
<>நீலக்கடல்<>
நாகரத்தினம் கிருஷ்ணா
கண்டு நின்ற மாயையுங் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்குமாறுநீ ருணந்திருக்க வல்லீரேல்
பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே.
- சிவவாக்கியர்
சு ற்றிலும் சிற்றோடு வேய்ந்த சிறிய சதுரவடிவ கூடம். மத்தியில் திறந்திருக்க, கீழே பாசி படர்ந்த வாசல். வாசலில் நேர்த்தியாகவும் நிறைவாகவும் ஒரு துளசிமாடம். இவன் படுத்திருந்த கூடத்தையொட்டி வாசலின் வலது புறத்தில், அந்தியொளியிற் சிவந்திருந்த பித்தைளை அண்டா, தத்தளிக்கும் நீர். அருகே பொருத்தமாக ஒரு சிறிய பித்தளைச் சொம்பு. வாசலின் இடப்புறம் கயிற்றுப்பந்தலிற் படர்ந்திருக்கும் மல்லிகைக் கொடி. அதன் கரும்பச்சை இலைகளுக்கிடை எட்டிப்பார்க்கும் வெள்ளைவெளேர் மொட்டுகள், மலர்கள். கூடத்தில் நடைவாசலையொயொட்டி முத்துப் புல்லாக்காய் ஆட்டம்போடும் பிரப்பங்கூண்டில், சிறகில் தலைமறப்பதும் - திடுக்கிட்டுத் திரும்பிப்பார்ப்பதும்; சில நேரங்களிற் குரலெடுத்து, 'வாணி! வாணி! ' எனவழைத்து எஜமானி விசுவாசங் காட்டுவதுமாகவொரு பச்சைக்கிளி.
அழகு எங்குமிருக்கிறது; அதிசயத்தான் பெர்னார்.
'நித்திரை சுகமாகவிருந்ததா ? ',
கேள்வி கேட்டவன் மாறன். அதிகப் பரிச்சயமில்லாத மனிதர்கள் வீட்டில், இப்படியுறங்கிப்போனதற்காகத் தன்னையே கடிந்துகொண்டான். மீண்டும் மீண்டும் அவளை ஏறிட்டுப் பார்க்க மனம் விழைந்தது. நிஜக்குதிரையென்றால் சுலபமாக அடக்கிவிடுவான், இதுமனக்குதிரை. கடிவாளம் விருப்பத்தின் பிடியிலல்லவா இருக்கிறது. மீண்டும் பார்த்தான். இவன் கண் ஆடியில் இன்னொரு தெய்வானை.
இவனது பார்வைப் புள்ளியில் வகிடெடுத்துப் பிரிந்து, கீழேயிறங்கிப் பின்புறத்தைத் தொட்டுக் கடிகாரப் பெண்டூலமாக ஆட்டம்போடும் ஒற்றைச்சடை, வட்டமாகத் துவங்கி அதரங்களுக்குக் கீழே மொக்காய் முடிந்திருக்கும் முழு நிலாமுகம். மைத்தொட்டக்கண்கள் - மனதையும் ஈரப்படுத்தும் பார்வை, ஒட்டிய நிலையில் உதடுகள், உரையாடும்போதெல்லாம் உதடுகளோடு இணைந்து அரங்கேறும் நாசிதுவாரங்களின் சிமிட்டல்கள், ஒளிரும் பற்கள்; வரிசைப்படுத்தி உறவுபடுத்தியதில் முடிவுக்குவந்தான்.
'இவளுக்கும் தெய்வானைக்கும் இடையிலிருப்பது புள்ளியல்ல, உறவுக்கோடு '.
சற்றுமுன் நடந்தச் சம்பவங்களை நினைவு கூர்ந்தான்:
'தெய்வானை.. நீயா ' ?
'தெய்வானையல்ல, வாணி! ', அப்படித்தான் என்னைப் பெற்றவர்கள் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். மற்றவர்களுக்கும் வாணியாகத்தான் நான் அறியபட்டிருக்கவேணும். உங்கள் சினேகிதர் எனக்கு, தெய்வானையென்று புதியதாக நாமகரணமேதேனும் சூட்டியிருப்பாரோ ? எவளாவதொரு வள்ளியைப் பார்த்த சந்தோஷத்தில் இப்படிப் புத்தி போயிற்றோ ? ' எனப் படபடத்துக்கொண்டு கேள்விக்கணைகளோடு மாறனை முறைத்தாள்.
