரு திடமான வெறித்தப் பார்வை. அடுத்தகணம், அம்பு தைத்த புறாவாக, தலை கீழாக, காற்றைக் கிழித்துக்கொண்டு நீரில்.. தொபீர்...


' ஐயா... ஆரேனும் ஒடி வாருங்களேன்.. இவளைக் காப்பாற்றுங்களேன் '


இவனது கதறல் யாருக்கேனும் கேட்டிருக்குமா ? இவனையே எட்டவில்லையே.! மற்றவர்களுக்கெப்படி ?
கைகளையும் கால்களையும் இங்கே இவன் உதறிக்கொள்ள,... அவளது உயிர் குமிழ்களாக நீர்ப்பரப்பில் உடைந்து கொண்டிருக்கின்றன..


'ஆரேனும்.. ஐயா....!ஆரேனும்...இவளைக் காப்பாற்றக்கூடாதா ?.. '


'சார்.. சார்...! என்னாச்சு ? கதவைத் திறங்க ' தொடர்ந்து கதவு இடிபடுகின்றது. பெர்னார் விழித்துக் கொண்டான்.


எதிரே சுவரொட்டி நிறுத்தப்பட்டிருந்த பிரான்சின் லியோன் நகரத்துக் கடிகாரத்தில் அதிகாலை மணி மூன்றரையென அறிவித்தது. கனவின் தொடர்ச்சியாக வியர்த்திருந்தான். எழுந்து மின்சார விளக்கை எரியவிடுவதற்காக, அதற்கான ஸ்விட்சைப் போட்டான். அவ்வறையில் காற்றின்றி ஒருவித இறுக்கம். தலையை உயர்த்திப்பார்க்க, மின்சார விசிறியும் சுழாலாமிருக்க, மின்சாரத் தடையெனக் காரணம் புரிந்தது. இதுபோன்ற நேரங்களிற்தான் இந்தியாவின் மீது எரிச்சலும், சொந்த நாட்டு ஏக்கமும் தவறாமல் ஏற்படும். எழுந்து ஸ்லிப்பரை அணிந்துகொண்டு, அறையையொட்டிய கூடத்து மேசையிலிருந்து சிகரெட்டொன்றைப் பற்றவைத்தான். பதட்டம் தணிந்தது.


'சார்!.. என்ன ஆச்சு சார் ? ஏதாவது பிரச்சினைங்களா ? ' மீண்டும் வெளியேயிருந்து கரகரத்த - உடைந்த குரல்.

உதவிக்காக இவனுடனேயே வைத்துக் கொண்டிருக்கும் பையன் மணியின் குரல்.


'ஒண்ணுமில்லை மணி.. நீ போய்ப் படு ' பெர்னார்.


இவனது பதில் பையனுக்குத் திருப்தி அளித்திருக்கவேண்டும். அவனிடமிருந்து வேறுவகையானக் கேள்விகள் வரவில்லை.
இனித்தூங்கவியலுமா ? முடியாது. கடந்த சிலவாரங்களாக, அவனுக்கேற்பட்டிருக்கும் அனுபவமிது.


'எழுந்து சென்று, மனதுக்கு இதந்தருகின்ற நூல்களை வாசிக்கலாமா ? அல்லது விடிகின்றவரை கனவுகள் விட்டுச்சென்றிருக்கும் நினைவுகளை மீள்வாசிப்புச் செய்து களைத்து போகலாமா ? 'கருமாறிப் பாய்தல் ' என்ற சொல் என்னிடம் ஏற்படுத்துகின்ற அனுபவங்களின் மூலமென்ன ? இதற்கேனும் பொருளுண்டா ? எல்லாமே, கற்பனையா ? இவனது நித்திரைக்காகக் காத்திருந்து நடத்தப்படும் தாண்டவங்களனைத்துமே பொய்யா ? மாயையா ? நேற்று நடந்த ஓர் விவாதத்தில் வேலு சொன்னதுபோன்று அபத்தமா ? மேற்கே பிறந்தும், இனம்புரியாது அழும் குழைந்தையாகிப் போனேனா ? ஒவ்வொருமுறையும் கனவில் அந்தப் பெண்ணைக் கண்டபிறகு, என்னில் அர்த்தமேதுமில்லாமல் போய்விடுகிறதே ? மீண்டும் மீண்டும் கனவுக்காகவும் அது தந்துகொண்டிருக்கிற சுவைக்காகவும் மனம் பரபரத்து, அவளைத் துரத்திக் கொண்டு, எத்தனை நாட்களுக்கு ? எத்தனை ஆண்டுகளுக்கு ? எத்தனை யுகங்களுக்கு ? இப்படி அலுப்பில்லாமல் தொடரப்போகிறேன். '


கேள்விகள், அவனுக்குள் பதிலுக்குக் காத்திராமல், மின்மினிப்பூச்சிகளாய் எந்த வெளிச்சத்ததையும் தந்துவிடாமல் கவனமாய், இருட்டில் நிறுத்திவிட்டு மறைந்துபோகின்றன.

' தூக்கமா வேண்டும் ? உறங்கி விழித்தெழும்போது உன்னிடமுள்ள தேடலை அறிந்திருக்கிறாயா ? உன்னுடைய கனவனுபங்களை மீண்டும் பெறமுடியாதபோது, நினைவிற் திரும்பவும் கொண்டுவர இயலாதகணங்களில் நீ சுற்றிவருவது யாரையென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? என்னையே. நம்மிருவரில் எவர் மலர், எவர் தேனி என்பது இப்போதாவது புரிந்ததா ? உன்னை அமைதிபடுத்துகின்றவகையில் நடந்துமுடிந்ததை காட்சிகளாக மறுபடியும் வரிசைபடுத்துகின்றேனே, அந்தக் கணத்திலாவது ' இந்த 'நான் ' யாரென 'நீ ' அறிந்திருக்கவேண்டும், தவறிவிட்டாய். அருமை நண்பனே! 'நீ ' சேர்ந்து வைத்தவன் 'நான் '. கடைசிவரை யாரோ இல்லை ? 'நான் '. பிறவிகள்தோறும் தொடர்பவன். பிறந்து இறந்து பிறந்து இறந்து.... புல்லாகி, பூடாகிப் பொய்க்கதியை அடைவதுதானா வாழ்வின் நோக்கம் ?. அதுதானா ஜனன-மரண, சம்சார சாகர தொடர்கதை ? சன்னலை, ஒழுங்காகத் திறந்துவை. எதிர்பார்த்துக் காத்திரு. விதிகளை மீறாதே. 'என் ஆயுளைக் கூட்டிவிடாதே. '

மாலை புதுச்சேரி, வல்லபாய் பட்டேல் சாலையில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் கோவிந்தராஜனைச் சந்தித்துவிட்டு வரலாமென்றிருந்தான். பெர்னாருக்கு ஏற்படும் கனவுகளுக்கு ஏதேனும் பதிலிறுக்கலாமென 'பிரெஞ்சு மொழி ஸ்தாபனத்தின் நண்பர்கள் வற்புறுத்தி டாக்டரைப் பார்க்கச் சொன்னார்கள். இயக்குனர் டாக்டர் கிரிமால், 'முதலில் உன்னை கவனிச்சுக்க, பிறகு ஸ்தாபனத்திற்கு உழைக்கலாம் ' எனக் கட்டளையிட்டபோது இவனால் பதில் சொல்லமுடியவில்லை.


தன் நண்பன் வேலுவை அழைத்துக்கொண்டு மாலை ஆறுமணிக்கெல்லாம் கிளினிக்கிற்கு வந்தாயிற்று. டாக்டர் கோவிந்தராஜன் வாசலிலேயே போர்டு வைத்திருந்தார். அதில் பார்வைநேரம் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுவரையென எழுதப்பட்டிருப்பதை வாசித்துக் கொண்டிருந்த போது, ஓர் அம்மாள் இவர்களை ஒதுங்கச் சொல்லி வாசலில் தண்ணீர் தெளித்தாள்.


ஈரப்புழுதியின் மணத்தை வாங்கியவாறு உள்ளே நுழைந்து இருவரும் காத்திருந்தார்கள்.


'டாக்டர் வர்ற நேரந்தான், உட்காருங்க ' என்று சொன்ன அந்தப் பெண்மணியின் உத்தரவாதத்தை நம்பி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று - மேசையில் கிடந்த ஆங்கிலத் தினசரியை இரண்டாவது முறையாக படித்துவிட்டு, பக்கத்திற் கிடந்தத் தமிழ் தினசரியில் நடிகையின் வயிற்றில் கவனம் திரும்பியபோது டாக்டர் ஏப்பமிட்டுக்கொண்டே உள்ளே வந்தார். இவனுக்கு முன்னே இரண்டு பேர் காத்திருந்தும், முதாலவதாக அழைக்கப்பட்டான். வெள்ளைத் தோலுக்கு இந்தியர்கள் எப்போதும் அடிமைகள்.


டாக்டர் கோவிந்தராஜன் முகத்தைத் தவிர உடல்முழுக்க ரோமதாரியாகயிருந்தார். காது மடல்களிற் கூட அக்கறையெடுத்து முடி வளர்த்திருந்தார். இருக்கை கொடுத்து, காதைக் குடைந்துகொண்டே இவனுக்கு நேர்ந்த கனவுகளைப் பொறுமையாகக் கேட்டார்.


'மிஸியே..... என்ன பேரு சொன்னீங்க ? '


'பெர்னார். பெர்னார் ஃபோந்த்தேன்.. நீங்க 'பெர்னார் ' ன்னே அழைக்கலாம் '


'மிஸியே பெர்னார். நீங்க புதுச்சேரிக்கு வந்து எத்தனை வருஷமாகுது ? மார்க்கெட் பக்கமெல்லாம் போயிருக்கீங்களா ? '


'ம்... '


'போயிருக்கீங்க... அங்க தொடை தெரியப் புடவையை வழித்துக் கொண்டு, குலை குலையா மார்புகளைச் சுமந்துகொண்டு மிளகாய்த் தூள் விற்கும் பொம்பிளையைப் பார்க்கறீங்க. அட வேணாங்க, எங்க ஊரு சினிமாவுக்குப் போறீங்க.. பெருசான பிருஷ்டத்துடன் பலான உபாதைகளோடு ஆடும் பெண்களை பார்க்கரீங்க '


'..... '


' என்ன ஆகும் ? கனவு வரும். உங்களை உச்சத்துக்கு கையப் பிடிச்சு கூட்டிப் போகும். விடிஞ்சு பார்த்தா... '


இப்படித்தான் ஒவ்வொருமுறையும் கேள்வியைச் சொடுக்கி அநியாயத்துக்குக் கொக்கோகம் வாசித்த கோவிந்தராஜனிடம் பெர்னாருக்கு எரிச்சல் வந்தது.


'வேலுவைத் திரும்பிப் பார்த்தான். அவனும் இவனைப் போலவே முகத்தை இறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.


'நீங்க என்ன சொல்ல வர்றீீங்க ? '


' ....கனவுங்கிறது என்னண்ணு நினைக்கிறீங்க. சமூகத்தில சில காரியங்களை வெளிப்படையாச் செய்ய நம்மால முடியறதில்லை. அது தப்போ சரியோ, அடிப்படையிலே நம்மால நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஆசைகளென்ற வகையில மூளையில பதியம் போட்டுண்டு, முளைவிட காத்திண்டிருக்கும். என்றைக்காவது உடம்புல உழைப்போ, உள்ளத்துல பாரமோ கூடிப்போயிட்டா அன்றைக்கு நீங்க படுக்க மாட்டிகளாண்ணு காத்திண்டிருந்து, தளிர், இலைன்னு நாடகம் நடத்திட்டு ஒருபாட்டம் ஆடி முடிச்சிடும். கனவு காண்பவன் ஒரு பார்வையாளனா, தேமேண்ணு முடிஞ்சசப்போல்லாம் அழவோ அல்லது சிரிக்கவோ செய்யணும் '


'.......... '


'பழைய ஏற்பாட்டுல 'சில சம்பங்கள் கனவுகள்மூலமாலவே நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன ' என்று பைபிள் சொல்லலியா ? கனவுகள் என்பது அன்றைய நாள்ல உங்களுக்கு ஏற்படுற அனுபங்கள் மட்டுமல்ல, சில நேரங்கள்ல எச்சரிக்கைகளையும் கொண்டுவருது. அது நினைவுக்கும் மறதிக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும், நிறைவேற்றமுடிந்த அல்லது முடியாத விருப்பங்களுக்குமிடையிலும் ஓரிணைப்பாசெயல்படுது. அது கண்ணாடி. பொய்சொல்வதில்லை. இப்போதைக்கு முதலுதவியா உங்களுக்கு நான் சிபாரிசு செய்வது என்னன்னா.....


'...... '


' மனசைக் கட்டுப்பாடா வச்சிக்கணும். பக்கத்துல கடற்கரை இருக்கு. படுக்கப் போவதற்கு முன்னர் நல்லா நடங்க. வெந்நீர்வைத்து குளியுங்க இரவுல வாசிக்கிற புத்தகங்கள் நல்லதாக இருக்கட்டும். திரும்பவும் கனவுகள் வந்துதுண்ணா என்னை மறுபடியும் வந்து பாருங்க '


கோவிந்தராஜன் கேட்ட ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு விடைபெற்றபோது. குழப்பங்கள் கூடியிருந்தனவே தவிரக் குறையவில்லை. அவரது பதில் அவன் எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தவில்லை.
பெர்னாரும் வேலுவும் சைக்கிளிலேயே வல்லபாய் பட்டேல் சாலையைத் தொடர்ந்து சென்று கிழக்குக் கடற்கரையை அடைந்தார்கள். வழக்கம்போல கரியமிலவாயுவைப் பண்டமாற்றுச் செய்துக்கொண்டு சுவாசிக்கும் மக்கள்.


எங்கே ஒதுங்கினாலும் சினிமாவும் அரசியலும் பேசும் தமிழர்கள். கையேந்திபவன்கள். அதனைச் சுற்றித் பிறவியெடுத்ததே தின்பதற்காக என்றலையும் மனிதர்கள். அவசரகதியிற் தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் நாற்பது வயதுகளெனப் பார்த்துக்கொண்டு காந்தி சிலையை அடைந்தார்கள். பிறகு, சைக்கிள்களை நிறுத்திவிட்டு, கிழக்கு திசையில் கற் சுவரில், இரு சுண்டற் பொட்டலங்களை வாங்கி, பிரித்துக்கொண்டு உட்கார்ந்தார்கள்.


' ராசா! குறி சொல்லட்டுங்களா ? ' திரும்பிப் பார்த்தார்கள். கோடாலி முடிச்சுக் கொண்டை, முகம் முழுக்க மஞ்சள், நெற்றி நிறையக் குங்குமம், தோள்வரை இறங்கி - தங்கட்டி சுமக்கும் காதுமடல்கள்,. கையில் முழங்கை நீளத்திற்கு ஒரு பிரம்பும், கண்டாங்கிச் சேலயுமாய் நடுத்தர வயதுப் பெண்மணி.


' ஏம்மா போ போ. இந்த நேரத்தில எந்தக் கையைப் பார்த்து என்ன சொல்லமுடியும் ' - வேலு.


' உனக்கு இல்லை ஐயா, இந்தத் தொரைக்கு, முன் ஜென்ம வினையால, விபரீத ராசயோகம். கிரக நிலை சரியில்லே. அஞ்சு ரூவா கொடுங்க. காலமேர்ந்து வயித்துக்கொண்ணுமில்லை; கை பார்த்து சொல்லுறன். '


' இந்தா அஞ்சு ரூபா. நீ இடத்தைக் காலி பண்ணு ' வேலுவே தன்னிடமிருந்த ஐந்து ரூபாயை நீட்டினான்.


கொடுத்த ஐந்து ரூபாயை சங்கடத்துடன் வாங்கிக் கொண்டவள்,
' கை பார்க்காமல் காசு வாங்கறதில்லை. இருந்தாலும் தொரையைக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. முன் ஜென்ம கன்னியால தொந்தரவு இருக்குது '


எச்சரித்துவிட்டு நடந்து சென்றாள்.


தொடரும்.....
nakrish2003@yahoo.fr

நீலக்கடல் - அத்தியாயம் - 7

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

'....ELLE ETAT FORT DESHABILLEE
ET DE GRANDS ARBRES INDISCRETS
AUX VITRES JETAIENT LEUR FEUILLEE
MALINEMENT, TOUT PRES, TOUT PRES. '
- Arthur Rimbaud

காற்றுச் சுழன்றுசுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்கள் உக்கிரம்வந்து ஆடிக்கொண்டிருந்தன. மூங்கிற்புதர்களில் மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்புவது ஓசையல்ல, பிடாரிகளின் ஓலம். தொலைதூரத்தில் கீழ்வானத்தில் வெட்டும் மின்னற்கீற்றுகள். அவற்றின் ஒளியில் சரசரவென ஓடி மறையும் பாம்புகள். மலைகளிரண்டு ஒன்றோடொன்று மோதித்தெறிக்கும் வகையில், மின்னலைத் தொடர்ந்த இடியோசை.


இடிக்குப் பலியாகி மளமளவென்று எங்கோ முறியும் கிளைகள், சாயும் மரங்கள். தப்பிப் பிழைத்து ஓடுகின்ற நரிகள், அவற்றின் ஊளைகள். அக்காட்சியைப் பார்த்து மிரளும் ஆந்தைகள், அவற்றின் அலறல்கள்.
சில்வியின் உடல் வெடவெடத்தது. இதுபோன்ற இரவுகள் அவளுக்குப் புதியதல்ல. காட்டுப் பன்றிகளையும், முயல்களையும், தப்பிக் கரையொதுங்கும் கடலாமைகளையும், சில சமயங்களில் இவளது விருப்பத்திற்குமாறாக, கொளுத்திய பந்தங்களை நோக்கிப் பாயும் பெருமீன்களை வெட்டிப் பிடிப்பதற்கும், போர்த்துகீசியர்கள் காலத்திலேயே முற்றிலுமாக வேட்டையாடப் பட்டு அழிந்துபோன தொதோ(Dodo) பறவைகள் இரவுநேரத்தில் வலம்வருவதாக உலவும் கதைகளை நம்பிக்கொண்டு அவற்றைத்தேடி அலையவும் சில்வியாவின் தந்தை 'குரூபா '; இதுபோன்ற இரவுகளையே தேர்ந்தெடுப்பான்.


இவளது சகோதரன் லூதர், எப்போதும் கபானில் தங்குவதில்லை. கறுப்புநதியை ஒட்டியக் கரும்புப் பண்ணையில் சிலகாலம் அடிமையாகவிருந்தவன், பண்ணை முதலாளி 'லொரான்ஸ் அர்த்துய்ர் ' ஐத் தாக்கிவிட்டுக் காட்டில் புகுந்துகொண்டான். எப்போதும் குடித்துக் கொண்டிருப்பான். எனவே சில்விக்குக் காடுகளில் இரவு நேரங்களில் தந்தையுடன் அலைவதென்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது; ஆனால் இன்றைய இரவு அப்படிப்பட்டதல்ல.


வித்தியாசமான இரவு. கைலாசத்தோடு அநேக பகற்பொழுதுகளில் அருகருகே உட்கார்ந்து, கொட்டுகின்ற அருவிகளின் சாரலில், சூரிய ஒளியை மறுத்துநிற்கும் அடர்ந்த மரங்களின் நிழலில் இனிக்க இனிக்கப் பேசியிருக்கிறாள். அவன் பேசுகின்ற அழகை, அரை மயக்கத்தோடு அவதானித்திருக்கின்றாள். அப்போதெல்லாம் தோன்றாத, உடலிற் பரவாத, நெஞ்சில் ஊறாத தாபம் இன்றைக்கு, இந்த இரவில், இந்தக் கணத்தில் அவனது அண்மையில் ஏற்பட்டிருக்கிறது. இருட்டின் கோர விளையாட்டினால் ஏற்பட்ட அவளது அச்சத்தைத் தணிக்கும் வகையில் கைலாசம், அவனது ஆண்மை. அருகில் சில்வியா இவளது பெண்மை. இடிக்கும் மின்னலுக்குப் பதிலளிக்கும்வகையில் இருவரும் அணைத்தவாறிருந்தனர். அறிவும், உணர்ச்சியும் மல்யுத்தம் நடத்தின.


சில நேரங்களில் உணர்ச்சி மிகச் சுலபமாய் வென்றுவிடும்.. இங்கேயும் அதுதான் நடந்ததது. யாார் முதலில் அணைத்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இருட்டும் தனிமையும் இருவரையும் ஒருவராக்கியிருந்தது, உமையொருபாகனாய் வடிவெடுத்திருந்தனர். மோகத்தின் வசப்பட்டுப் பளபளத்த அவளது கறுத்த உடல், இவனது இந்திரியங்களை இயக்கவாரம்பித்திருந்து சில நொடிகள் கழிந்திருந்தன. இருவரது கைகளும் கால்களும், அவைகளின் எதிர்த் திசைகளில், இன்ப மூலங்களைத் தேடியலைந்தன. தழுவலில் இவளது கறுத்த பெரிய முலைகள் அவனது பரந்த மார்பில் இறங்க முயற்சித்து முகம் தாழ்ந்தன. அவனது எச்சிலூறிய அதரங்களில் இவளது பெரிய அதரங்கள் பற்களோடு பதிந்திருக்க, இருவருமே இமைகள்மூடி மயக்கத்திலிருந்தனர்.


நட்சத்திர ஒளியில், கைலாசத்தின் நீண்ட கரங்களின் முரட்டுத்தனமான இறுக்கத்தினை இவளது உடலிற் தாபத்துடனும், மனத்தில் ஏக்கமுமாக சுகத்தின் பிரவாகத்தில் மூழ்கி அனுமதிக்கிறாள். அவளது ஆடையை அவன் விரல்கள் மெல்லக் களைய முயற்சித்தபோது மயக்கத்திலிருந்த பெண்மை விழித்துக் கொண்டது.


'கைலாசம் வேண்டாம். உங்கள் ஊர்ப் பெண்கைளைப் பற்றியும், கற்புக்குக் கொடுக்கும் மரியாதைப்பற்றியும் தெய்வானை நிறைய சொல்லியிருக்கிறாள்.. உன் அம்மாவின் எதிர்பார்ப்பிற்குரிய பெண்ணாக நான் நடந்துகொள்ளவேணும்... '


'உள்ளது.. மெல்ல வார்த்தையாடு. நீ சொல்வது நிஜமானப் பேச்சு. வந்த காரியம் மறந்தாகிவிட்டது. என்மனசு சஞ்சலமுற்றுவிட்டது. என்னை மன்னிக்கவேணும் சில்வி ' இருவரும் விலகிக்கொண்டார்கள்.
'போகட்டும்.. உன்னை நிந்திப்பதற்கில்லை. இந்தபடிக்காய் நடந்து கொண்டதற்கு இருவருமே பொறுப்பு. வார்த்தையாடலுக்கு நேரமில்லை சற்றுநேரத்திற்கு முன்னாலே, இருவர் நம்மைப் பின் தொடர்வதாகத் தோன்றியதே அது உண்மையா ? இல்லைப் பிரமையா ? '


' இதுவரை பிரமையில்லை என்றே நினைக்கிறேன். என் உள்மனது அதனை மறுக்கிறது. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து ஆர் என்று
பார்ப்போம். '


ஒரு பெரிய மின்னலொன்று அடிவானில் தோன்றிக் கீழ் நோக்கி இறங்கியது.
'கைலாசம் என்னால் எதையும் பார்க்க இயலவில்லை. அனைத்துமே இருட்டாக இருக்கின்றது. என் கண்பார்வை போய்விட்டதா ? '


'பைத்தியக்காரி..! எதையாவது உளறாதே! மின்னலைப்பார்த்ததால் வந்த கோளாறு. ஏற்கனவே இருட்டைத் தவிர இங்கே வேறென்ன தெரிகிறது. மறுபடியும் விழிகளிரண்டையும் சிறிதுநேரம் மூடி மீண்டும் திற, எல்லாம் பிரவேசமாகும் '


அவன் கட்டளைக்குப் பணிந்து, சில்வி அவ்வாறே செய்தாள்.
' ரொம்ப சரி. நான் என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன். அதோ....! ஒன்றையொன்று பின்னியிருக்கும் தென்னைகளை இங்கிருந்து பார்க்க முடிகின்றது. துர்க்கைக்கல், இங்கிருந்து பார்ப்பதற்கு இருட்டை விலக்கிக்கொண்டு எழுந்து நிற்பது தெரிகிறது. வா பக்கத்திற் போகலாம். ' அவனது கையினைப் பற்றிக் கொண்டு எழுந்து நின்றாள்.


இருவரும் எழுந்து நிற்பதற்குக் காத்திருந்ததுபோல, அவர்கள் நின்ற இடத்துக்கு நேரெதிரே இருவர் வந்து நின்றனர். அவர்களின் கறுத்த உருவமும் தலையொட்டிச் சுருண்டிருந்த கேசமும் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்பதனை வலியுறுத்தின. முதலாவதாக நின்றிருந்தவனின் குரலைக் கேட்டதும் சில்விக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர வந்தன.


அவளது சகோதரன் லூதர் அவன். இரண்டாவது மனிதனை யாரென்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குரல் ஏற்கனவே அவளுக்குப் பரிச்சயமானது. லூதர் இரவு நேரங்களில் தங்களுடைய கபானுக்கு நேரம் கழித்து வரும்போதெல்லாம் அவனைத் துரத்திவந்து வெளியில் நின்றவாறே அவனை அழைக்கும் குரல். அந்த நேரத்திலெல்லாம் சில்வியின் தந்தை குருபா ஆவேசமுற்றிருக்கிறார். அவனது சகவாசம் வேண்டாமென எச்சரித்திருக்கிறார். அவன் மதிப்பதில்லை. குடிபோதையிற் கண்டதை உளறிவிட்டு அந்தக் குரலுக்குரியவனோடு ஓடி இருட்டில் மறைந்து விடுவான். இருவரும் இப்படித் தங்களைத் துரத்திக்கொண்டு வருவார்களெனச் சில்வி எதிர்பார்க்கவில்லை.