'தாயே முத்துமாரியம்மா! கொஞ்சம் ரட்ஷிக்கவேணும்.. சினேகிதருக்கு உடனடியாகச் சிகிச்சை செய்யவேணும். உள்ளே அனுமதிக்கலாமில்லையா ? அதற்கேதும் ஆட்ஷேபனையில்லையே ? '
இடுப்பு வரைகுனிந்து தண்டனிட்டவன் முகத்தில் நமட்டுச் சிரிப்பு.
வாணியின் முகம் சிவந்துபோனதற்கு வெட்கமா ? பொய்க்கோபமா என அறிவதில் மாறனுக்குச் சிரமம். ஒதுங்கியவள், நிலமையையுணர்ந்து பெர்னாரை இடப்புறமாக வாங்கிக்கொள்ள, மாறன் வலப்புறமுமாகத் தாங்கிக்கொண்டான். மூவரும் நடையை அடைந்தபோது,
'மாறன் வணக்கம்.. மாறன் வணக்கம்.. ' கூண்டுக்கிளியின் குரல்.
வாணியின் முகம் சிவந்துபோனதற்கு வெட்கமா ? பொய்க்கோபமா என அறிவதில் மாறனுக்குச் சிரமம். ஒதுங்கியவள், நிலமையையுணர்ந்து பெர்னாரை இடப்புறமாக வாங்கிக்கொள்ள, மாறன் வலப்புறமுமாகத் தாங்கிக்கொண்டான். மூவரும் நடையை அடைந்தபோது,
'மாறன் வணக்கம்.. மாறன் வணக்கம்.. ' கூண்டுக்கிளியின் குரல்.
'பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ' என்று, என்நண்பர் பெயரைச் சொல்லமாட்டாயா ? ' திருத்தினான் -மாறன்.
'பெர்னார் வணக்கம்.. பெர்னார் வணக்கம் ' கிளி அழகாய்த் திருப்பிச் சொன்னதில் வாணிக்குப் பெருமிதம். சற்றுமுன் காட்டியபொய்க்கோபம் மறைந்து, முகம் செந்தூரம்பூசிக்கொண்டது. ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் பெர்னார் இல்லையென்பது அவனது முகத்திற் தெரிந்தது.
கிளி என்ன புரிந்துகொண்டதோ, ' முட்டாள்.. மூடன்.. முட்டாள் மூடன் '. திரும்பத் திரும்பச் சொல்ல, வாணிக்கு இம்முறை உண்மையிலேயே கோபம் '
'அட முட்டாள் கிளியே.. நீதான் மூடன். எப்போது எதனைச் சொல்வதென்பதில் கொஞ்சம் விவஸ்தை வேணாமோ ? ', என்றவள் பின்கட்டு திசையிற் குரல் கொடுத்தாள்.
'அடியே கமலம்!.. எங்கேபோய்த் தொலைந்தாய். கொஞ்சம் சீக்கிரம் வருவாயானால் உபயோகமாயிருக்கும் '
வாணியின் குரலுக்காகவே காத்திருந்ததுபோல, சேடிப்பெண் கமலம் ஓடிவந்தாள்.
'அம்மா!.. அழைத்தீர்களா ? '
'என்னடி கேள்வியிது ? அழைத்துத்தானே வந்திருக்கிறாய் ? உள்ளேயிருந்து ஓர் இலவம்பஞ்சு மெத்தையைக் கொண்டுவந்து கூடத்திலிடு. அடுப்பில் வெந்நீர்போடு. வீட்டிலிருக்கும் பச்சிலையை விழுதுப்பதத்திற்கு அம்மியிலிட்டு அரைத்துவா. ' ஆக்ஞைகள் வரிசையாக இறக்கை கட்டிப் பறந்தன.
எஜமானியின் கட்டளைக்குப் பணிந்து அங்கே காரியங்கள் துரிதமாக நடைபெறுவதற்கான அறிகுறிகள்.
மாறனும் வாணியும் கைத்தாங்கலாக பெர்னாரை நடைவாசலையொட்டிய கூடத்திற்கு அழைத்துச் சென்று பஞ்சுமெத்தையிலிட்டனர். வீட்டில் நிறைந்திருந்த மல்லிகைவாசமும், சந்தணமும், பன்னீரும் சாம்பிராணிப் புகையும் உடன் வந்து வரவேற்றன. பெர்னார் கடுமையான வலிக்கிடையிலும், அந்தச் சுகத்தை அனுபவித்தான்.
' இல்லை.. இல்லை.. இந்தப்பெண்ணுக்கும் தெய்வானைக்குமிடையில், இருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு முடிச்சுள்ளது. அதனை அவிழ்க்கவேண்டுமென்றால், அதன் முனைகள் அறியப்படவேண்டும். எங்கே ? எப்படி ? '
மாறன் வாசலிலிருந்த அண்டாவில் நீர் சேந்தி காலைக் கழுவிக்கொண்டு, இவனருகே வந்தான்.
இரத்தத்தில் தோய்திருந்த தோளினைக்கொண்டு, வாணி காயம்பட்ட இடத்தினை ஊகித்தவளாக, பெர்னாரின் மேற்சட்டைப் பிணைகளைத் தளர்த்தி, பின்புறமாக இறக்கி நிறுத்தினாள். காயம் அதிக ஆழமில்லையெனினும் சுண்டு விரல் அளவிற்கு நீளவாட்டமாக நீரிலிழைத்தக் கோடாய்த் தசையைத் திறந்திருந்தது.
சேடிப்பெண் ஒருகையில் வெந்நீரும், மறுகையில் எண்ணெய் கிண்ணமுமாக வந்து சேர்ந்தாள். பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து வாணி வெட்டுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய மாறன் அவளுக்கு உதவி செய்தான். வலிபொறுக்கவியலாமல் பெர்னார் பற்களைக் கடித்துக்கொண்டான்.
'வாணி!கவனமிருக்கட்டும். இந்தியாவிலிருக்கும் வரை இவரை ஈ எறும்புகூட அண்டவிடமாட்டேன் என சங்கற்பம் செய்துகொண்டிருக்கிறேன் '.
'பயம் வேண்டாம், உமது சங்கற்பத்திற்கு இந்தப் பெண்ஜென்மத்தால் எந்தவிதமான அபகீர்த்தியும் நேர்ந்துவிடாது. அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் எடுங்கள் ', சேடிப்பெண் வைத்துவிட்டுச் சென்றிருந்த கிண்ணத்தைக் காட்டினாள்.
'என்னவென்று அறியலாமோ ? '
'வலியும் வீக்கமும் தணியப் பூண்டு சேர்த்துக் காய்ச்சிய தேங்காய்எண்ணெய். காயத்தை இதனால் சுத்தம் செய்த பிறகு, வெட்டுண்ட இடத்தில் இப்பச்சிலையைவைத்துக் கட்ட, ஒரு சில தினங்களில் உங்கள் பறங்கி நண்பர் குதிரைபோட்டுக்கொண்டு மறுபடியும் புதுச்சேரிரைச் சுற்றிவரலாம். '
'அந்தப் பச்சிலையின் பேரை நாங்கள் அறியக்கூடாதோ ? '
'கூடாதென்பதுதான் அப்பாவின் விருப்பம் '. இப்போதைக்கு அவர் எனது குரு. நான் அவரது சீடன். அவரது விருப்பத்திற்கு மாறாக என்னால் நடக்கமுடியாது '
'தங்களது தந்தையாரின் ஆக்ஞைபடியே நடவுங்கள் அம்மணி. ' என்று நகையாடிய மாறன், 'வைத்தியர் சபாபதி படையாச்சி, எங்கேபோயிருக்கிறார் என்றாவது நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ? ' என்றான்..
'ம்.. தாராளமாக. தந்தை திருச்சினாப்பள்ளிக்கும் அன்னை வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்திற்கும் போயிருக்கிறார். தடியன் சின்னய்யன் சின்னகண்ணு செட்டியார் வீடுவரை சென்றிருக்கிறான். இது போதுமா ? அல்லது இன்னும் வேறு சங்கதிகள் வேணுமா ? '
' இப்போதைக்கு இது போதுமென்றே நினைக்கிறேன். நண்பருக்குச் சிசுருட்ஷைகளைப் பார்க்கும்போது, அடியேனுக்கும் அப்படியொரு ஆசை '. அவள் கண்களை நேரிட்டுப் பார்த்தான். 'அப்படிச் செய்தால் நானும் பாக்கியவானாவேன். '
அவன் பார்வை வீச்சிற்குத் தடுமாறியவள் தன் பணிமறந்து சில நாழிகைகள் தயங்கி நின்றாள்.