ஒருவேளை, வேறு காரணத்தை முன்னிட்டு இங்கே வந்திருப்பார்களா என்ற ஐயமும் அவளிடம் எழாமலில்லை.


புதிய மனிதர்கள் இருவரும் ஆப்ரிக்க மொழிகலந்த பிரஞ்சில் பேசினர். கைலாசத்துக்குச் சரியாக விளங்கவில்லையெனினும், சில்விக்கு விளங்கியது. அவர்கள் பேசுவது கிறேயொல் மொழி. அவர்கள் வீட்டில் பேசுகின்ற மொழி.


அவர்கள் பேசப்பேச இவள் மொழிபெயர்த்தாள்.


லூதர்தான் முதலாவதாகப் பேசினான்.

'இப்போது மிஸியேவுக்கு (ஐயாவுக்கு) என்ன பதில் தெரிவிப்பது. ஒவ்வொரு நாளும் அவர்கைளைப் பின் தொடர்ந்து, இன்றைக்கு முக்கியமான தருணத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்படி ஆகி விட்டதே! '


' என்னைக் குற்றம் சொல்லாதே! எதனையும் உருப்படியாகச் செய்யாதவன் நீ.. நேற்றும் அப்படித்தான் அந்த அம்மாவிடம் கொஞ்சம் மிரட்டி உண்மையை வரவழைத்திருக்கலாம். இப்போது இது மாதரியானதொரு இருட்டில் அவர்கைளைப் பின் தொடர்ந்து சங்கடப்பட வேண்டியதில்லை. அதனை விடுத்து எதையெதையோ உருட்டி அங்கே தேடவாரம்பிக்க, அந்த அம்மா கபானுக்குள் நுழைந்துவிட்டது. '


' நீ மட்டுமென்ன ? யோக்கியமா ? அந்த அம்மாவை இப்படித் தாக்கியிருக்கவேண்டாம். முதலுக்கே மோசம் வந்திருக்கும். அந்த அம்மா மட்டுமே உண்மையான ரகசியங்கைளை அறிந்தவர். அவர்களுக்கேதேனும் நடந்திருந்தால் மிஸியே நம்மைக் கொன்றே போட்டிருப்பார். '


' சரி.. சரி இருவரும் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும். பயல் கைலாசமும், சில்வியும் எங்கே போய்த் தொலைந்தார்கள். அவர்களிருவரும் நாம் தேடுவதைத்தான் தேடிவந்திருக்கிறார்கள். அதிக தூரங்கூடப் போயிருக்க வாய்ப்பு இல்லை. என்ன செய்யலாம் '


'அதுதான் ஆச்சரியமாகவுள்ளது. எப்படி இருவரும் மாயமாய் மறைந்தார்கள் ?


அந்தப் பயல் கைலாசத்துக்குக்கு ஏதேனும் மாய வித்தைகள் தெரியுமோ ? '


'இருக்கலாம். இந்தியர்கள் மாயவித்தைகள் அறிந்தவர்கள். நம்முடைய ஆப்ரிக்க இனத்தைப் போன்றே அவர்களுக்கும் வசியம், பில்லி சூனியம், மாரணம் (மந்திரத்தாற் கொல்லுதல்), வூடு (Voodoo), பலிகள் போன்றவற்றில் கை தேர்ந்தவர்கள். நம்முடைய எஜமானரும் மாயவித்தைகள் தெரிந்தவர் என்பதை என் இரண்டு கண்களால் பார்த்திருக்கிறேன் '


'அப்படியா! எனக்கும் நம்முடைய மிஸியேவை பார்க்கவேண்டுமென்கின்ற வெகு நாட்களாக ஆசை. எப்போது அழைத்துப் போவாய் ? '


' அதற்குக் காலம்வரும். அழைத்துப் போகிறேன். இப்போது வேண்டாம். ஐயாவும் அதனை இப்போதைய சூழலில் விரும்பமாட்டார். சரி சரி இங்கே வெட்டியாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டு மீண்டும், போர் லூயிக்குத் திரும்புவோம். காமாட்சி அம்மாளுடைய கபானுக்குச் சென்று காத்திருப்போம்.. எப்படியும் உனது தங்கையும், கைலாசமும் திரும்பியாகவேண்டும். என்ன நடக்கின்றது ? பார்ப்போம் '.


அவ்விருவரும் வடக்குத் திசைநோக்கி எட்டி நடந்து மீண்டும் காட்டுக்குள் புகுந்தனர்.


அவர்கள் போகவும் மேகத்தைக் கலைத்துக்கொண்டு நிலா வெளிப்பட்டது. காற்று முற்றிலுமாக அடங்கியிருந்தது. வானம் தூறல் வானமாக மாறியிருந்தது. இந்துமகா சமுத்திரத்தின் இரைச்சலும், ஆப்பிரிக்க மக்கள்வசிக்கும் பகுதியிலிருந்து பாட்டும் ஆட்டமும் கேட்டது. றபாணம், மற்றும் போபரை* வேகமாக அடித்துக்கொண்டு அதனிசைக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தனர். பறங்கியரின் கரும்புப் பண்ணைகளில் வேலைசெய்பவர்கள் தங்கள் உடல் வலியை மறக்க இரவு நேரங்களில் இம்மாதிரி குடித்தும் பாடியாடி மகிழ்வது வழக்கம்.


கைலாசத்திற்கும், சில்விக்கும் மனதிற் தைரியம் ஏற்பட்டது.. கைலாசம் மெல்லச் சில்வியின் தோளைப்பற்றி அழைத்தான்.


'வா.. இனிப் பயமில்லை. துர்க்கைப் பீடம் அருகிற்தானுள்ளது. அம்மா குறிப்பிட்ட இடம், துர்க்கைப் பீடத்திற்கருகில் , சற்றுமுன்னர் நீ சுட்டிக்காட்டிய இரண்டுதென்னைகள் பின்னியுள்ள இடம்.... '


அவன் முன்னே செல்ல, அவனையொட்டியே சில்வியும் சென்றாள்.
மெள்ள இருவரும் துர்க்கைப் பீடத்தருகே நெருங்கி நின்றார்கள், பிணைந்துள்ள இரு தென்னைகளையொட்டிப் பார்வையைக் கொண்டுபோனார்கள். பெரிய பள்ளமொன்று வெட்டப்பட்டிருந்தது. பள்ளம்முழுக்க மழைநீர். பலநாட்களுக்கு முன்னதாகவே கள்ளிப்பெட்டி வேறொருவர் கைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாயிற்று.. சில்விக்கு ஏமாற்றாமாகவிருந்தது. கைலாசம் முகத்தில் எந்த வெளிப்பாடுமில்லை.


'கைலாசம்.. உங்கள் அம்மாவிற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். இந்தப் படுபாவிகளும் எதற்காக நம்மைப் பின்தொடர்ந்துவந்தார்கள் எனத் தெரியவில்லையே ? என் தந்தை சொன்னது சரியாகிவிட்டது. என் சகோதரன் ஏதோ தகாதசெயலில் ஈடுபட்டிருக்கின்றான் என்பது நிச்சயம். தவிர உங்கள் அன்னைக்கு எதிராகவென்றால், என் தந்தையின் கோபம் அவன்மீது மேலும்கூடுமே தவிர, ஒருக்காலும் குறையாது. எனது மனதிற்குக்கூட சங்கடமாகவுள்ளது. உங்கள் அன்னைக்குத் தெரியவந்தால் எங்கள் குடும்பத்தைப் பற்றிய அவரது அபிப்ராயம் சிதைந்துவிடுமோ ? நம்மிரு குடும்பங்களுக்கிடையில் பகைவந்து சேருமோவென்று, மிகவும் அச்சமாகவுள்ளது. '


' என் அன்னையின் குணவிசேடங்களை அறிந்துமா இப்படியான முடிவுக்குவந்தாய். உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் என் அன்னைக்கு அளவுகடந்த பிரியமும் உள்ளது. அந்தப் பிரியத்திற்கும், நம்பிக்கைக்கும் பங்கமெதுவும் ஏற்பட்டுவிடாது. வீணாக அஞ்சவேண்டாம். வா சீக்கிரம் கபானுக்குத் திரும்புவோம். அன்னையும், என் தங்கை தெய்வானையும் நமக்காகக் காத்திருப்பார்கள். '

சில்வியை அழைத்துக் கொண்டு மேற்குத்திசையை நோக்கி நடந்தான்.
கைலாசமும் சில்வியும் கபானை அடைந்தபோது விளக்கேற்றிவைத்துக்கொண்டு பின்னிரவிலும் தூங்காமல், காமாட்சி அம்மாளும் தெய்வானையும் .இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
காமாட்சி அம்மாவின் பார்வை கைலாசத்தின் கைகளில் விழுந்தது..


'என்ன நேர்ந்தது மகனே ? பெட்டியைக் கொண்டுவரவில்லையா ? '
' அம்மா.. உள்ளே சென்று பேசுவோமே. இந்த அகாலநேரத்தில் இப்படி வெளியே நின்று நாம் வார்த்தையாடுவது நல்லதல்ல. '
நால்வரும் உள்ளே நுழைந்து மணையிட்டு அமர்ந்தார்கள்.


' அம்மா யாரோ நமக்கு முன்னதாக அப்பெட்டியைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். '


' என்ன சொல்கின்றாய். இங்கேயும் நமக்கு எதிரிகளா ? ஈஸ்வரா! கடவுளே என்ன சோதனையிது. ? இனி யாரிடம் முறையிடுவேன் ? '


'அம்மா. கஸ்தியேதும்வேண்டாம். எல்லாம் நல்லதுக்கே என்று நினை. எந்த ஆபத்தும் நம்மை அண்டாது '


' எனக்கு ஆபத்தென்றால் வருத்தப்பட என்ன இருக்கிறது. என் கண்மணிகள் உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது '


'அம்மா.. இப்படித் தொடர்ந்து எங்களுக்குத் தெரியாமல் ஏதோ ரகசியத்தினை மறைத்துவைத்து எவ்வளவு நாைளைக்குத் துன்புறப் போகிறாய் ?

எங்களிடம் உண்மையைச் சொன்னாலென்ன ? நானும் தெய்வானையும் சின்னைப் பிள்ளைகளா ? எதனையும் சந்திக்கின்ற உடல் வலிமையும் மனவலிமையும் எங்களுக்கு உள்ளது என்பதை நீ உணரமறுக்கிறாய். '


' உண்மை மகனே. உங்களிடம் ஆரமம்பத்திலேயே சொல்லியிருக்கலாம். ஆனால் உன் தந்தை அதற்கான காலம் வரும் அப்போது சொல் என்றார். நம் குடும்பத்து ரகசியத்தை அறிந்த இன்னொரு நபர் நம்மோடு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுத் தீவுக்கு வந்தவர் இங்கிருக்கிறார். அவரது ஒப்புதலில்லாமல் அந்த ரகசியத்தை சொல்லிவிடக்கூடாது. அவர் வரட்டும். அவரது அனுமதி பெற்று அனைத்தையும் ஆதியோடந்தமாகச் சொல்கிறேன். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். குறிப்பாகத் தெய்வானையின் மீதொரு கண் வைத்திரு. குழந்தாய் சில்வி உன்னுடைய தயவும் எங்களுக்கு நிறைய வேண்டும் ' என்ற காமாட்சி அம்மாளின் கைகளைப்பற்றி சில்வி கண்களில் ஒத்திக் கொண்டாள்.


திடாரென வெளியே கூச்சல் கேட்டது. இரண்டொரு கறுப்பர்கள் முன்னே ஓட அவர்களைத் துரத்திக் கொண்டு குதிரைகள். ' ' போல் ' கரும்புப் பண்ணையிற் குழப்பமாம். அங்கிருந்த கறுப்பு அடிமைகளிற் சிலரை வெட்டிப்போட்டுவிட்டு மற்ற அடிமைகள் தப்பித்திருக்கின்றார்கள் ', என்ற செய்தி பரவியது. நாளை நடக்கவிருப்தை நினைத்து போர் லூயி (Port Louis) கறுப்பின மக்களுக்கு மட்டுமல்ல இந்தியமக்களுக்கும் தூக்கம் போயிற்று.

தொடரும்.....


*the bobre, the ravane, the maravane and the triangle. New ingenuous instruments never heard before. The bobre is a long wooden bow kept arched over a large gourd-like, rough skinned, hollow fruit (the calebasse) by a vegetal string, this being hit by a stout wooden rod. Its mournful twang has however, sadly, been lost over the years and it is no longer part of a sega music team. The ravane is a hide, pulled taught over a wooden circular frame. Tightened even more to a vibrant limit over a fire-wood flame, and sometimes ringed with bells, it is at the heart of the sega 's beat.


நீலக்கடல் - அத்தியாயம் - 8

<>நீலக்கடல்<>
நாகரத்தினம் கிருஷ்ணா
மையடர்ந்த கண்ணினால் மயக்கிடும் மயக்கிலே
மையிறந்து கொண்டு நீங்க ளல்லற் றிருப்பீர்காள்
மெய்யடந்த சிந்தையால் விளங்கு ஞானமெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே
- சிவவாக்கியர்

காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. வழுதாவூர்ச் சாலையில் மேற்கு நோக்கிச் சீராக அந்தக் குதிரை ஓடிக்கொண்டிருந்தது. உயர் சாதிக் குதிரை - கொஷ்லனி (Kochlani) இனம். 150 செ.மீட்டர் உயரமும் 350கிலோ எடையும் கொண்ட உடல், நீண்டமார்பு, சரிந்ததோள். கறுத்த மெல்லிய பளபளக்கும் முடிகளுடன் கூடிய வால். வறுத்த காப்பிக்கொட்டையின் நிறங்கொண்ட ஆண்குதிரை. அரபுக் குதிரை.
அதன் முதுகில் அழகும் ஆண்மையும் இணைந்த 'பெர்னார் ' சவாரி செய்து கொண்டிருந்தான். அவனது பொன்னிறக் கோதுமை உடலில் சிவப்பு வண்ணத்தில் அதிகம் உறுத்தாத வெல்வெட்டிலான நீண்ட அங்கி. கணுக்காலில் வெள்ளைக் காலுறை. முன் கை இரண்டிலும் கையுறைகள். அணிந்திருந்த வெண் சட்டையின் கழுத்துப்பட்டையில் மெல்லிய சதுர மஸ்லின் துணியைக் குறுக்காகச் சுருட்டிச் செருகியிருந்தான். சாம்பல் நிறத்தில் அடர்ந்து கழுத்துக்குப் பின்புறம் இறங்கியிருந்த சுருள்சுருளான கேசம் வியர்வையில் நனைந்து, ஒட்டியிருந்தது. சிவந்த அவன் முகம் மாலை வெய்யிலில் மேலும் சிவந்திருந்தது..
இவன் முன்னே நிற்க வெட்கப்பட்டுச் சூரியன் மேற்கே ஒரு பெண்ணைப்போல ஓளிய முற்பட்டான். அடர்ந்த மரக்கிளைகளினூடே தன் கதிர்களை அனுப்பி அவனைத் தொட்டு மகிழ்ந்தான். வேப்பமரத்தில் கூடுகட்டியிருந்த தூக்கணாங் குருவிகள், கூடுகளிலிருந்து வெளிப்பட்டுக் கூச்சலிட்டு மகிழ்ந்தன. இலவமரத்துக் கிளிகள், இவனை ஏதோ பழமென்று நினைத்து, சிவந்த இவன் முகத்தருகே நெருங்கி, பின்னர் அவனது இமைக்கும் கண்களைக் கண்டு பயந்து மீண்டும் கிளைக்குத் திரும்ப இவனுக்குச் சிரிப்பு வந்தது; மனம் முழுக்க மகிழ்ச்சிப் பிரவாகம். அந்தக் களிப்பில் குதிரையைத் தீண்ட, இவன் மனதைப் புரிந்துகொண்டதுபோலக் குளம்புகளை எட்டிப் போட்டது. அந்திவரை நிலங்களில் உழைத்தபிறகு திரும்பும் விவசாயக் குடிமக்கள் இவனைக் கண்டு ஒதுங்கி நின்று தலையிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டி 'கும்பிடறோமுங்க தொரை ' என ஒதுங்கி வழிவிட்டனர். தலையிற் புற்கட்டுகளும், கையில் அரிவாளுமாகவிருந்த இளம்பெண்கள் அன்னிய ஆடவைனைக் கண்டமாத்திரத்தில் அச்சமும் நாணமும் அடைந்தவர்களாய் மரத்தடிகளில் ஒளிந்து இவனை எட்டிப் பார்ப்பதையும் இவன் ரசிக்கத் தவறவில்லை.
'வாழ்க்கையின் நியதிகளுக்கு நாம் உட்படுதைவிட, நமது நியதிகளுக்கு வாழ்க்கை உட்படும்போது வாழ்க்கை இனிக்கவே செய்கின்றது. இந்த மண்ணும், காற்றும், வானமும் இவனோடு நெருங்க ஆரம்பித்து இன்றைக்கு இருபத்திமூன்றாண்டுகள் ஆகின்றன. இளமை முதற்கொண்டே கனவிலும் நனவிலும் பிறவிப் பெருங்கடலில் நீந்த ஆரம்பித்து இன்றைக்கும் தொடர்கிறது. 'கிணற்றில் வலம் வரும் தவளைகளைவிட ஊர்ந்து உலகறிய முயலும் உயிர்களே வாழ்ந்துபார்க்கின்றன '. என்பது பெர்னார் பிறந்த 'பிரெத்தாஜ்ன்(Bretagne) மண்ணில் அனேகரது வாழ்க்கை. பெர்னார் குளொதன் (Bernard Glaudan) என்கின்ற பெர்னார் பிறந்தது கடற்கரை. சுவாசித்தது கடற்காற்று. கடலலைகளோடு விளையாடி, மாலுமிகளின் பாடல்களைப் பாடி, கடல் மீன்களையுண்டு கடல் சம்பந்தபட்ட வரலாறுகளையும், கதைகளையும் கேட்டுக்கேட்டுத் தன்னை வளர்த்துக் கொண்டவன்..
பெர்னார் பிறந்த நகரம் கடற்சாரலும், கடற்காற்றும் கலந்தே வீசுகின்ற வளைகுடாப் பட்டினம். சற்றே உயர்ந்த கடற்கரை. பிரவாகமெடுத்துப் பரவியிருக்கும் மணல். பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைக் கீழ்த்திசை நாடுகளுக்கு அழைத்துச் சென்ற துறைமுகப்பட்டினம். பெயர் 'லொரியான் ' (L 'orient). தமிழில் 'கீழ்த்திசை '. பொருத்தமான பெயர். கி.பி. 1664ல் 'பதினான்காம் லூயி 'யிடம் அமைச்சராகவிருந்த 'கொல்பெர் '(Colbert) யோசனையின் பேரில் ஆசிய நாடுகளோடு வர்த்தகம் செய்ய 'பிரஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி( Compagnie des Indes Orientale) உருவாக்கப்படுகிறது. கி.பி. 1666ல் அதனுடைய அலுவலகம் பிரான்சின் இன்றைய போர் லூயி (Port Louis) அன்றைய போர் லவே (Port Lavet)யில் துவக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கப்பல்கட்டுந் தளங்கள் உருவாகின்றன. 1000 தொண்ணோ கொள்ளளவுடைய 'கீழ்த்திசைக் கதிரவன் ' (Le soleil d 'Orient) என்கின்ற பெயரில் முதலாவது பாய்மரக்கப்பல் வெள்ளோட்டத்திற்குத் தயாராகின்றது. கப்பல்கட்டும் பணிக்காகவும், கடற்பயணத்தில் ஆர்வங்கொண்டும் மக்கள் மெல்ல மெல்லக் குவியத்தொடங்க, முதற்கப்பலின் பெயரையே அந்நகரம் தத்தெடுத்துக் கொள்கின்றது. இக்கடற்கரைப் பட்டினத்திற் குவிந்த கீழ்த்திசை வாசனைத் திரவியங்களும், தேயிலையும், பட்டுத் துணிகளும், பீங்கான் சாமான்களும் மக்களைக் கடற் பயணத்திற் காதல் கொள்ளசெய்கிறது.
'லொரியான் ' கடற்கரை இரவுவிடுதிகளில், கீழ்த்திசைப் பயணம் முடித்துத் திரும்பும் மத்தலோக்களின்( மாலுமிகளின்) பாட்டும் ஆட்டமும், அவர்களுடைய பயணத்தில் ஏற்படும் புயல்மழைப் போராட்டமும், கடற்கொள்ளையரிடமிருந்து காத்துக்கொள்ள நடக்கும் யுத்தமும், அந்த யுத்தத்தில் பலியானவ்ர்களின் வீரச்செயல்களும், அங்கவீனர்களானபிறகும் அவர்கள் கண்களிில் மின்னும் பெருமிதமும், இன்ன பிற கதைகளும் அச்சத்தையூட்டுவதற்கு மாறாகப் பெர்னார் மனத்தில் கற்பனைகளை வளர்த்தன. கூடுதலாகப் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளுக்காக லொரியான் நகரில் பிரான்சு தேசத்து இளைஞர்கள் குவியத் தொடங்க, இவனும் கடல் மீதானவாழ்க்கையிற் கற்பனைகளை வளர்த்துக் கொண்டான். மதுச்சாலைகளுக்கு வருகைதரும் மாலுமிகைளைச் சுற்றிவர ஆரம்பித்தான். கம்பெனி பணிகளிருந்துவிட்டு, பிரான்சு தேசத்துக்குத் திரும்பும் ஊழியர்களிடன் அனுபவங்களை, கூடுதலாக 'இந்து ' தேசத்து பெருமைகளைக் கேட்டுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிய தனக்குள்ள விருப்பத்தைப் பெற்றோர்களிடம் தெரிவித்தான். மகனைப் போலவே கடற்பயணங்களிற் காதல் கொண்டிருந்த தகப்பன் லூயி குளோதன், மறுப்பேதும் சொல்லாமல் அனுமதித்தான். பெர்னார் பிரஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியில் தன்னை இணைத்துக்கொண்டபோது வயது பத்தொன்பது.
கி.பி. 1738ல் 'லெ கோந்த் தெ துலூஸ் '(Le Compte de Toulouse) கப்பலில் புதுவைக்கு வந்தபோது அப்போதைய குவர்னர் 'துய்மா ' (Duma) இளைஞன் பெர்னாரின் ஆற்றலையும் அறிவையும் மெச்சி இரண்டாண்டுகள் அவரருகிலேயே வைத்துக்கொண்டார். புதுச்சேரிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பெர்னார் தமிழிலும் தேர்ச்சிபெற்றுத் தமிழர்களுடன் நெருங்கிப் பழக, மேன்மைதங்கிய குவர்னருக்கு 'இரண்டாவது துபாஸ் ' என்கின்ற கெளரவம் இவனைத் தேடிவந்தது. இந்தியத் தரகர்களை நம்பாமல் பெரும்பாலான கம்பெனி வியாபாரங்கைளை இவனைக் கொண்டே குவர்னர் முடித்தார். இவனது வளர்ச்சியைக்கண்டு கம்பெனிப் பணியிலிருந்த பறங்கியர்களும் இந்தியத் தரகர்களின் துணையுடன் செய்த இன்னல்கள் அநேகம். இந்த நேரத்திற்தான் பிரெஞ்சுத் தீவுக்குக் குவர்னர் பொறுப்பேற்கச் சென்ற லாபூர்தொனேக்கு (Labourdonais) இந்தியாவிலிருந்து பிரெஞ்சுத் தீவுக்கு அழைத்துவந்திருந்த தமிழர்களுடன் தொடர்பு கொள்ள பெர்னார் உதவி தேவைப்பட, பிரெஞ்சுத் தீவில் இரண்டாண்டுகாலம் இருந்துவிட்டு; பிரஞ்சுத் தீவின் கவர்னர் அனுமதியுடன் அவருடைய பிரதிநிதியாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறான். அரசுப் பிரதிநிதியெனக் கொண்டாலும் அவனது காதலி தெய்வானைக்காக நிறைவேற்றவேண்டிய அந்தரங்க அலுவலொன்று இருக்கின்றது. தெய்வானையைப் பற்றியும் கைலாசம் பற்றியும் உண்மைகள் அறியப்படவேண்டும். பெற்ற பிள்ளைகளிடமே காமாட்சியம்மாள் காக்கின்ற ரகசியத்தின் மர்மமென்ன ?. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காமாட்சி அம்மாளும், கைலாசமும், தெய்வானையும் எவரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பிரஞ்சுத் தீவுக்கு தப்பி வந்திருக்கிறார்கள் ? இப்படி ஏராளமான கேள்விகளுக்குப் பதில் தேடவேண்டியிருக்கின்றது என்பதை நினைத்தவுடன், சற்று முன்புவரை அவனிடம் குடி கொண்டிருந்த சந்தோஷம் ஒளிந்து கொண்டது. தெய்வானையின் 'நிலாமுகம் ' அவன் முன்னே தோன்றி ' அன்பரே துன்பக் கேணியிலிருந்து என்னைக் கரை சேர்ப்பீரா ? ' கண்களில் சோகத்தை நிரப்பிக்கொண்டு கைகூப்பி இறைஞ்சுகிறாள்.
ஓடிக்கொண்டிருந்த குதிரை மிரண்டு நின்றது. தெய்வானையின் நினைவிலிருந்த பெர்னார், எதிர்பாராதவிதமாகக் குதிரை நிறுத்தப்பட, நினைவிலிருந்து மீண்டான். புதுச்சேரி எல்லையில்தானே இருக்கிறோம் என்பதாகச் சந்தேகம் எழுந்தது. சுற்றிலும் குதிரைகளில் வீரர்கள். எங்கிருந்து வந்தார்கள் ? என்று யோசிக்க நேரமில்லை.மத்தியில் தாடியும் மீசையுமாய் இருந்தவன் உருது கலந்த தமிழில் ஏதோ முணுமுணுத்தான்..
' சாஹிப் இவன் கம்பெனிக்காரனாக இருக்கவேண்டும். இவனைப் பிடித்துவைத்தால் கம்பெனியார் அதிகப் பணங்கொடுத்து மீட்டுச் செல்வார்கள் ' வலது புறத்தில் நின்றிருந்தவன் தன் தலைவனைப் பார்த்துக் கூறினான்.
'நீச்சே உத்தரோ '- இந்த முறை தாடிக்காரன் தன் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு இவனிடம் கட்டளையிட்டான்.
இவனைக் குதிரையிலிருந்து இறங்கச் சொல்கிறான் என்பதைப் பெர்னார் விளங்கிக் கொண்டான்
கொள்ளையர்களாக இருக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி புதுச்சேரி எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதென்பது பரவலாயிற்று ஆர்க்காட்டு அரியணைப் பதவிச் சண்டையில் ஆங்காங்கே வழிப்பறியும், ஊரில் புகுந்து கொள்ளையடிக்கும் கூட்டமும் துலுக்கர்களால் பெருகியிருந்தது. நவாப்பின் ஆட்களாகவே இருக்கவேண்டும். அவர்கள் செயற்படுவதற்குள் இவன் முந்திக் கொள்ளவேண்டும். நிலைமையைச் சீராகக் கையாளவேண்டும். முரடர்கள். ஆபத்தானவர்கள். வலதுகாலால் குதிரையின் வயிற்றுப்பாகத்தைச் சீண்டினான். கடந்த இரண்டுமணி நேரத்தில் அவனை நன்கு புரிந்து கொண்டிருந்த குதிரை, எகிறிப் பாய்ந்தது. பயந்து விலகிய கொள்ளையர்கள் சுதாரித்துக் கொண்டு பின்னே தொடர, அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில் கடிவாளத்தை இழுத்துக் குதிரையை அவர்கள் பக்கமே திருப்பிய வேகத்தில், இடையிற் செருகியிருந்த வாள் இப்போது அவனது வலது கரத்தில் சுழன்றது. வாளின் முனை முதலிற் பேசியவனின் விலாவில் இரத்தம் பீறிட கோடிழுத்து எழுந்து இடதுபக்கம் நெருங்கிய தலைவனின் தலையை உராய்ந்து கொண்டு தோளில் இறங்க அவன் துடித்துச் சாய்ந்தான். அடுத்தடுத்து அவனது வாள்வீச்சுக்கு கொள்ளையர்களில் இரண்டொருவர் வீழத்தான் செய்தனர். கொள்ளையர்களில் ஒருவன் தந்திரமாகப் பின்வாங்கி இவனது கவனத்திலிருந்து விலகியெறிந்த கட்டாரி அவன் வலது தோளைத் தைத்துக் கீழே விழுந்தது. தோளிலேற்பட்ட வலியின் காரணமாக தொடர்ந்து தனியொருவனாக அவர்களைச் சமாளிக்க இயலுமா என்கின்ற சந்தேகம்.
அப்போதுதான் அதனைக் கவனித்தான். கொள்ளையர்களை எதிர்த்துத் திடகாத்திரமான உடல்கொண்ட கறுத்த வாலிபனொருவன் இவன் தரப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஆச்சரியமாகவிருந்தது. கொள்ளையர்களுக்கு எதிரணியாகவிருக்குமோ ?என்று மனதிற் சந்தேகம்.. எதிரணியாகவிருப்பினும் தனிப்பட்ட ஒருவன் உயிரைப் பணயமாகவைத்து ஒரு பறங்கியனுக்கு உதவுவானா என்ற பதிலும் தோன்றாமலில்லை. காரணந்தேட இது நேரமில்லை. கொள்ளையர்களிடமிருந்து இப்போதைக்குத் தப்பியாகவேண்டும். உதவிக் கிடைத்த பலத்தில் தனக்கேற்பட்ட காயத்தினைப் பொருட்படுத்தாது வாளினை இலக்கின்றிச் சுழலவிட்டான். இடையிடையே புதியவனின் வாள் வீச்சினையும் கவனித்து அதிசயப்பட முடிந்தது. அடுத்து சில நிமிடங்களில் கொள்ளையர் கூட்டம் போனவழி தெரியவில்லை. தோளில் ஏற்பட்டிருந்த காயம் தன் விபரீதத்தைக் காட்ட ஆரம்பித்தது. பச்சைஇரத்தமும் தசைப்பிசிருமிருந்த வாளை உறையிலிடத் தயங்கி, அருகே மற்றொரு குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருந்த தமிழனை முழுவதுமாகப் பார்த்தான். .
கட்டான உடல், விரிந்த மார்பு, திமிருடன் தோள்கள், அடர்ந்து, கறுத்து தோள்வரை இறங்கி, வியர்வையில் ஒட்டியிருந்த தலைமுடி., பெரிய நெற்றி, இமைத்தலைத் தவிர்க்கும் நேரான பார்வை, புருவங்களின் சந்திப்பிலிருந்து எழுந்த நாசி. முறுக்கேற்றப்பட்ட மீசை, கீழே தடித்த பெரிய உதடுகள்- கரிய உடல்....
' உன்னுடைய உதவியை எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி நீ.... ? '
'அடியேன் பெயர் மாறன். தங்கள் துணைக்கெனவும், பாதுகாப்புக்கெனவும் துபாஷ் பலராம்பிள்ளை என்னை நியமனம் செய்திருக்கிறார் நானும் துபாஷும் கடந்த ஒரு மணிநேரமாகத் தங்கள் இல்லத்தில் உங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். தாங்கள் உரிய நேரத்தில் வராதுபோகவே, துபாஷுக்கு மனதிற் கிலேசம். வழுதாவூர்ச் சாலையில் பயணித்து தங்களுக்கு என்ன நேர்ந்தது என அறிந்து வருமாறு பணித்தார். தக்க சமயத்தில் வந்திருக்கிறேன்.
'உண்மை. நான் தனியொருவனாக இக்கொள்ளையர்களின் எதிர்ப்பினைச் சந்திக்கவியலாது. தங்கள் வாள்வீச்சும் அபாரம். '
'சிலம்பு, குஸ்தி, மலபார் ஆசாமிகளிடம் கற்ற களரிப் பயிற்சியென ஓரளவு யுத்த ஞானமுள்ளவன். பிரஞ்சு பாஷையும் ஓரளவு அறிந்தவன். '
' மிக்க மகிழ்ச்சி. பொருத்தமான நண்பரைத்தான் எனக்காக பலராம்பிள்ளை தேர்வு செய்திருக்கிறார். இந்தக் கொள்ளையர்கள் நவாப்பின் ஆட்கள்தானே ? '
'தங்கள் யூகத்தில் தவறில்லை. அவர்கள் நவாப்பின் குதிரை வீரர்களே. இப்போதெல்லாம் புதுச்சேரிப் பகுதியில் கொள்ளையர் பயம் அதிகமாகவே இருக்கின்றது. கம்பெனி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். '
'உண்மை. இது பற்றிக் கவர்னரிடம் நாளை பேசுகிறேன். இப்போது உடனடியாக எனது தோளிலுள்ள காயத்திற்கு மருந்திட்டாக வேண்டும். இங்கே அருகில் ஏதேனும் வைத்தியர் இல்லம் உண்டா ? '
'மன்னிக்கவும்.. வீண் பேச்சிலிருந்துவிட்டேன். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் எனக்குத் தெரிந்த ஓர் இல்லம் இருக்கிறது. அவர்கள் நிச்சயம் உதவி செய்வார்கள். வாருங்கள்
இருவரும் குதிரையை மெதுவாகச் செலுத்தி அந்த வீட்டின் முன்னே வந்து நின்றார்கள். ஓரிளம்பெண் மேல்மாடியிலிருந்து இவர்களைப் பார்த்துவிட்டுக் கீழிறங்கிவந்து கதவினைத் திறந்தாள். கருங்கூந்தல் மெல்ல ஒதுங்க, பெளர்ணமிநிலவின் குளிர்ச்சியும், வடிவும் கலந்த முகம்.
'.. தெய்வானை! நீயா ' பெர்னார் ஆச்சரியமுற்றுக் கேள்வியை எழுப்பினான் '