'சரிதான், வைத்தியமென்பது பாதிக்கபட்டவர்களுக்குத்தானேயொழிய, மற்றவர்களுக்கல்ல என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமா '
'எனக்கு மருந்திட வேண்டுமா வேண்டாமா என்பதனைக் கைபிடித்துப் பார்த்தாற்தானே தெரியும் ?. நானும் காயமுற்றிருக்கிறேன் '
'எங்கே ? '
'மனதில். '
'அய்யா..! இந்த ஏழை வைத்தியரில்லத்திற்கு வந்திருப்பது, காயப்பட்ட உங்கள் நண்பருக்காகவா ? அல்லது உங்களுக்காகவா ? '
'உண்மையைச் சொன்னால் கம்புக்கும் களைவெட்டினதுபோல, தம்பிக்கும் பெண் பார்த்ததுபோல '
பொறுமையாக மாறனுக்கும் வாணிக்கும் நடந்த உரையாடலைக் அவதானித்துவந்த பெர்னாருக்கு அவர்களிடையே இருப்பது மாசு மறுவற்ற காதலென்பது புரிந்தது.
விழித்தெழுந்திருந்தபோது பின் வாசல் வழியாக, இருட்டோடு கலந்த இளங்காற்று, மதுரமாகத் தீண்டியது. புதிதாகவங்கே டலைஎண்ணெய் விளக்கொன்று ஜோதியாய் எரிந்துகொண்டிருந்தது. சற்றுத் தள்ளி மாறன் மனையில் உட்கார்ந்து, கடலையை உரித்துத் தின்றுகொண்டிருந்தான்.
'நித்திரை சுகமாகவிருந்ததா ? ',
'வெள்ளைக்கார நண்பரே ? கேள்வி உங்களுக்குத்தான்.. '
'என் கறுப்பு நண்பரே. சுகமான நித்திரைதான். புதுவிடத்தில் உங்களையெல்லாம் சங்கடப்படுத்திக்கொண்டு..மன்னிக்கவேண்டும் '
'ஏதேதோ பெரியவார்த்தைகளாடி எங்களை அச்சுறுத்துகிறீர்கள். உண்மையில் அட்டியின்றி, எங்கள் அன்பினை ஏற்றுக்கொண்டதற்காக நாங்கள்தான் நன்றி சொல்லவேணும். தவிரப் பயணக் களைப்பும், காயப்பட்ட உடலும் நித்திரைகொள்ள வைத்திருக்கிறது. இதற்குத் தாங்கள் வருந்துவது ஆகாது. '
'இத்தனை நாழிகையாய் நீயும் எனக்காக இங்கே காத்துக்கொண்டு.. '
'இல்லை சற்று முன்புதான் நமது துபாஷ் பலராம் பிள்ளையை பார்த்துத் தங்களைப் பற்றிய கவலையேதும் வேண்டாமெனச் சொல்லிவிட்டுவந்தேன். '
'அப்படியா ? அவர் வேறு ஏதேனும் தகவல்கள் கூறினாரா. முத்தியால்பேட்டையைச் சேர்ந்த வேலாயுத முதலியார் பற்றிய தகவல்கள் வேண்டுமென்று கேட்டிருந்தேனே. '
'தாங்கள் புதுச்சேரி வருவதற்குதவிய கப்பலிற் கொண்டுவந்த பொருட்களை விற்பதற்கு நாளைக்கு கிட்டங்கியில் ஏற்பாடாகிவுள்ளது. அதில் வேலாயுதமுதலியும் கலந்துகொள்கிறார்.. கும்பெனியின் நம்பிக்கையான தரகர்களில் அவரும் ஒருவராம்.. அவரைப் பற்றிய அதிகபட்ஷத் தகவல்களுக்காக பலராம் பிள்ளை காத்திருக்கிறாராம். '
'கேட்பதற்குச் சந்தோஷமாகவுள்ளது. வந்ததின் நோக்கம் செயல்படவாரம்பித்ததில் மகிழ்ச்சியே. அது சரி உன் காதலி வாணியெங்கே ? '
'தங்களுக்குப் பசும்பால் கொண்டுவருகிறேனென உள்ளே சென்றிருக்கிறாள். ' மாறன் கூறி முடிக்கவும், பாற்குவளையுடன் வாணி அங்கே வந்து நிற்கவும் சரியாகயிருந்தது.
'குங்குமப் பூவும், ஏலமும் கலந்து சுண்டக்காய்ச்சிய பால்.
எங்களைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகளுக்கானதல்ல,
அரண்மனைவாசிகளுக்கானது. பருகிப் பாருங்கள் புரியும் ' - மாறன்.
'மாறன் நீயும் கொஞ்சம் பருகேன் '- பெர்னார்
'நீங்கள் கவலை கொள்ளவேணாம். உங்கள் நண்பருக்கும் போதுமான அளவிற்கு இருக்கின்றது '. சூடாக இருந்த பாலை ஆற்றியவாறு கூறினாள்.