தொடரும்.....


நீலக்கடல் - அத்தியாயம் - 9

<>நீலக்கடல்<>

நாகரத்தினம் கிருஷ்ணா

'TOUT LE CORPS DU GENIE REDUIT A UN METIS INDIEN '
- LABOURDONNAIS

இரவுமுழுக்கக் கூச்சலும் குழப்பமுமாக விழித்துக்கிடந்த பிரெஞ்சுத்தீவு விடிந்த பிறகு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. கிழக்குவாசலில் கால்வைத்திருந்த சூரியனுக்கு, உள்ளே வருவதற்குத் தயக்கமிருந்தது. அன்றைய பகற்பொழுதின் சாட்சியாக இருக்க விரும்பாததே காரணம். இதுபோன்ற நாட்களில் இரவுகளில் மட்டுமல்ல பகல்களிலும்கூட, நெருப்புக் குழம்பில் முங்கித் துடிக்கும் தீவு வாழ்க்கையைப் பார்க்க நேர்வது மகாகொடுமை என்பதைச் சூரியன் அறிவான்.


மேகமும் மந்தாரமுமாக இறுக்கத்துடன் இருந்த வானத்திற்குத் தூறலிட ஏனோ தயக்கம். மரங்கள் காற்றின்றி அசைவற்றுத் தங்கள் பங்கிற்கு அந்த நாளினை 'சிலுவை ' சுமக்கச்செய்திருந்தன. பறவைகள்கூடத் தங்கள் தினக் கடன்களில் ஆர்வம் காட்டாது கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கின்றன. நலிந்த உயிர்களை, மிருகங்களென்றால் வயிற்றுக்காகவும், மனிதர்களென்றால் வாழ்க்கைக்காகவும் வேட்டையாடுவதென்பது யுகங்களாகத் தொடர்ந்து கொண்டு

தானிருக்கிறது.


வாழ்க்கை யுத்தத்தில் மோதுவதற்குத் தந்திரசாலி சமபலமற்றவர்களையே தேர்செய்திருக்கிறான். மான்களை விரட்டிக் கவ்வி, கால்களுக்கிடையில் கிடத்தி, பற்களால் குடற்கிழித்து நிணத்தை ருசிபார்க்கும் சிறுத்தைகளாக, அப்பாவி அடிமைகளை வேட்டையாடித் தண்டனையென்கின்ற பெயரில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரங்கேற்றும் காட்சிகளைக்காண 'இயற்கை 'க்குக்குக் கூட மனம் கொள்ளாது கபானிலிருந்த காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம் மூவருக்குமே நேற்றைய இரவு தூக்கமில்லை. குடும்பத்தைப் பற்றிய பொதுவான கவலைகளிருப்பினும், அவர்களுக்கெனப் பிரத்தியேகக் கவலைகளுமிருந்தன.


காமாட்சி அம்மாள் தன் பிள்ளைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியிலிருந்து நூற்றிருபது தமிழர்களுடன் தீவில் வந்திறங்கியபோது, அவளது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிள்ளைகளுக்கு இந்திய மண்ணில் எங்கேயிருந்தாலும் ஆபத்துகள் தொடர்வதை அறிந்து, இவளாகத் தனக்கு வேண்டியவர்களின் உதவியுடன் தேடிக்கொண்ட தலைமறைவு வாழ்க்கையிது. பிரெஞ்சுத்தீவின்(Ile de France) கட்டுமானப்பணிகளுக்காக ஆட்கள் தேவைப்பட்டு, அழைத்துப் போகப் புதுச்சேரி வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, தனது குடும்ப நண்பர்களின் உதவிகளுடன் தெய்வானையையும், கைலாசத்தையும் கப்பலில் ஏற்றிவிட்டு, இவளும் புறப்பட்டுவிட்டாள். தீவுக்கு வயதானவர்களைக் கம்பெனி நிர்வாகம் கூட்டிப்போவதில்லை. உழைக்கும் திறனுள்ள இளவயதினரும், சிறுவர் சிறுமியர் மட்டுமே கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டனர். கப்பல் மாலுமி, காமாட்சி அம்மாளை கப்பலில் ஏற்ற மறுத்தான். கைலாசமும் தெய்வானையும் தங்கள் அன்னை தங்களுடன் பயணிக்க முடியாதெனில் தாங்களும் கப்பலில் வரமுடியாதென தீர்மானமாகச் சொல்லவே வேறுவழியின்றி அனுமதித்தான். சரியாக ஒரு மாதத்தினை கடலிற் கழித்துவிட்டுத் தீவைப் பார்க்கப் பிரம்மிப்பாகவிருந்தது. கைலாசமும், தெய்வானையும் முன்னும் பின்னும் தொடர பிரெஞ்சுத் தீவில் காலடிவைத்தபோது கண்கள் நிறைய வியப்பும் மனமுழுக்க குழப்பமுமிருந்தது.


முதல் நாள் முழுக்கக் கப்பலில் வந்தவர்களைக் கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தி ஒருவன் கடற்கரை அருகேவிருந்த பய்யோத்* ரக கசெர்னில் கொண்டுபோய் சேர்த்தான். அவர்களுக்கான பணிகளைக் கம்பெனியின் ஒரு சிப்பந்தி பிரெஞ்சில் வாசிக்க, பூர்போனிலிருந்து இதுபோன்ற பணிகளுக்காக கம்பெனியாரால் அழைத்து வரப்பட்டிருந்த வேலுப்பிள்ளை தமிழில் மொழி பெயர்த்தார். 'இங்கே அழைத்துவந்திருப்பது உட்காரவைத்து சோறுபோடுவதற்காக அல்ல, பிரெஞ்சு முடியாட்சியை வளப்படுவதற்காகவென ', ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லபட்டது. சொந்த நாட்டில் பசிக்குப் பழகியிருந்த மக்களுக்கு, 'உழைப்புக்கு ஏற்றவகையில் மக்காச் சோளம், மரவள்ளிமா ஊதியமாக ஏற்பாடு செய்யபட்டுள்ளதோடு, இடைக்கிடை இந்தியாவிலிருந்தோ சீனாவிலிருந்தோ வருகின்ற அரிசியும் வழங்குவோமென்ற ' வந்த நாட்டின் வாக்குறுதி இனித்தது. இறுதியாக, 'பணிகள் முடிந்தவுடன், இந்தியாவிற்குக் கொண்டுபோய்விட்டுவிடுவோம் எனத் தீர்வு நிர்வாகம் சத்தியஞ் செய்ய, புலம் பெயர்ந்திருந்த மக்களிடையே மகிழ்ச்சி.. அதற்கும் மறுநாள் அவரவர் மூட்டை முடிச்சுகளுடன் இது போன்ற கபான்களில் வாழப்பழகிக் கொண்டார்கள். காமாட்சியம்மாள் இதனை எதிர்பார்க்கவில்லை.


தன் பிள்ளைகளை அப்படி வளர்க்கவில்லை. வாசல்,மாடி, அறைகள், தோட்டம் என்று வாழ்ந்து பார்த்தவர்கள் கைலாசமும் தெய்வானையும். ஏவலிட்டால் செய்வதற்காக அவர்களுக்கு ஆட்களிருந்திருக்கிறார்கள். தன் பிள்ளைகளை இந்தக் குச்சுக்குள் எப்படி வளர்க்கப்போகிறேன் ? என்பதை நினைத்து நினைத்து காமாட்சி அம்மாள் வருந்தாத நாட்களில்லை..


தீவில் வெள்ளையர்களைத் தவிர மற்றவர்கள் உழைத்தாக வேண்டும். சாலைகள் போடவும், துறைமுகப் பணிகளுக்கும், இராணுவத் தளவாடங்களுக்காகாவும், இராணுவத்திற்காகவும், கசெர்ன்கள் உருவாக்கப்பட்டன.. ராம்ப்பார் (Rempart) திசையில் கரும்புத் தோட்ட முதலாளிகள், கப்பல் வைத்துக் கொண்டு வாணிபம் செய்து கொண்டிருந்தவர்கள், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகளில் பணி புரிந்த்வர்களுக்குமாக 'வில்லாக்கள் ' எனப்படும் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பெரும்பாலான கட்டுமானப் பணிகளில் புதுச்சேரி தமிழர்கள் உழைத்தார்கள்.


அவர்களிடையே காமாட்சி அம்மாளைப் பல காரணங்களால் பிடித்துபோயிற்று. ஒப்பந்த கூலிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை காமாட்சி அம்மாள் போன்ற்வர்கள் சுலபமாகத் தீர்த்துவைக்க கம்பெனியும் வேலை நடக்கவேண்டுமென்று அனுமதித்தது. மெல்ல மெல்ல தெய்வானைக்கும், கைலாசாத்திற்கும் கூடத் தீவு வாழ்க்கை பிடித்து போனது. காமாட்சி அம்மாளுக்கு மட்டுமே சொந்த மண்னைப் பற்றிய கவலைகள் அதிகமாகயிருப்பதாகத் தோன்றியது. தன் பிள்ளைகளிடம் எதற்காகத் தீவுக்கு வந்தோம் என்பதையும், இப்படி மறைந்து வாழ்வதற்கான காரணங்களையும் சொல்லியாகவேண்டும். இனியும் எதிரிகளை இருட்டில் வைத்துக்கொண்டு பயந்து வாழ்வது தேவையற்றது. அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.


எதிரிகளை இனம்கண்டு வீழ்த்தும் திறன் தெய்வானையிடம் உண்டு. அவள் அமைதியில் மீனாட்சி, ஆர்ப்பரித்தால் மகிடாசூரவர்த்தினி. கைலைசாமொரு ஒரு வீரபாகுத் தேவன். இவர்களால் எல்லாம் முடியும், எந்த இன்னல்களையும் சந்திக்கின்ற அறிவும் ஆற்றலும் இருவருக்குமேயுண்டு. காமாட்சி அம்மாள் மனம் மீண்டும் அமைதிக்குத் திரும்பியது.
தெய்வானைக்கு வேறுவிதமான கவலை. இது பெர்னார் பற்றிய கவலை. அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் நல்ல விதமாக மீண்டும் தீவுக்கு வரவேண்டுமே என்கின்ற கவலை. வெள்ளையர்களின் எதிர்ப்பையும் மீறி அவன் காதலித்துக் கொண்டிருக்கிறான். குறிப்பாக 'அபாந்தொன்னே ' ஆற்றருகே மேற்கு திசையில் கரும்புப் பண்ணை வைத்திருக்கும் முதலாளியின் மகன் 'போல் பிரான்சிஸ் ' உடைய வன்மம் தெரிவிக்கும் முகமும் கண்கள் உமிழும் தீயினைக் காண நேரும்போதெல்லாம் உடல் நடுங்குகின்றது.


'பெர்னாரை என்னிடம் சீக்கிரம் அழைத்துவா, மீண்டுமொருமுறை அவன் மார்பிற் சாய்ந்து கண்ணீர்விட அனுமதிப்பாயா இறைவா!, வேண்டிக் கொண்டாள் '. தன் கண்ணீரை எங்கே தனது அன்னையும், கைலாசமும் கவனித்துவிடுவார்களோ என்ற பதட்டதுடன், வாசலிலிருந்த தட்டியைத் திறந்து கொண்டு, வெளியே அடர்ந்திருந்த வாழைகளைத்தேடிச் சென்றாள். வாழைகளின் மறுபக்கத்தில் அவைகளின் வேரை நனைத்து, ஓசையின்றி ஓடும் நீரோடையும், அதனில் நீராடும் கோரைகளும், அவைகளுள் வெள்ளித் தகடுகளாய்த் துள்ளி மீண்டும் நீரில் மறையும் கெண்டை மீன்களும், அவளது மனதிலேற்படும் சிராய்ப்புகளுக்குக் களிம்பு கைலாசத்தின் கவலையோ வேறு

ரகம்:

அவன் மனத்தில் நேற்றைய இரவு பலசுமைகளை இறக்கியிருந்தது. தனது தாயின் மீது நடந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்து அவர்களது சிறிய குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கலக்கங்களும் போதாதென்று, நேற்றைய பின்னிரவிலிருந்து ஏற்பட்டுள்ள புதிய கவலை. மனதை எல்லாத் திசைகளிலும் பயணம் செய்வித்து அவனைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது. இந்தப் புதியகவலை, அவனது பழைய கவலைகளிலிருந்து விடுதலை செய்து தன்னிடம் சிறைப் படுத்திகொண்டது.


நேற்றிரவு 'போல் ' என்ற வெள்ளையனுடைய கரும்புப் தோட்டத்தித்திலிருந்து தப்பியுள்ள அடிமைகளில் ஒருவனான மஸெரி, 'போர் லூயி '(Port Louis)க்கருகே கடலோரம் 'சில்வி ' யின் பக்கத்துக் கபானில் வசித்த குடும்பத்தவன். கைலாசத்திற்கு கடலில் நீந்தவும், றபாணா வாசிக்கவும் பழக்கியவன். கைலாசம் கொண்டுவரும் 'மசாலாவை 'ப் பூசிக் கடல் மீன்களை நெருப்பில் வாட்டி, கரும்புச் சாராயத்துடன் அவற்றை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். சில்வியைப் போலவே, மஸேரியின் குடும்பமும் தீவின் பூர்வீக இனத்தவர், கிறேயோல் மொழி பேசுகின்ற குடும்பம். வறுமையின் காரணமாக அவனது குடும்பம் 'போல் மொரன் ' பண்ணையில் கொத்தடிமையாகச் சேர்ந்தது. தீவிலே மோசமான பண்ணை முதலாளிகளில் ஒருவன் எனப் பெயரெடுத்தவன் 'போல் '. சில்வியும் எச்சரித்திருந்தாள். வயிறு என்று ஒன்று இருக்கிறதே. எங்கேயேனும், எவரிடமாகினும் அடிமைப்பட்டாக வேண்டும். தீவிலிருந்த குடும்பங்களில் வெள்ளையரைத் தவிர மற்றவர்கள் ஏதோவொரு வகையில் அடிமைவாழ்வைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். எல்லோர் கழுத்திலும் கயிறுகள் உண்டு, கயிற்றின் நீளங்களில் மட்டுமே வித்தியாசங்களிருந்தன.
மேற்கத்தியர்கள் வருகைக்கு அதாவது பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவே மொரீஷீயஸ் தீவில் தமிழர்கள் வந்துபோனதற்கான அடையாளத்தினை அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன*1. ஆனால் பதினேழாம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்துமாக்கடலில் உள்ள தீவுகளுக்கு அவன் வர நேர்ந்தது வயிற்றுப்பாட்டுக்காக. 'தேவை அளிப்பை நோக்கி பயணிக்கும் ' என்கின்ற விதிப்பாடு புலம்பெயருதலுக்கான 'தலைவிதி ' என்ற மெய்ப்பாடு உண்மையாயிற்று. இந்துமதத்தின் பேரால் புகுத்தப்பட்ட சனாதன தர்மம், உழைக்கும் கூட்டத்தை வறுமையிலும், மற்றவர்களை சோம்பேறிகளாகவும் வைத்திருக்கப் போக, எல்லோரும் பேதமின்றி வயிற்றுக்கென எளிதாக அடிமையாக முடிந்தது.
பதினேழாம் நூற்றாண்டில், எப்பொழுது புதுச்சேரித் தமிழர்கள் இங்கே வந்திருப்பார்கள் என்பதை அறியச் சரியான சான்றுகள் இல்லையென்றாலும், 1686ம் ஆண்டில் பிரெஞ்சுத் தீவிலெடுக்கபட்டக் கணக்கெடுப்பில் அங்கிருந்த 269 நபர்களில் இந்தியக் கறுப்பர்களும் அடங்குவர்(2) என்பதன் மூலம் நம்மவர்கள் இருந்ததை அறிகிறோம். 1727ல் பிரெஞ்சுத் தீவின் கவர்னராகப் பொறுப்பேற்ற துய்மா (Duma) 1728ல் புதுச்சேரி சென்றிருந்தபோது பிள்ளைபிடிக்கின்றவன்போல நூற்றுக்கணக்கில் சிறுவர் சிறுமியரை அழைத்து வந்திருக்கிறார். அப்போது தொண்ணூற்றைந்து கொத்தனார்களையும் கப்பலில் கூடவே கொண்டு வந்ததாக ஆதாரங்கள் உண்டு(3). 1735ல் பெர்ற்றாண் பிரான்சுவா மாஹே தெ லாபூர்தொனே(BERTRAND FRANCOIS MAHE DE LABOURDONNAIS)குவர்னராக பொறுப்பேற்று வந்தபோது பிரெஞ்சுத்தீவின் நிலமை அவருக்கு ஏற்புடையதாக இல்லை. நல்லதொரு துறைமுகத்தை உருவாக்குவதுடன், தீவினில் அதிக அளவு கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்து மாக்கடலில் 'தீவினை ' நல்லதொரு கேந்திரமாக மாற்றக் கனவுகண்டார். வெள்ளையர்களின் இதர ஊழியங்களுக்கு மதகாஸ்கர், கனாரித் தீவுகள் அடிமைகளைத் தவிர, தீவின் பூர்வீகமக்களும் மலிவாய் கிடைக்க, கட்டுமானப் பணிகளுக்குத்(கப்பல் கட்ட, தச்சர், கொத்தனார், கொல்லர்) தனது தாய்நாடான பிரான்சிலிருந்து அழைத்துவந்து அதிக ஊதியம் கொடுப்பதைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் குறைந்த ஊதியத்தில் இந்தியர்களை அமர்த்திக்கொள்வது இலாபகரமானதென்று கருதினார். தவிர, செய்யும் தொழில்களில் தமிழர்களுக்குள்ள திறனும், நேர்த்தியும் அவரை ஆச்சரியப்படுத்தியது. இவர்களது திறனை வெகுவாக கம்பெனி நிருவாகம் மதிக்கத் தொடங்கியதால், அப்பகுதி பூர்வீக மக்களான மல்காஷ், கனாரிகள், கிறேயோல் மக்களின் வாழ்க்கை மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டது. கரும்புப் பண்ணைகளில் இவர்களது வாழ்வு மிகப் பரிதாபமானதாக இருந்தது. மக்காச் சோளத்திற்கும் மரவள்ளிக்கிழங்கு மாவிற்குமாக, எஜமானர்களின் பிரம்படிகளுக்கு ஈடுகொடுத்து நாள் முழுக்க உழைக்கவேண்டியிருந்தது. இதிலிருந்து விமோசனங்கள் கிடையாது. தப்பிக்க நினைத்த அடிமைகளுக்குக் கருப்பர்களின் சட்டத்தின் (The Code Noir 1723) கீழ்க் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
கைலாசத்தின் மனம் அலைபாய்ந்தது. மஸேரிக்கு எதுவும் நடந்துவிடக்கூடாதெனக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டான். கறுப்பர்களின் சட்டத்தின்படி கரும்புப் பண்ணையிலிருந்து தப்பிக்க முதன் முறையாக முயல்பவர்கள் பிடிபட்டவுடன் வழங்கப் படும் தண்டனை அவர்கள் இரு காதினையும் அறுத்தெறிவது. இரண்டாவது முறையும் அவர்கள் தப்பிக்க முயன்றால் மரண தண்டனை(4). என்கின்ற நிலைப்பாடு.
'போல் கரும்புப் பண்ணையிலிருந்து தப்புபித்த கொத்தடிமைகளை,குதிரை வீரர்கள் இரவு முழுக்கக் காடுகளில் அலைந்து எப்படியோ வெள்ளி முளைத்த நேரத்தில், கடல் வழியிற் தப்ப முனைந்தபோது பிடித்திருந்த செய்தி போர்லூயி முழுக்கப் பரவி காமாட்சி அம்மாளின் குடும்பத்தை அடைய வெகு நேரமாகிவிட்டது.. கைலாசமும் தெய்வானையும் பதைபதைத்து ஓடிவந்து பார்த்தபோது வெள்ளையர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கருகே அவர்கள் கொண்டுவரபட்டிருந்தனர். கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்க, கரடுமுரடான செப்பனிடப்படாத சாலைகளில் இழுத்துவரப்பட்டிருக்க அவர்கள் அணிந்திருந்த நீல டங்கரீ** சிராய்ப்புக்குள்ளாகி ஆங்காங்கே கிழிந்து இரத்தத்தில் நனைந்துகொண்டிருந்தது. சற்றுத் தள்ளிப் 'போல் ' பண்னையின் முதலாளி 'போல் அஞ்னெல் ' அவனது மகன் 'போல் பிரான்சிஸ் ', கவர்னர் லாபூர்தொனே, இரண்டொரு கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்திகளும் நின்றுகொண்டிருக்க எதிர்த்திசையில் ஒரு சில தமிழர்களும், கிறேயோல் ஆண்களும் பெண்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கைலாசத்தைப் பார்த்துச் சிரித்த அஞ்நெல், பக்கத்திலிருந்த கவர்னரிடம் இவனைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். கவர்னர் தமது அருகிலிருந்த குதிரைவீரனிடம் ஏதோ கட்டளை இடுவதைக் கண்டான். அக்குதிரை வீரன், குதிரையைச் செலுத்திக்கொண்டு இவனருகே வந்து நின்றான்.
'நாளைக் காலை கவர்னர் சமூகம் நீ வரவேண்டுமென்று கட்டைளை ', என்றான்.