அவள் குவளையில் நீட்டிய பாலை வாங்கிப் பருக, பெர்னார் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை எட்டிப் பார்த்தது.
மாறன், வாசலில் துவைத்துக் காயவைத்திருந்த உருமாலொன்றை எடுத்துவந்து, அன்பாய்த் துடைத்தான். இவன் மனம் நெகிழ்ந்தது.
'நண்பரே, உங்கள் அன்பிற்கு நான் பெரிதும் கடன் பட்டிருக்கிறேன் ' சொல்லும்போதே அவனுக்கு நா தழுதழுத்தது. மாறனை இறுகவணைத்துக்கொண்டான்.
'எனக்கொரு உபகாரம் செய்யவேணும். உங்கள் தோழிபற்றிய சில தகவல்கள் எனக்குத் தெரியவேணும். '
'தங்கள் மனதிலிருக்கும் கேள்வியின் முகாந்திரம் என்புத்திக்கு விளங்கவில்லை. என்ன தெரிய வேணும் ? '
'அவளுக்குத் 'தெய்வானை ' என்றொரு பெயரில் ஏதேனும் பரிச்சயமுண்டா ? '
தங்களருகே நின்றவண்ணம், நண்பர்களுக்குள் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வாணியின் திசைக்கு, மாறன் திரும்பினான்.
'வாணி!.. நண்பர் கேட்பது புரிகின்றதா ?
'திருக்காமேஸ்வரர்தான் என்னை ரட்ஷிக்கவேணும். என் வாழ்க்கையில் அப்படியொரு பெயர்கொண்ட பெண்ணை இதுவரை நான் சந்திக்கவுமில்லை. கேள்விஞானமும் இல்லை. யாரந்தப் பெண் '
'எப்படிச் சொல்வது. என் கண்கள் காணும் காட்சிப்பொருளுக்குப் பழுதில்லையெனில், உங்களிருவரில் ஒருவர் ஸ்தூலம், மற்றவர் சூட்ஷுமம். ஒருவர் அசல் மற்றவர் நகல். எவர் ? ஏன் ? என்பதுதான் கேள்வி. தோற்றம், மொழி, பாவனை எல்லாவற்றிலும் நீ அவளாக இருப்பதுதான் ஆச்சரியம். அவள் என் தெய்வானை. யுகங்கள்தோறும் எனக்கென்று ஜென்மமெடுப்பவள்.
இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் என்னை அவளிடம் சேர்த்த ஓர் அந்திமாலையில், அவள் முகம் பார்த்த முதற்பார்வையிலேயே நான் அவளுக்கென்பதும், அவள் எனக்கென்பதும் உங்கள் மொழியில் சொல்வதாகவிருந்தால் 'எழுதபட்டிருக்கிறது '. இன்றைக்குத் தன் வயதுபோன தாயுடனும், சகோதரன் கைலாசத்துடனும் பிரெஞ்சுத் தீவில் ஜீவிக்கிறாள் '
'ஷமிக்க வேணும். எதை வைத்துச் சொல்கிறீர் ? எனக்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏதேனும் உருவ ஒற்றுமைகளுண்டா ? '
' உங்களிருவரையும் அருகருகே நிறுத்தினால் உங்களில் யார் தெய்வானை ? யார் வாணி என்பதை அக்காமாட்சி அம்மாளால் கூட அறிய முடியாது '
'காமாட்சி அம்மாள் யார் ?
'தீவில் தெய்வானையுடனும் கைலாசத்துடனும் வாழ்கின்ற பெண்மணி. அவர்களைப் பெற்றவள்
'அப்படியா ? ' மாறனும், வாணியும், ஒருமித்துக் குரலெழுப்பினார்கள் '
'ஏன் ? உங்களுக்கு முன்பே அவரைத்தெரியுமா ?
'எங்களுக்குத் தெரிந்த ஒருபெண்மணி.. ' இருவரும் மீண்டும் ஏகோபித்த குரலில் சொல்லவாரம்பிக்க, நிலைமையைப் புரிந்துகொண்ட வாணி, '
நீங்களே கூறி முடியுங்கள் ' மாறனிடம் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்
' ஆம்.. வாணியைப் பார்ப்பதெற்கென்று வயதான பெண்மணி ஒருவள் அருகிலுள்ள தொண்டமானத்தம் கிராமத்திலிருந்து வருவாள். மிகவும் பிரியமாக இருப்பாள். அவள் பெயரும் காமாட்சியே. '
'.... '
தொடரும்.....

No comments:
Post a Comment