தொடரும்.....


*. விழல் வேய்ந்த கூரையுடைய தங்குமிடங்கள்
** நீண்ட காற்சராய்
1.Les Tamouls A L 'IleMaurice-Ramoo SooriaMoorthy Page 21
2. Les Indiens A L 'Ile de France Page 47. Port Louis 1965
3. A.Lougnon -(Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes) op.cit., Page xxxviii
4.Slaves, Freedmen and Indentured Laborers in Colonial Mauritius - Richard B. Allen - Page 36
----
nakrish2003@yahoo.fr

நீலக்கடல் - அத்தியாயம் - 10


<>நீலக்கடல்<>


நாகரத்தினம் கிருஷ்ணா


கண்டு நின்ற மாயையுங் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்குமாறுநீ ருணந்திருக்க வல்லீரேல்
பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே.
- சிவவாக்கியர்


சு ற்றிலும் சிற்றோடு வேய்ந்த சிறிய சதுரவடிவ கூடம். மத்தியில் திறந்திருக்க, கீழே பாசி படர்ந்த வாசல். வாசலில் நேர்த்தியாகவும் நிறைவாகவும் ஒரு துளசிமாடம். இவன் படுத்திருந்த கூடத்தையொட்டி வாசலின் வலது புறத்தில், அந்தியொளியிற் சிவந்திருந்த பித்தைளை அண்டா, தத்தளிக்கும் நீர். அருகே பொருத்தமாக ஒரு சிறிய பித்தளைச் சொம்பு. வாசலின் இடப்புறம் கயிற்றுப்பந்தலிற் படர்ந்திருக்கும் மல்லிகைக் கொடி. அதன் கரும்பச்சை இலைகளுக்கிடை எட்டிப்பார்க்கும் வெள்ளைவெளேர் மொட்டுகள், மலர்கள். கூடத்தில் நடைவாசலையொயொட்டி முத்துப் புல்லாக்காய் ஆட்டம்போடும் பிரப்பங்கூண்டில், சிறகில் தலைமறப்பதும் - திடுக்கிட்டுத் திரும்பிப்பார்ப்பதும்; சில நேரங்களிற் குரலெடுத்து, 'வாணி! வாணி! ' எனவழைத்து எஜமானி விசுவாசங் காட்டுவதுமாகவொரு பச்சைக்கிளி.


அழகு எங்குமிருக்கிறது; அதிசயத்தான் பெர்னார்.


'நித்திரை சுகமாகவிருந்ததா ? ',

கேள்வி கேட்டவன் மாறன். அதிகப் பரிச்சயமில்லாத மனிதர்கள் வீட்டில், இப்படியுறங்கிப்போனதற்காகத் தன்னையே கடிந்துகொண்டான். மீண்டும் மீண்டும் அவளை ஏறிட்டுப் பார்க்க மனம் விழைந்தது. நிஜக்குதிரையென்றால் சுலபமாக அடக்கிவிடுவான், இதுமனக்குதிரை. கடிவாளம் விருப்பத்தின் பிடியிலல்லவா இருக்கிறது. மீண்டும் பார்த்தான். இவன் கண் ஆடியில் இன்னொரு தெய்வானை.

இவனது பார்வைப் புள்ளியில் வகிடெடுத்துப் பிரிந்து, கீழேயிறங்கிப் பின்புறத்தைத் தொட்டுக் கடிகாரப் பெண்டூலமாக ஆட்டம்போடும் ஒற்றைச்சடை, வட்டமாகத் துவங்கி அதரங்களுக்குக் கீழே மொக்காய் முடிந்திருக்கும் முழு நிலாமுகம். மைத்தொட்டக்கண்கள் - மனதையும் ஈரப்படுத்தும் பார்வை, ஒட்டிய நிலையில் உதடுகள், உரையாடும்போதெல்லாம் உதடுகளோடு இணைந்து அரங்கேறும் நாசிதுவாரங்களின் சிமிட்டல்கள், ஒளிரும் பற்கள்; வரிசைப்படுத்தி உறவுபடுத்தியதில் முடிவுக்குவந்தான்.


'இவளுக்கும் தெய்வானைக்கும் இடையிலிருப்பது புள்ளியல்ல, உறவுக்கோடு '.


சற்றுமுன் நடந்தச் சம்பவங்களை நினைவு கூர்ந்தான்:
'தெய்வானை.. நீயா ' ?


'தெய்வானையல்ல, வாணி! ', அப்படித்தான் என்னைப் பெற்றவர்கள் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். மற்றவர்களுக்கும் வாணியாகத்தான் நான் அறியபட்டிருக்கவேணும். உங்கள் சினேகிதர் எனக்கு, தெய்வானையென்று புதியதாக நாமகரணமேதேனும் சூட்டியிருப்பாரோ ? எவளாவதொரு வள்ளியைப் பார்த்த சந்தோஷத்தில் இப்படிப் புத்தி போயிற்றோ ? ' எனப் படபடத்துக்கொண்டு கேள்விக்கணைகளோடு மாறனை முறைத்தாள்.


'தாயே முத்துமாரியம்மா! கொஞ்சம் ரட்ஷிக்கவேணும்.. சினேகிதருக்கு உடனடியாகச் சிகிச்சை செய்யவேணும். உள்ளே அனுமதிக்கலாமில்லையா ? அதற்கேதும் ஆட்ஷேபனையில்லையே ? '


இடுப்பு வரைகுனிந்து தண்டனிட்டவன் முகத்தில் நமட்டுச் சிரிப்பு.
வாணியின் முகம் சிவந்துபோனதற்கு வெட்கமா ? பொய்க்கோபமா என அறிவதில் மாறனுக்குச் சிரமம். ஒதுங்கியவள், நிலமையையுணர்ந்து பெர்னாரை இடப்புறமாக வாங்கிக்கொள்ள, மாறன் வலப்புறமுமாகத் தாங்கிக்கொண்டான். மூவரும் நடையை அடைந்தபோது,
'மாறன் வணக்கம்.. மாறன் வணக்கம்.. ' கூண்டுக்கிளியின் குரல்.


'பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ' என்று, என்நண்பர் பெயரைச் சொல்லமாட்டாயா ? ' திருத்தினான் -மாறன்.


'பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ' கிளி அழகாய்த் திருப்பிச் சொன்னதில் வாணிக்குப் பெருமிதம். சற்றுமுன் காட்டியபொய்க்கோபம் மறைந்து, முகம் செந்தூரம்பூசிக்கொண்டது. ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் பெர்னார் இல்லையென்பது அவனது முகத்திற் தெரிந்தது.
கிளி என்ன புரிந்துகொண்டதோ, ' முட்டாள்.. மூடன்.. முட்டாள் மூடன் '. திரும்பத் திரும்பச் சொல்ல, வாணிக்கு இம்முறை உண்மையிலேயே கோபம் '


'அட முட்டாள் கிளியே.. நீதான் மூடன். எப்போது எதனைச் சொல்வதென்பதில் கொஞ்சம் விவஸ்தை வேணாமோ ? ', என்றவள் பின்கட்டு திசையிற் குரல் கொடுத்தாள்.


'அடியே கமலம்!.. எங்கேபோய்த் தொலைந்தாய். கொஞ்சம் சீக்கிரம் வருவாயானால் உபயோகமாயிருக்கும் '


வாணியின் குரலுக்காகவே காத்திருந்ததுபோல, சேடிப்பெண் கமலம் ஓடிவந்தாள்.


'அம்மா!.. அழைத்தீர்களா ? '


'என்னடி கேள்வியிது ? அழைத்துத்தானே வந்திருக்கிறாய் ? உள்ளேயிருந்து ஓர் இலவம்பஞ்சு மெத்தையைக் கொண்டுவந்து கூடத்திலிடு. அடுப்பில் வெந்நீர்போடு. வீட்டிலிருக்கும் பச்சிலையை விழுதுப்பதத்திற்கு அம்மியிலிட்டு அரைத்துவா. ' ஆக்ஞைகள் வரிசையாக இறக்கை கட்டிப் பறந்தன.


எஜமானியின் கட்டளைக்குப் பணிந்து அங்கே காரியங்கள் துரிதமாக நடைபெறுவதற்கான அறிகுறிகள்.


மாறனும் வாணியும் கைத்தாங்கலாக பெர்னாரை நடைவாசலையொட்டிய கூடத்திற்கு அழைத்துச் சென்று பஞ்சுமெத்தையிலிட்டனர். வீட்டில் நிறைந்திருந்த மல்லிகைவாசமும், சந்தணமும், பன்னீரும் சாம்பிராணிப் புகையும் உடன் வந்து வரவேற்றன. பெர்னார் கடுமையான வலிக்கிடையிலும், அந்தச் சுகத்தை அனுபவித்தான்.


' இல்லை.. இல்லை.. இந்தப்பெண்ணுக்கும் தெய்வானைக்குமிடையில், இருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு முடிச்சுள்ளது. அதனை அவிழ்க்கவேண்டுமென்றால், அதன் முனைகள் அறியப்படவேண்டும். எங்கே ? எப்படி ? '


மாறன் வாசலிலிருந்த அண்டாவில் நீர் சேந்தி காலைக் கழுவிக்கொண்டு, இவனருகே வந்தான்.


இரத்தத்தில் தோய்திருந்த தோளினைக்கொண்டு, வாணி காயம்பட்ட இடத்தினை ஊகித்தவளாக, பெர்னாரின் மேற்சட்டைப் பிணைகளைத் தளர்த்தி, பின்புறமாக இறக்கி நிறுத்தினாள். காயம் அதிக ஆழமில்லையெனினும் சுண்டு விரல் அளவிற்கு நீளவாட்டமாக நீரிலிழைத்தக் கோடாய்த் தசையைத் திறந்திருந்தது.


சேடிப்பெண் ஒருகையில் வெந்நீரும், மறுகையில் எண்ணெய் கிண்ணமுமாக வந்து சேர்ந்தாள். பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து வாணி வெட்டுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய மாறன் அவளுக்கு உதவி செய்தான். வலிபொறுக்கவியலாமல் பெர்னார் பற்களைக் கடித்துக்கொண்டான்.


'வாணி!கவனமிருக்கட்டும். இந்தியாவிலிருக்கும் வரை இவரை ஈ எறும்புகூட அண்டவிடமாட்டேன் என சங்கற்பம் செய்துகொண்டிருக்கிறேன் '.


'பயம் வேண்டாம், உமது சங்கற்பத்திற்கு இந்தப் பெண்ஜென்மத்தால் எந்தவிதமான அபகீர்த்தியும் நேர்ந்துவிடாது. அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் எடுங்கள் ', சேடிப்பெண் வைத்துவிட்டுச் சென்றிருந்த கிண்ணத்தைக் காட்டினாள்.


'என்னவென்று அறியலாமோ ? '


'வலியும் வீக்கமும் தணியப் பூண்டு சேர்த்துக் காய்ச்சிய தேங்காய்எண்ணெய். காயத்தை இதனால் சுத்தம் செய்த பிறகு, வெட்டுண்ட இடத்தில் இப்பச்சிலையைவைத்துக் கட்ட, ஒரு சில தினங்களில் உங்கள் பறங்கி நண்பர் குதிரைபோட்டுக்கொண்டு மறுபடியும் புதுச்சேரிரைச் சுற்றிவரலாம். '


'அந்தப் பச்சிலையின் பேரை நாங்கள் அறியக்கூடாதோ ? '
'கூடாதென்பதுதான் அப்பாவின் விருப்பம் '. இப்போதைக்கு அவர் எனது குரு. நான் அவரது சீடன். அவரது விருப்பத்திற்கு மாறாக என்னால் நடக்கமுடியாது '


'தங்களது தந்தையாரின் ஆக்ஞைபடியே நடவுங்கள் அம்மணி. ' என்று நகையாடிய மாறன், 'வைத்தியர் சபாபதி படையாச்சி, எங்கேபோயிருக்கிறார் என்றாவது நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ? ' என்றான்..


'ம்.. தாராளமாக. தந்தை திருச்சினாப்பள்ளிக்கும் அன்னை வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்திற்கும் போயிருக்கிறார். தடியன் சின்னய்யன் சின்னகண்ணு செட்டியார் வீடுவரை சென்றிருக்கிறான். இது போதுமா ? அல்லது இன்னும் வேறு சங்கதிகள் வேணுமா ? '


' இப்போதைக்கு இது போதுமென்றே நினைக்கிறேன். நண்பருக்குச் சிசுருட்ஷைகளைப் பார்க்கும்போது, அடியேனுக்கும் அப்படியொரு ஆசை '. அவள் கண்களை நேரிட்டுப் பார்த்தான். 'அப்படிச் செய்தால் நானும் பாக்கியவானாவேன். '


அவன் பார்வை வீச்சிற்குத் தடுமாறியவள் தன் பணிமறந்து சில நாழிகைகள் தயங்கி நின்றாள்.


'சரிதான், வைத்தியமென்பது பாதிக்கபட்டவர்களுக்குத்தானேயொழிய, மற்றவர்களுக்கல்ல என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா '


'எனக்கு மருந்திட வேண்டுமா வேண்டாமா என்பதனைக் கைபிடித்துப் பார்த்தாற்தானே தெரியும் ?. நானும் காயமுற்றிருக்கிறேன் '


'எங்கே ? '


'மனதில். '


'அய்யா..! இந்த ஏழை வைத்தியரில்லத்திற்கு வந்திருப்பது, காயப்பட்ட உங்கள் நண்பருக்காகவா ? அல்லது உங்களுக்காகவா ? '


'உண்மையைச் சொன்னால் கம்புக்கும் களைவெட்டினதுபோல, தம்பிக்கும் பெண் பார்த்ததுபோல '


பொறுமையாக மாறனுக்கும் வாணிக்கும் நடந்த உரையாடலைக் அவதானித்துவந்த பெர்னாருக்கு அவர்களிடையே இருப்பது மாசு மறுவற்ற காதலென்பது புரிந்தது.


விழித்தெழுந்திருந்தபோது பின் வாசல் வழியாக, இருட்டோடு கலந்த இளங்காற்று, மதுரமாகத் தீண்டியது. புதிதாகவங்கே டலைஎண்ணெய் விளக்கொன்று ஜோதியாய் எரிந்துகொண்டிருந்தது. சற்றுத் தள்ளி மாறன் மனையில் உட்கார்ந்து, கடலையை உரித்துத் தின்றுகொண்டிருந்தான்.


'நித்திரை சுகமாகவிருந்ததா ? ',


'வெள்ளைக்கார நண்பரே ? கேள்வி உங்களுக்குத்தான்.. '


'என் கறுப்பு நண்பரே. சுகமான நித்திரைதான். புதுவிடத்தில் உங்களையெல்லாம் சங்கடப்படுத்திக்கொண்டு..மன்னிக்கவேண்டும் '


'ஏதேதோ பெரியவார்த்தைகளாடி எங்களை அச்சுறுத்துகிறீர்கள். உண்மையில் அட்டியின்றி, எங்கள் அன்பினை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள்தான் நன்றி சொல்லவேணும். தவிரப் பயணக் களைப்பும், காயப்பட்ட உடலும் நித்திரைகொள்ள வைத்திருக்கிறது. இதற்குத் தாங்கள் வருந்துவது ஆகாது. '


'இத்தனை நாழிகையாய் நீயும் எனக்காக இங்கே காத்துக்கொண்டு.. '


'இல்லை சற்று முன்புதான் நமது துபாஷ் பலராம் பிள்ளையை பார்த்துத் தங்களைப் பற்றிய கவலையேதும் வேண்டாமெனச் சொல்லிவிட்டுவந்தேன். '


'அப்படியா ? அவர் வேறு ஏதேனும் தகவல்கள் கூறினாரா. முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வேலாயுத முதலியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று கேட்டிருந்தேனே. '


'தாங்கள் புதுச்சேரி வருவதற்குதவிய கப்பலிற் கொண்டுவந்த பொருட்களை விற்பதற்கு நாளைக்கு கிட்டங்கியில் ஏற்பாடாகிவுள்ளது. அதில் வேலாயுதமுதலியும் கலந்துகொள்கிறார்.. கும்பெனியின் நம்பிக்கையான தரகர்களில் அவரும் ஒருவராம்.. அவரைப் பற்றிய அதிகபட்ஷத் தகவல்களுக்காக பலராம் பிள்ளை காத்திருக்கிறாராம். '
'கேட்பதற்குச் சந்தோஷமாகவுள்ளது. வந்ததின் நோக்கம் செயல்படவாரம்பித்ததில் மகிழ்ச்சியே. அது சரி உன் காதலி வாணியெங்கே ? '


'தங்களுக்குப் பசும்பால் கொண்டுவருகிறேனென உள்ளே சென்றிருக்கிறாள். ' மாறன் கூறி முடிக்கவும், பாற்குவளையுடன் வாணி அங்கே வந்து நிற்கவும் சரியாகயிருந்தது.


'குங்குமப் பூவும், ஏலமும் கலந்து சுண்டக்காய்ச்சிய பால்.

எங்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கானதல்ல,

அரண்மனைவாசிகளுக்கானது. பருகிப் பாருங்கள் புரியும் ' - மாறன்.


'மாறன் நீயும் கொஞ்சம் பருகேன் '- பெர்னார்


'நீங்கள் கவலை கொள்ளவேணாம். உங்கள் நண்பருக்கும் போதுமான அளவிற்கு இருக்கின்றது '. சூடாக இருந்த பாலை ஆற்றியவாறு கூறினாள்.


அவள் குவளையில் நீட்டிய பாலை வாங்கிப் பருக, பெர்னார் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை எட்டிப் பார்த்தது.


மாறன், வாசலில் துவைத்துக் காயவைத்திருந்த உருமாலொன்றை எடுத்துவந்து, அன்பாய்த் துடைத்தான். இவன் மனம் நெகிழ்ந்தது.


'நண்பரே, உங்கள் அன்பிற்கு நான் பெரிதும் கடன் பட்டிருக்கிறேன் ' சொல்லும்போதே அவனுக்கு நா தழுதழுத்தது. மாறனை இறுகவணைத்துக்கொண்டான்.


'எனக்கொரு உபகாரம் செய்யவேணும். உங்கள் தோழிபற்றிய சில தகவல்கள் எனக்குத் தெரியவேணும். '


'தங்கள் மனதிலிருக்கும் கேள்வியின் முகாந்திரம் என்புத்திக்கு விளங்கவில்லை. என்ன தெரிய வேணும் ? '


'அவளுக்குத் 'தெய்வானை ' என்றொரு பெயரில் ஏதேனும் பரிச்சயமுண்டா ? '


தங்களருகே நின்றவண்ணம், நண்பர்களுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வாணியின் திசைக்கு, மாறன் திரும்பினான்.


'வாணி!.. நண்பர் கேட்பது புரிகின்றதா ?


'திருக்காமேஸ்வரர்தான் என்னை ரட்ஷிக்கவேணும். என் வாழ்க்கையில் அப்படியொரு பெயர்கொண்ட பெண்ணை இதுவரை நான் சந்திக்கவுமில்லை. கேள்விஞானமும் இல்லை. யாரந்தப் பெண் '


'எப்படிச் சொல்வது. என் கண்கள் காணும் காட்சிப்பொருளுக்குப் பழுதில்லையெனில், உங்களிருவரில் ஒருவர் ஸ்தூலம், மற்றவர் சூட்ஷுமம். ஒருவர் அசல் மற்றவர் நகல். எவர் ? ஏன் ? என்பதுதான் கேள்வி. தோற்றம், மொழி, பாவனை எல்லாவற்றிலும் நீ அவளாக இருப்பதுதான் ஆச்சரியம். அவள் என் தெய்வானை. யுகங்கள்தோறும் எனக்கென்று ஜென்மமெடுப்பவள்.


இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் என்னை அவளிடம் சேர்த்த ஓர் அந்திமாலையில், அவள் முகம் பார்த்த முதற்பார்வையிலேயே நான் அவளுக்கென்பதும், அவள் எனக்கென்பதும் உங்கள் மொழியில் சொல்வதாகவிருந்தால் 'எழுதபட்டிருக்கிறது '. இன்றைக்குத் தன் வயதுபோன தாயுடனும், சகோதரன் கைலாசத்துடனும் பிரெஞ்சுத் தீவில் ஜீவிக்கிறாள் '


'ஷமிக்க வேணும். எதை வைத்துச் சொல்கிறீர் ? எனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதேனும் உருவ ஒற்றுமைகளுண்டா ? '


' உங்களிருவரையும் அருகருகே நிறுத்தினால் உங்களில் யார் தெய்வானை ? யார் வாணி என்பதை அக்காமாட்சி அம்மாளால் கூட அறிய முடியாது '


'காமாட்சி அம்மாள் யார் ?


'தீவில் தெய்வானையுடனும் கைலாசத்துடனும் வாழ்கின்ற பெண்மணி. அவர்களைப் பெற்றவள்


'அப்படியா ? ' மாறனும், வாணியும், ஒருமித்துக் குரலெழுப்பினார்கள் '


'ஏன் ? உங்களுக்கு முன்பே அவரைத்தெரியுமா ?


'எங்களுக்குத் தெரிந்த ஒருபெண்மணி.. ' இருவரும் மீண்டும் ஏகோபித்த குரலில் சொல்லவாரம்பிக்க, நிலைமையைப் புரிந்துகொண்ட வாணி, '


நீங்களே கூறி முடியுங்கள் ' மாறனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்


' ஆம்.. வாணியைப் பார்ப்பதெற்கென்று வயதான பெண்மணி ஒருவள் அருகிலுள்ள தொண்டமானத்தம் கிராமத்திலிருந்து வருவாள். மிகவும் பிரியமாக இருப்பாள். அவள் பெயரும் காமாட்சியே. '

'.... '
தொடரும்.....